Showing posts with label Bharath Engineering College. Show all posts
Showing posts with label Bharath Engineering College. Show all posts

Monday, May 2, 2011

ஓடிப் பெற்ற பரிசு


பாரத் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன். முன்பே பதிந்திருப்பது போல, கல்லூரியின் இசைக்குழுவில் நான் தான் தபலா, த்ரிபல் காங்கோஸ் வாசிப்பவன். 

மிக கடுமையாக குழுவும் நானும் பயிற்சி செய்து (அதி முக்கிய காரணம், கல்லூரி முதல்வர் எங்களுக்கெல்லாம் அளித்திருந்த சிறப்பு சலுகைகள்) முதல் வருடம் தயாராகி, கல்லூரிக்குள்ளேயே வாசித்து பெயர் வாங்கி (அதுவும் சும்மா வந்து விடவில்லை, நியூ இயர் ஈவ் என்ற பெயரில் மூன்றரை மணி வாசித்து செத்து சுண்ணாம்பாகி விட்டோம் - யோசித்து பாருங்கள், கமல் நடித்து , ராஜா இசைஅமைத்து, மனோ பாடிய, கடினமான, நில்லாத தாளம் கொண்ட 'வேதாளம் வந்திருக்குது' பாடலை ஒன்ஸ் மோர் கேட்டே (நாலு தடவை) கொன்று விட்டார்கள் நண்பர் நண்பிகள்), அடுத்த வருடம் கூட்டை விட்டு ஒன்றிரண்டு அடியெடுத்து அக்கம் பக்கத்து கிளைகளுக்கு தாவிப் பழகும் குஞ்சுகள் போல், கல்லூரி அருகிருந்த மற்ற கல்லூரி கலை விழா லைட் மியூசிக் போட்டிகளுக்கு செல்லவாரம்பித்த சமயம்.

சில பல போட்டிகளில் இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, சில சமயம் MCC யோ, லயோலாவோ வராத சில மொக்கை போட்டிகளில் முதல் பரிசு அடித்து நாளொரு மேடையும், பொழுதொரு பரிசுமாக வளர்ந்து கொண்டிருந்தோம்.  அப்போதுதான் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி கலை விழாவின் மெல்லிசை போட்டிக்கு அழைக்கப்பட்டோம். 

அப்பொழுதான் மூர் மார்கட் இடிக்கப்பட்டு, இப்பொழுதிருக்கும் புது சென்ட்ரல் புறநகர் போக்குவரத்து ரயில் நிலையம் கட்டும் பணிகள் அந்த இடத்தில் துவங்கியிருந்தது. சுற்றிலும் சாப்பாட்டு கடைகள், வைன் ஷாப்கள் என களைகட்டியிருக்கும் இடத்தை தாண்டிதான் பார்க் ஸ்டேஷனிலிருந்து கால்நடை மருத்துவ கல்லூரிக்கு சென்றோம். எடுக்கப்பட்ட லாட்டில், பாரத் கல்லூரி ஆறாவது இடமாகத்தான் மேடைக்கு அழைக்கப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு (ஒரு குழுவுக்கு கருவிகள் செட் செய்ய ஐந்து நிமிடம், மூன்று பாடல்கள் வாசிக்க பதினைந்து நிமிடங்கள் என மொத்தம் இருபது நிமிடங்கள்) இன்னும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும் போலிருந்தது. 

அரங்கின் வெளியே அமர்ந்து மீண்டும் பாடவிருந்த 1. சிங்கார பெண்ணொருத்தி 2. மன்றம் வந்த தென்றலுக்கு மற்றும் 3. பொன் மானை தேடுதே என்ற பாடல்களின் இடையிசை மற்றும் தாளங்கள், ஸ்டார்ட் - ஸ்டாப் டைமிங் போன்றவற்றை சரிபார்த்து கொண்டிருந்தோம். அப்போதுதான், குழுவின் கீபோர்ட் வாசிப்பாளன் அருண் நினைவூட்டினான், "மச்சிஸ், வர்ற வழியில பாத்தோமே வைன் ஷாப், போயி ஒரு பியர் வுட்டுட்டு வந்து ஸ்டேஜ் ஏறினோம்னா, கலக்குண்டா" என்று. 

