'மூடு அவுட்டாகி விட்டது; படிப்பதில் நாட்டம் இல்லை' என்று எண்ணிக் கொண்டு வெறுமனே தொலைதூரத்தில் ஜன்னலுக்கு வெளியே வெறித்தவாறு ஒரு சந்தோச சோக போர்வையை என்னைச் சுற்றி போர்த்துக் கொள்வதில் ஓர் இன்பம்; ஒரு ரசிப்பு.
காரணம் சொல்லத் தெரியவில்லை. கேட்கின்ற பாடலின் இடையீடு இசை கூட இமைகள் ஈரப்படுத்துகின்ற நேரமது.
நிர்ப்பந்த குளிர்களிலிருந்து நானென்னை காத்துக்கொள்ள பிரயோகிக்கும் ஓர் ஆயுதமாக அந்தப் போர்வை இருக்கலாமோ?
சூரியனைச் சுற்றி மழைக்கால கருமேகம் மெல்லக் கவிந்து காட்சிகளை இருட்டடிப்பு செய்வது போல, எண்ணங்களை வெறுமைப்படுத்தும் இந்நிலை நானே வேண்டுமென்று ஏற்படுத்துவதா அன்றி அச்சூழ்நிலையின் தன்மை குறித்து எற்பதுகிறதா என்று ஆராயும் தெளிவும் மனநிலையும் வெறுமை நிறையும் அக்கணத்தில் இருப்பதில்லை;
அன்றியும், நான் தெளிவடைந்த பிறகும் இவற்றை சிந்திக்க சமயங்களில் நாட்டமும் நேரமும் இருப்பதில்லை என்பதே உண்மை.
சில கணங்களுக்கு சிந்தனை ஸ்மரணை தப்பியிருக்கும்; எந்தச் சூழ்நிலை இந்த சிந்தனை வெறுமையை ஏற்படுத்துகின்றதோ அதிலிருந்து வெளிக்கிளம்புதல் நன்மை பயக்கும்; ஒரு மாறுதல் பழைய இனிமையை, நடைமுறையை என்னில் உடன் கொணரும் என்றொரு மாயை இருப்பதை நான் மறுக்க முடியாது.
இந்த மாயை தன்னுடைய முழு உரு காட்டும் நேரம் தான், நான் அதுவொரு மாயை; அதனால் நான் பெற்றது எதுவுமில்லை என்றறியும் நேரமாயிருக்கும்.
வெறுமை அகோரமாய், கேட்கும் ஒலிகளும் சோக வெறுமையாய், எண்ணக் கோட்டைகள் சரியும் சத்தங்கள் கூட கேட்காது கணங்கள் ஊமைப்படத்தின் பிம்ப நொடிகளாய் நகர, நான் நின்றேனா அமர்ந்தேனா அன்றி படுத்தேனா என தன்னிலை மறப்பதில் ஆரம்பமாகும் அந்த மாயையின் சொரூபம்.
மாயையின் பிரசன்னம் தோன்றியவுடன் சிந்தனை வெறுமை சிதறும்; வெறுமையின் பின் விளைவுகள் தான் மனத்திரையில் பிசாசுகளாய் உலவிக் கொண்டிருக்கும். அவற்றின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போகும் போதுதான், யாரேனும் என்னைப்பற்றி, என் முகநிலை பற்றி (அகத்தின் அழகு முகத்தில் என்பார்களே) விசாரிக்க, உடனே பின் விளைவுப் பிசாசுகளோ 'பொய் சொல்கிறோம்; தூண்டுகிறோம்' என்ற எண்ணமின்றி கூசாமல், 'ஒன்றுமில்லை' என்று பதிலிறுக்க வைக்கும்.
அவர்கள் அப்படி நகர்ந்ததும், வெற்றிச் சிரிப்புடன் விளைவுப் பிசாசுகள் மீண்டும் கைகட்டி, சிந்தனை மாயைக்கு வழிவிடும். இவையெல்லாம் என் அனுமதியின்றி, என்னைப் பார்வையாளனாக்கிக் கொண்டு எனக்குள்ளே நடைபெறும் நேரம், நொடிகள், நிமிடங்களைத் தாண்டியிருக்கும்.
