நீண்ட நாளாகிறது
ஒரு கொலை செய்து
உணர்ச்சிகளை சீண்டும் ஒரு கொலை
பவர்பாய்ன்ட்களின் தேர்ந்தெடுத்த
வார்த்தைகளில்
சதுரங்க விளையாட்டு
குளிர் அறைகளுள் நாளெல்லாம்
முகக் குறிப்புகள் நோக்கியே
கவனம் குவித்த வினைகள்
மனிதம் தாண்டிய யத்தனங்கள்
ஆயினும்
வெவ்வேறு திசையிழு உறவுகள்
ஒரு கொலை அனைத்தையும்
சமன்படுத்தி விடும்
என நம்ப இடமிருக்கிறது
இதற்குமுன்
இழந்தவை
சரிவர நிகழ்த்தாத
கொலைகளால் என
நம்பவும் இடமிருக்கிறது
மீண்டும் உணர்வுகள்
மீதூறும் வரை
மொழியின் கையறு நிலையில்
வானளக்கும் சாகசங்கள்
பொருளியல் முன்னேற்றங்கள்
ஒவ்வொரு வினைக்கும்
ஒரெதிர் வினையுண்டு என்பது
ஒன்றை இழந்தே
ஒன்றைப் பெறலாகும்
என்பதன் சரிநிகர்
என்று உணர்ந்ததும்
சரியே நிகழ்ந்த
கொலை வரலாறுகள் வழியே
எனவே
நெடுங்கால வளர்ச்சி முன்னோட்டங்களை
அடையக்கூடிய
குறுகியகால திட்டங்களாக
பகுத்து
பல்வகை கொலைகளைத்
திட்டமிடுங்கள்
ஏனெனில்
இப்பொழுது நீங்கள்
அறிவீர்கள்
வளர்ச்சியும் மரணமும்
ஒரு பாதையின்
இரு புறங்கள்