சூப்பர் ஐடியா என்று உடனே, பியர் அடிக்காத ட்ரம்ஸ் வனமாலி, வயலின் பிரபாகர் ஆகியோரை விட்டுவிட்டு (நல்ல வேலை,  எங்கள் கோச் எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் லெக்சரர் சுரேஷ் பாஸ்கர் அன்று வரவில்லை) உடனடியாக கிளம்பி விட்டோம் ஒரு ஆறு பேர். அப்போது மதியம் மூன்றரை மணியிருக்கும்.

போய் பாட்டில்களை வாங்கி கொண்டு பார்த்தால் தான் தெரிந்தது, அமர்ந்து குடிப்பதற்கு  ஒரு இடமோ கடையோ கூட இல்லை (இந்தக் காலம் போல் அரசுகள் டாஸ்மாக் கொண்டு வராத காலம்). சரிதான், மூர் மார்க்கட் உடைக்கப்பட்டு கிடந்த இடம்தான் தோது என்று, சுற்றிலும் கம்பி வேலி போட்டிருந்த காலி மனைக்குள் குனிந்து வளைந்து நுழைந்தாகி விட்டது.  பல்லாலேயே கடித்து மூடி கழற்றி சியர்ஸ் சொல்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எதிரே பிசியான ரோடு. பக்கத்தில் சென்ட்ரல் ஸ்டேஷன். நடுவே கிடந்த காலி மைதானத்தில் ஆறு பேர் நட்ட நடுவே நின்று கொண்டு மட்ட மதியானத்தில் பியர் அருந்திக் கொண்டிருந்தோம்.

திடீரென்று லீட் கிடார் வினு கத்தினான், "மச்சி, போலிஸ்டா". அவ்வளவுதான், சுற்றி பார்த்தால் ஒரு நான்கைந்து காவலர்கள் லத்திகளை சுழற்றி கொண்டு நாலா பக்கத்திலிருந்தும் ஓடி வருகிறார்கள். பாட்டில்களை போட்டு விட்டு தாவி குதித்து எந்த பக்கம் ஓடினாலும் அங்கிருந்து ஒரு PC வர, செத்தோம் இன்னைக்கு என்ற படி, "ஓடு மச்சி ஓடு, மாட்டிக்காத" என்று ஒரே கூக்குரல்.

குனிந்து வளைந்து பதவிசாக நுழைந்த கம்பி வேலிக்குமேல் ஒரே ஜம்ப். ரோட்டில் விழுந்து, வாரி சுருட்டி எழுந்து, ரிப்பன் பில்டிங் பக்கத்தில் இருக்கும் மெயின் ரோடுக்குள் நுழைந்து ஆறு பேரும் தாறு மாறாக ஓடினோம். சத்தியமாக சொல்கிறேன், உண்மையிலேயே அந்தக் காவலர்கள் மாசக் கடைசிக் கஷ்டத்தில் இருந்தார்களா, அல்லது கடமை தவறாத உத்தமர்களா தெரியாது, அவர்களும் அப்படித் தாவி குதித்து துரத்தினார்கள்.  யாரவது பார்த்திருந்தால், ஏதோ பயங்கர கொலை குற்றம் செய்து விட்டு ஓடுகிற கூட்டத்தை தான் இப்படி துரத்துகிறார்கள் போலிருக்கிறது என்று நினைக்கும் வண்ணம் ஒரு ஆவேசத் துரத்தல். 

கால்நடை கல்லூரிக்கு கால் வழி மிச்சமிருக்கும்போது, பக்கத்திலிருந்த டீக்கடைக்குள் நுழைந்து மூச்சு வாங்கி லேசாக வெளியே எட்டிப் பார்த்தால் யாரும் துரத்தி வருகிற மாதிரி தெரியவில்லை. போன ஆறு பேரில் நான்கு பேர் தான் கடைக்குள் இருந்தோம். போச்சு, ரெண்டு பேர் மாட்டிக்கிட்டாங்க போல, இன்னிக்கு காம்பெடிஷன் காலி என்றபடி நொந்தவாறு கலூரிக்கு திரும்பினோம். 

மிச்சமிருந்த டீமோடு உட்கார்ந்திருந்தார்கள் அவ்விருவரும். கொஞ்ச நேரம் மூச்சு வாங்கி, தண்ணீர் குடித்து, டி குடித்து, சிகரட் புகைத்த பிறகு சிரித்த சிரிப்பிருக்கிறதே, இப்போதும் மறக்க முடியாத தருணம். 

வேர்த்து விறுவிறுத்து, சட்டை அங்கங்கே கிழிந்து அழுக்காக, அன்று வாசித்த அற்புதப் பாடல்கள் எங்களுக்கு முதல் பரிசை வென்று தந்தன.

