Sunday, April 11, 2010

காலை

சூம்பிப்போன
ஆப்பிள்காரிகளின்
கொழுகொழு குழந்தைகள்
நடைபாதையில்
ஒண்ணுக்கிருக்கும்
நைந்து போன
கிழவியொருத்தி
அவளைவிடவும்
அழுக்கான பழம் விற்பாள்
நிச்சயமாக
இன்றோ நாளையோ
இறந்துவிட வேண்டியிருந்தும்
விரல்களற்ற கையினால்
பீடிபுகைக்கும் கிழவன்

தடதடத்து விரையும்
மின்வண்டியின் தாளம்
சேராத லயத்துடன்
தோள்துண்டு
நெற்றியின் சந்தனப்பொட்டுடன்
குழல் வாசிக்கும்
என்றோ
உயர்விலிருந்த வித்தகன்

காதலிகளுக்காக
சிகரட் புகைத்து
நகம் கடித்துக் காத்திருக்கும்
இளைஞர்கள்
அவர்களை
ஆர்வத்துடன் நோட்டம் விடும்
பெண்கள்

படிப்பதாய் பாவனை செய்யும்
பாதி நேரம் கூட்டம் மேயும்
பெரிசுகள்
நீட்டிய கையில்
டிக்கட் தரவேபடாத
பரிசோதகர்

'வேர்க்கடலெய், இஞ்சி மொரப்பா,
சீப்பு, பொம்மை, சீசன், பஸ்பாஸ்
ரேஷன் கார்டு கவர்'
சத்தம் கடந்து போனால்
'இயேசு விரைவில் வருகிறார்'

எதற்கென்றே தெரியாமல்
எப்போதும் இருக்கும்
பத்துப் பதினைந்து பேரோடு
மூலையில்
மூடிவைக்கப் பட்டிருக்கும்
போன ரயிலில்
அடிபட்டு ஈமொய்க்கும்
(அவன், அவள்)
அது

20 /10 / 93

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer