Showing posts with label Blog of Jeyamohan. Show all posts
Showing posts with label Blog of Jeyamohan. Show all posts

Sunday, January 26, 2014

வெண்முரசு - 'நோக்கங்களின்' தகுதிகள்

“ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….”

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

வெண்முரசு படிக்கும்தோறும் விரிந்து வருகிறது. மகாபாரதக் கதையை முழுமையாக அறிந்திருக்க வேண்டியவர்கள் இந்தியர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மானுட பிறவியுமே.

தத்துவ விளக்கங்கள், அறநெறிகள், உளச் சிக்கல்கள், ஆண் பெண் உறவுகளின் வெவ்வேறு படி நிலைகளில் அவரவர் கடமைகள் - என இக்காவியத்தில் இல்லாதது என்ன இருந்து விட முடியும்?

நடையழகும் மொழிச்சுவையும் கூறலின் அடர்த்தியும் முன்பின்னாக கிளைக்கதைகளை இணைக்கும் நேர்த்தியும் மனதை ஏதோ செய்கிறது. இந்தியனாகவும், தமிழ் அறிந்தவனாகவும், ஜெயமோகனை படிப்பவனாகவும் இத்தொடர் என் மன எழுச்சியையும் பெருமிதத்தையும் ஒவ்வொரு நாளும் தொட்டுத் திரும்புகிறது.

“ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….”

இவ்வரியை சிந்திக்காத நாளேயில்லை.

ஞானம் அடைதல்; ஞானம் சித்தித்தது என அதை ஒரு பெறுபொருளாக, வெளியிருந்து உட்சேரும் கூறாக எண்ணி வந்ததற்கெல்லாம் மாறாக, அனைவருக்குள்ளும் எப்போதும் இருந்து கொண்டிருக்குமொன்றெ அது; பல்வேறு மாயைகளும் அறியாமைகளும் இன்ன பிறவும் களைகையில் மிஞ்சுவதே என்ற கருதுகோள் என்னை பொறுத்த மட்டில் ஒரு பெரிய திறப்பு.

இத்தனை லௌகீக இடையூறுகளுக்கிடையேயும் மேலும் மென்மேலும் இவ்வரியின் உட்சென்று சிந்திக்க உங்கள் வெண்முரசு ஓர் உந்துசக்தி.

பத்து வருடங்கள்! தினமும்!
இது ஒரு வேள்வி.

தானறிந்ததை தன்னை ஈர்த்ததை தான் கூற முடிவதை தன்னை உருக்கித் தருவதென்பது நான் கண்டிராத ஒன்று.

இதற்குள் என்ன சுயலாபம் இருந்து விட முடியும்? பிர்தௌஸ் கேட்டது போல் என்ன 'நோக்கம்' இருந்து விட முடியும்?

அந்த 'நோக்கம்' கேள்வியும், இன்றைய தமிழ் பொதுச் சிந்தனையில் எழுப்பப் படப் போகும் உள்ளர்த்தங்களும் எதிர் பார்க்ககூடியவையே என்றாலும் மிகக் குரூரமாக, வக்ரமாக உணர்ந்தேன்.

எத்தகைய உழைப்பு!

காலை சிங்கப்பூரில் 7 மணிக்கு படிக்க முடிகிறதென்றால் இந்தியாவில் 4.30 மணிக்கு பதிவேற்றப் பட வேண்டும். கேள்வி கேட்பவர்கள் இது போன்றதொரு அர்ப்பணிப்போடு ஏதேனுமொன்றை படைத்து விட்டு கேட்கும் தகுதியுடன் கேட்கலாம் என்ற சுய உணர்வு இருக்காதா?

அது போன்ற 'நோக்க' கேள்விகளுக்கு நீங்கள் மீண்டும் மீண்டும் பதிலளிக்கத்தான் வேண்டுமா?

சரி, அப்படியே இந்தப் படைப்புக்குப் பின் உங்களுக்கு ஓர் இந்துத்துவ நோக்கம் (கேட்பவர்களின் நோக்கங்களோடு முரண்படுவதாக இருந்தாலும் - மகாபாரத காவியத்தை இந்து காவியம் எனல் எவ்வளவு முட்டாள்தனமாக பாமரத்தனமாக இருப்பினும்), இருந்தால்தான் என்ன தவறு?

ஒரு படைப்பாளன் தான் விரும்பும், நம்பும் ஒரு கொள்கைக்காக தன் படைப்பூக்கத்தின் உச்சத்தில் விளம்பரம் விழையாமல், இயக்க சார்பும் ஆதரவுமில்லாமல், வருவாயின் வழியாக இவ்வெழுத்தை எண்ணாமல், இந்த படைப்பும் உழைப்பும் தருவதென்றால், அந்தக் கொள்கையும் அந்த அர்ப்பணிப்பும் அழியா அர்த்தம் பெறுகிறதல்லவா?

உங்கள் நோக்கங்களை சந்தேகிப்பதற்குமுன் அவரவர் நம்பும் நோக்கங்களுக்காக வருடக் கணக்கில் உழைப்பை செலுத்தி விட்டு உங்களை கேட்பதே முறையல்லவா?

உள்நோக்கங்கள் நிறைந்த, கையாலாகாத, தகுதிகளற்ற வினைகளை புறந்தள்ளி விட்டு, தயவுசெய்து உங்கள் நேரத்தையும் திறனையும் இம்மாகாவியத்தை வடிப்பதில் செலுத்துங்கள்.

மற்றபடி, புரிதலுக்காக அவ்வப்போது நீங்கள் விடையிறுப்பது சரியே எனினும், கூறியது கூறல் வேண்டுமா?

உங்கள் முயற்சியின் உன்னதம் வெற்றியடைய வாழ்த்தும்,

சரவணன்

Pandit Venkatesh Kumar and Raag Hameer