Sunday, August 29, 2010

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 2

உத்தமபாளையம்
17 /08 /89

பேரன்புள்ள நண்பா,

நலம், நலமறிய ஆவல்.

மிக்க அவசரத்தில் வந்ததால் உன்னிடம் சொல்லிக் கொள்ள முடியவில்லை. உன்னை பலதடவை இவ்வாறே வருத்த நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்.

நான் இங்கு திங்கட் கிழமை காலை வந்தேன். மிகவும் தட்பமான சூழ்நிலை. நம் மனப் போக்கையும் விஞ்சும் வண்ணம் வினாடிக்கு விநாடி மனதை மாற்றி, தூறலாய் புன்னகைத்தும், மழையாய் காமம் காட்டியும் காதல் செய்யும் பூமிக்கும் வானத்திற்கும் நடுவே, கள்ளங்கபடமற்ற மக்களுடனும், கால்நடைகளுடனும், கால்வாயுடனும்.



என் சொந்த தேசத்தில் ஒரு விருந்தினனாய், ஒரு பூ மௌன அமைதியுடனும், சுகத்துடனும் காலத்தை களித்து கழித்துக் கொண்டிருக்கிறேன்.

இன்று மதியத்தில் அருகிலிருந்த சுருளி அருவிக்குச் சென்றிருந்தோம். அதன் பெருமையை என்னென்று சொல்ல. மென்மையான தூறலின் போது அருவியில் குளிப்பதென்பது தேவ சுகம் நண்பா! அந்த நீரின் வேகத்தை எதிர்த்து பலம் காத்தும் போதும், தோற்றுத் துவண்டு வெளிவரும் போதும், வந்த பின் அருகில் மென்மையாய் விழுந்து கொண்டிருக்கும் சின்ன வீழ்ச்சியின் மௌனத் தடவலில் மயங்கி நிற்பதும்...

என் மனத் தேவைகளை உடம்பு தீர்த்துக் கொண்டு கர்வப்படுகிறதே! இவையனைத்தும் என் சொந்த தேசத்து சொர்க்கங்கள் எனத் தெரிய வரும்போது... சரவணா! நான் மிக்க தலைக்கனம் பிடித்தவனோ? இருக்கலாம் நண்பா! எனினும் என் சோகங்களை பகிர்ந்து கொண்ட நீ என் சுகங்களையும் சுகிக்க வேண்டாவா?

நல்லது நண்பா! தற்போது உன் கல்வி, கவிதை, கலை, காதல், கனவுகள் ஆகியனவெல்லாம் எப்படி இருக்கின்றன? உனது கவிதைத் தொகுப்புக்கு நிச்சயமாக ஒரு நல்ல முன்னுரையை, கூடிய விரைவில் எழுதி அனுப்புகிறேன். தம்பி கார்த்தி எப்படி படிக்கிறான்? அப்பா, அம்மா எப்படி இருக்கிறார்கள்? நண்பர் ஹரி எப்படி இருக்கிறார்? இவர்கள் அனைவருக்கும் என் அன்பையும் நல விசாரிப்பையும் தெரிவி. மற்றபடி உனது மற்றும் நமது நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? அனைவருக்கும் என் அன்பைத் தெரிவி.

'மெர்க்குரிப் பூக்கள்' படித்தேன். பாலகுமாரன் தன்னை ஒரு பெண் வயப்பட்ட கபடதாரி என்பதை நிரூபித்துவிட்டான். நேரில் பேசலாம். முழுக்க முழுக்க நமக்கு ஒத்து வராத பாத்திரப் படைப்புகள் . நேரில் பேசலாம் . இனிமேல் யாராவது (எவளாவது) பாலகுமாரனைப் பற்றி பெருமையாகப் பேசினால் சும்மா விடாதே .

வேறு விசேஷமில்லை .

அன்புடன்,
ரமேஷ் சண்முகம்

Sunday, August 22, 2010

நண்பனின் கடிதங்கள்

ரமேஷ் சண்முகம் –


என் கல்லூரிக்காலம் தொடங்கி இன்றும் தொடரும் சகம்.

சுயம் நேசிக்கக் கற்றுத் தந்தவன்.
கவிதையும் இலக்கியமும்
'பாலின் தெளி நீராய்' பகுத்தாய வகுத்தவன்.
நடுவே நிலைகொண்டிருக்கும்
காலமும் இடமும்
கவிதைகள் கடிதங்கள் வழியே
கடந்து சென்ற பற்பல நினைவுகளில் இருந்து...


