மத்திய ஜாவாவின்
யோக்யகர்த்தா நகரில்
விரைந்து சாயும்
மழைஅந்திகளின்
முன்மாலைப் பொழுது
தொலைவில் எரிந்தடங்கும்
ஒளியின் முன்
விண்ணைத் தீண்டக் கிளம்பும்
மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்
பிரம்பனான் கோவிற்சிகரங்களை
நோக்கிக் கொண்டு
மதுவை அருந்திக் கொண்டிருக்கிறேன்
கருமையும் அடர்த்தியும்
கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே
தெருவின் இரைச்சலைப் பின்விட்டுவிட்டு
விடுதியின் சாளரத்தில்
தனித்து அமர்ந்திருக்கும்
என்னெதிரில் அமர்கிறாள் அவள்
சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள்
உதிர்க்கும் பறவைபோல்
நீவிக்கொள்கிறாள்
இந்தியனா என்கிறாள்
எனக்குத் தெரியும்
இதையும் இதற்கடுத்த
எந்த இரு கேள்விகளையும்
நான் எதிர்பார்க்கலாமென
ஆமோதிக்கும் புன்னகைக்குப்பிறகு
பிரம்பனான் கோவில்வளாகம் பார்த்தேனா
என்று வினவுகிறாள்
மழையின் ஓசை
ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது
பதிலாக
அவள் அருந்த
என்ன வேண்டுமென கேட்கிறேன்
இரு கோப்பைகள்
நிறைந்தும் குறைந்தும்
மழைச்சாரலில் நனைந்த
புன்னகைகள் கடந்தும்
இருவரும் தத்தம்
கோப்பைகளை ஏந்திக்கொண்டு
கவியும் இருளில்
கரைந்து கொண்டிருக்கிறோம்