Saturday, July 3, 2010

மனிதம்

ர்ப்பரித்து
அடங்காதெழுந்தலையும்
சர்ப்பம்
மண்ணுக்குள் எப்போது
தன் படம் புதைக்கும்

இரவெப்போதும்
உறங்காமல்
ருசியற்ற பிளந்த நாவுகளை
கடைவாயோரம் தீட்டிக்கொள்வது
என்று ஓயும்

உதிர்ந்து சரியும்
இலைத் துணுக்குகளையும்
உடலசையாமல் தலைசுழற்றி
தன்னிருப்பின் எதிர்ப்பென
சீறும்

இறந்து கிடக்கும்
தான் உண்ணா
மிருகங்களின் மேலும்
வேறேதும் தேடி
சலனமின்றி நெளிந்து நகரும்

மிக அழகிய
செதில்களிலான கருநிற
வளைவுகளை
தானே உற்றுப்பார்த்தபடி
கண்கள் மின்ன
பகலிலும் இரவிலும்
பொழுதுகளின் ஓரங்கமென
ஒளியில் ஒளியென
நிழலில் இருளென
கலந்து மறையும்
நளினம்
இரையை விழுங்கும்போது
மாற்றுரு கொள்ளும்

தன் மணம் விளங்கும்
எல்லை குறித்த
அச்சம்
என்றும் விலகாதபோது
ஓயாது உறங்காது
நகர்ந்தே கழிக்கவேண்டிய
அவலம்
வால் சூழலிலும்
வளைமுறுக்கிலும்
தோன்றும்

எந்த இரவின்
துயர்ச்சூழலில்
தன் தோலை
தானே கழற்றுமது

Pandit Venkatesh Kumar and Raag Hameer