 
கடிதம் - 1

04 /11 /1989

பிரிய சரவணா,

உன் கடிதம் கிடைத்தது. எதிர்பார்த்திருந்த ஓர் ஆனந்தத்தின் கொந்தளிப்பை கொஞ்சம் அதிகமாகவே அனுபவித்தேன். மிக்க நன்றி. 'எதற்கடா மடையா? இதற்குப் போய் நன்றி?' என்கிறாயா? நிஜ நேச பரிமாறலுக்கு விலை மதிப்பதோ அன்றி சம்பிரதாய பாராட்டல்களோ ஏற்புடையதன்று எனினும், ஏமாற்றத் தொடர்வுகளின் மத்தியில் எதிர்பார்த்த நிஜம் தொட, நண்பா! என் ஜீவா சிலிர்ப்பின் வெளிப்பாடு இதில் மட்டுமே சாத்தியமாகிறது. மிக்க நன்றி, நண்பா! நன்றி.


உன் கவிதை படித்தேன். நீ சொல்ல விழைந்த அத்தனை குழப்பங்களும் தெளிவாய் புரிந்தது. இக்குழப்பம் நம் கொள்கைகளின் முரண். ஆனால் யதார்த்தத்தின் நிர்ப்பந்தம். நாம் இருவருமே இதன் கைதிகள். நம் சிந்தனையின் வேகத்திற்குச் சூழல் பயணிக்க இயலாது; அன்றி விழையாதிருக்கலாம். இதற்குத் தீர்வுகளாய் நான் கருதுவது, நம் சிந்தனையின் வேகத்தை கட்டுப்படுத்துவது அல்லது சூழலை நம் வேகத்திற்கு பயணிக்கச் செய்வது. இரண்டுமல்லையேல் சூழலை மறுத்து நம் சிந்தனையின் வேகத்தில் பறப்பது. இதில் முதலாவது தீர்வு முற்றிலும் அசாத்தியம். இரண்டாவது மிகவும் கடினம் மற்றும் வெகுபல காரணிகளை பொறுத்தது. மூன்றாவது, நான் மிகவும் விரும்புவது (நீயும் விரும்பலாம்). இதன் சாத்தியக் கூறுகளை நாம் தெளிவாக பகுத்தாய்ந்து விவாதிக்க வேண்டும். அதை நேரில் செய்யலாம்.

இவ்விடம் என் வாழ்க்கை மிகச் சுலபமாக இருக்கிறது. சரவணா! யாருக்கும் கட்டுப்பட வேண்டாத சூழல். அப்பா அம்மாவின் அருகண்மை. சுலபமான உறவுகள். புரிய முற்படாத, (அதனால் தவறான புரிவுகளுக்குச் சந்தர்ப்பமில்லாத) நம்மை நாமாகவே பார்க்கிற நண்பர்கள். அவர்களுடனான அளவளாவுதல்கள். மரங்களடர்ந்து இருள் கவிந்து கிடக்கும் ஊருக்கு வெளியே போகும் சாலைகளில், சாரல் சப்தத்தூடே மாட்டு வண்டிகளும், கதிரறுத்துக் களைத்தும் சலசலத்து வரும் நாட்டுப்புறப் பெண்களும்,புதிய உற்சாகத்துடன் கிளர்ந்து வர, நண்பா! இந்த இயற்கைக்கு எப்படி நன்றி பயப்பது, என் நிஜத் தோழர்களுக்கு இந்த நிஜத்தை எப்போது பரிசளிப்பது? என் காதலிக்கு இதை பரிசமாய் கொடுப்பது எப்போது?

இயற்கையின் வினோதங்கள் என்னை ஏளனமாய் பார்க்கிறது. நானோ பிரமிப்பில் சக மனிதர்களை ஏளனமாய்ப் பார்க்கிறேன்.

இக்குளிரும் பணியும் எத்தனைக் காலம்? குளிர் தாண்டி கோடை வருமே? கோடை போக குளிர் வருமே? எது நித்தியம்? இது எல்லாமே நித்தியந்தான். இச்சுழற்சி நிச்சயம். சுழல்வுடன் நாமும் சுழல நம் இருப்பும் நித்தியம். இக்கணம் இதோடு சாவதாயினும் அடுத்த கணம் இல்லாமல் போகாது.

நாளை என்பது இன்றின் கர்ப்பம். இன்று - நேற்றின் சமாதி. நாளை மற்றுமொரு இன்றே. இதில் நித்தியமில்லை என்று சொல்ல முடியாது. It is not transient , but periodic . so is our life . வாழ்வை ஒவ்வொரு கட்டமாய் கடந்து போவோம். காலத்துடன் நாமும் போக, கட்டங் கட்டமாய் களித்துச் சிலிர்த்து கால முடிவில் காத்திராமல் காணாமர்ப் போவோம்; காலமாகிப் போவோம்.

ஒவ்வொரு விஷயமும் ஏதாவது மற்றொரு விஷயத்தை பொறுத்தே வரையறுக்கப் படுகிறது. இத் தொடர்பின் புரிதலே வாழ்க்கையை ஜெயித்தல். வாழ்வும் இவ்விதமே. சமூகம் என்று நம்மை பெரும்பாடு படுத்தும் காரணியின் அதிமூலம் இதுவே. நமது வாழ்வு; வாழ்வின் ஒவ்வொரு செய்கையும் சமூகம் என்ற பிற ஒரு காரணியை பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. இதைப் புரிந்து ஜெயிக்க முற்படுகையில் சாதாரண மனிதம் தென்படுகிறது. இதைப் புரிந்து பொருட்படுத்தாமல் போகையில் நம் சிந்தனை ஜெயிக்கிறது.

எங்கோ ஆரம்பித்து வேறெங்கோ போய் விட்டேன் போல் படுகிறதா? நண்பா, இல்லை நம் நித்தியத் தேடலில் சற்றாழமாய் சிந்தித்து விட்டேன். நீயும் சிந்தியேன். சிந்திப்பாய் - நான் சொல்லா விட்டாலும்.

மற்றபடி, க.நா.சு. கட்டுரைகள் கொஞ்சம் சுவையாகவும் கொஞ்சம் வரண்டதாகவும் இருக்கிறது. மேலும் நண்பர்களுடன் ஊர் சுற்றி அரட்டை அடிக்கவே நேரமில்லாதிருப்பதால் அதைச் சரியாகப் படிக்க முடியவில்லை. சென்ற வாரம் கமல் ஹாசனின் "மய்யம்" வார இதழ் படித்தேன். அதில் ஒரு கவிதை. ரொம்ப ரொம்ப டாப் மாப்பிளே. எழுதுன கம்மனாட்டி யார் தெரியுமா? கமலேதான். அப்படியே பிரம்மராஜன் ஞானக்கூத்தன் trend . அசந்துட்டேன் மாப்பிளே. வாரா வாரம் எழுதுறானாம். ரொம்ப டாப். படிச்சு பார். நாம குமுதத்துக்கு எழுதலாம்னு நெனச்ச கடித்தத இவனுக்கே எழுதலாம் போல இருக்கு. நேரில் பேசலாம் நெறைய.

தம்பியை கொஞ்சம் நன்றாக படிக்கச் சொல். அறிவாளிக்கு அனுபவ அறிவைவிட கேள்வி அறிவே ரொம்பப் பயன் தரும். அவனிடம் நிறையப் பேசு. ஒரு வழிக்குக் கொண்டு வா. இது ரொம்ப ரொம்ப மோசமான stage . பையனை உருப்படி தேற்று.

இங்கு ஜெகன், பகவதி இருவருமே இல்லை. ஜெகன் மெட்ராசுக்கு வந்து விட்டான். பகவதி மதுரைக்கு போய்விட்டான். நான் மட்டும் உள்ளுக்குள் - தனியனாய். என் உலகம் நினைப்பதை ஒரு நிர்பந்தத்தில் மறுத்து, இவ்வுலகம் பார்த்துச் சிரித்து அதனூடேயே மிகச் சுலபமாய், சில சமயம் சுவராசியமாயும், சில சமயம் கட்டாயத்திற்காயும் வாழ்ந்து வருகிறேன். இரண்டு மூன்று கவிதைகள் எழுதினேன்.

பொழுது போகிறது. பொழுதுடனே நானும் போகிறேன்.

மற்றபடி நண்பர் ஹரி, கார்த்தி, விஜி, அப்பா, அம்மா ஆகியோருக்கு என் அன்பைத் தெரிவி. நான் convocation இக்கு முதல் இரு தினங்களில் சென்னை வந்துவிட்டு உடனடியாக திரும்பி விடுவேன். மற்றபடி வேறு விசேஷமில்லை.

உடனடியாக பதில் போட்டால் மகிழ்வேன்.

அன்புடன்,
ரமேஷ்

Pandit Venkatesh Kumar and Raag Hameer