காலக்குதிரை இழுத்துக் கொண்டோடும் வாழ்க்கை வண்டியின் பாதையில் ஒரு சிறு தூரமாகவே இந்நேரம் இருப்பினும், அந்நேரம்தான் எத்துணை பாதிப்புகளை என்னில் உருவாக்குகிறது?
ஒரு வளரும் ஓவியன் கையிற் கிடைத்த வண்ணங்களை எல்லாம் வேந்திரையிர் கொட்டி கோலம் செய்து அழகு பார்ப்பது போல்.
புதுக்கவிஞன் ஒருவன் தானறிந்த சொற்களையெல்லாம் அழகுடனோ அவலமாகவோ அடுக்கி ரசிப்பது போல்.
நடக்கக் கற்றுக்கொண்ட குழவி தன தளர்நடையில் உலகையே அளந்து விட அங்குமிங்கும் அலைந்து திரிவது போல்.
புதிதாய் பூப்படைந்த பெண்ணை தாய் தடவித் தடவி அகமகிழ்ந்து நெட்டி முறித்து செய்வதறியாது திகைப்பது போல், என் மனம் தனக்குள்ளே அலைகிறது.
நான் அந்நேரம் அதைக் கட்டுபடுத்தி சுயநிலைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டால், எங்கே ஒரு செயற்கையான காரியம் செய்கிறோமோ, மனதின் விடுதலைக்கு துரோகம் இழைக்கிறோமோ எனும் பயமும் உடன் எழும்புகிறது.
ஆகையால்தான் அம்முயற்சியில் இறங்குவதில்லை என்றும் சொல்லிவிடுதல் இயலாது; அது என்னால் முடியுமா என்றவொரு ஐயமும் ஒரு காரணம்.
இவற்றிற்கெல்லாம் இரையாகி, மகிழ்வுமில்லாமல் துன்பமுமில்லாமல் வெறுமையை, சில சமயம் கண்ணீருடனும் ரசித்துக் கொண்டு நின்ற நேரமும் உண்டு.
முன்பு கூறியது போல், அந்நேரத்தின் முடிவில்தான் மாயை உதிக்கும். உதித்ததும் சிந்தனைச் சுழலில் மூழ்கியிருந்த புலன்கள் கரை தட்டும். வெறுமையின் பின்விளைவு பிசாசுகள், மிகவும் சுயாதிகாரத்துடன் 'வெளியே செல், சூழ்நிலை மாற்றம் தேடு' என்று ஆணையிடுவது, நான் தன்னிச்சையாக செய்கிற காரியம் போன்று பிறர்க்கு தோன்றக்கூடும். உடனே என் வாகனத்தை எடுத்துக் கொண்டோ, அன்றி நடந்தோ நான் தனிமையான இடம் என்று கருதும் இடம் வரை வந்து சேர்வேன்.
சமயங்களில் நான் இவ்விடங்களுக்கு வந்து சேரும் வரை வெறுமை என்னை பிணைத்திருப்பதும் நேரும். கிளம்பியவுடன் நன்முறையில் நினைவுடன் அவ்விடம் சென்று அமர்ந்து அதைப்பற்றி சிந்திப்பதும், மாற்ற முயல்வதும் பலமுறை.
இத்தகைய வெறுமையின் பிறப்பிடம் எப்படி, எங்கே, எது என்று ஆராயம் போதுதான் பலவகை கிரியா ஊக்கிகளின் தொடர்பை கண்டேன். பெண்கள், இசை, மணம், கவிதை, துன்பம், அவலம், அதிர்ச்சி.... என்று அவற்றில் தான் எத்துணை வகைகள்!
இவற்றில் ஏதேனுமோன்றோ அன்றி ஒரு சிலவோ சூழ்நிலையின் தன்மைக்குள் என்னை மெதுவே உருமாற்றும். பொதுவாக, இந்த உருமாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் தான் மனம் இருக்கும். அதாவது, எவ்வொரு மாற்றத்திற்கும் உடன்பட்டுவிடக் கூடிய பலவீனம் மனதின் அடித்தளத்தில் தோன்றியிருக்கும் நேரமே, இத்துணை விளைவுகளும் ஏற்படும் நேரம்.
கப்பலின் மேலேயல்லாது, அடித்தளத்தில் ