Sunday, April 25, 2010

மழைக்கால சுவடுகள் - I

புகைமூட்டமாய் விடிகிற பொழுது
என் மனதுக்குள்ளும்

ஆயிரஞ்சிறு சூரியன்கள்
வட்டமாய் உதிக்கிற
அக்குடிசைக்குள்
இன்று மழை

காட்சிகளை
விரிவாக்காத என் வீட்டுச்சன்னல்
என் பார்வைக்குள்ளும்
புகை மூட்டம்

தரையை
துளைத்து விடுகிற கோபத்துடன்
வானம் சரம் சரமாய்
ஊற்றிக் கொண்டிருக்கிறது

ஓடை
குடிசைச்சுவரின் முதுகிறங்கி
நதியாய் பெருகுகிறது

மிதக்கப் போகும்
வட்டிலிலிட்ட சோற்றுக்கு
வெளியோடும் நீரில்
விளையாடுவதை
தடுத்தழைக்கும் குரல்

கிழிந்த தலைத்துணி
இழுத்துச் சிரித்து கொள்ளும்
அவ்விருவர்
அக்குடிசை வாயிலில்

சன்னல் மறைக்க
என் வீட்டு கண்ணாடியிலும் நீர் மூட்டம்

தோள்தொட்டு என் சிறுமகள்
தந்த காப்பி
வாங்கத் திரும்பினேன்
நீர்மூட்டம் உறைய

- 31/02/91

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer