Showing posts with label Darkness. Show all posts
Showing posts with label Darkness. Show all posts

Sunday, November 15, 2009

நகரம்

குளிரூட்டியை காரணமாக்கி கதவையும் சன்னல்களையும் இறுக்கி அடைத்து படுத்திருந்த போடும் உறக்கம் வரவில்லை அன்றொரு நாள். யோசித்து கொண்டே இருந்தேன். அறையினுள் இருள் கண்களுக்கு பழகிய பின் தான் தோன்றியது இரவின் இருள் இருளாக இல்லை என்று.


சிறு வயதில் விளையாடி முடித்து வீடு திரும்பி கை கால் கழுவி உணவருந்தி தாயிடம் கதை கேட்டு பாய் விரித்து படுத்தவுடன் தாய் விளக்கை அணைத்ததும், அந்த எளிய சிறிய அறைக்குள் வந்து பரவும் இருளின் வெம்மையை என்னால் இன்றும் கண் மூடி நினைவுக்குள் சேகரிக்க முடிகிறது. கண்களை அழுத்தும் அசதிக்கு கூடுதல் சக்தி தந்தது அந்த இருட்டு.

விளையாட வெளியே தெரிவில் சென்றாலும் குழல் விளக்குகளின் அடியிற் தவிர எங்கெங்கும் இருள் காத்திருக்கும், பற்பல கதைகளும் ஆட்டங்களும் அச்சங்களும் மறைத்து வைத்தபடி.

முழுபரிட்சை (ஆண்டிறுதி தேர்வு) விடுமுறைகளில் பாட்டனின் கிராமத்திற்கு சென்ற நினைவுகளிலும் இருளின் ஆதிக்கம். சுற்றிலும் வயல்கள் மணம் பரப்ப அச்சத்திற்கு நடுவே இருந்த பாட்டனின் வீட்டு முற்றப் பரப்பில் தான் படுக்கை. உணவுக்கு பின் ஒரு கதை, வறுத்த கொள்ளோ, கடலையோ கருப்பட்டி கடுங்காப்பியுடன் முடித்ததும் விளக்கணைத்து வானம் பார்த்து படுத்தால்....

திடீரென்று ஒரு மாபெரும் சாளரமே திறந்துகொண்டார் போலிருக்கும். கோடி கோடிக்கணக்கான விண்மீன்கள் நம்மைப் பார்த்து கதை பேசி படுத்திருக்கும் அந்த வெளியில் நம்மை சுற்றி அழுத்திய இருளின் அடர்வை அதன் பின்னர் நகர வாழ்விற்கு நகர்ந்த பின்னர் நான் உணரவில்லை.

நகரமயமாதலின் இன்னபிற அழுத்தங்களினூடே, காதலும் கலவியும் பிடிப்பும் அடர்த்தியுமற்று இருப்பதற்கோர் காரணம், இருளின் அடர்த்தியும் குறைந்ததே என்று நான் சொன்னால் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் தானே?

Pandit Venkatesh Kumar and Raag Hameer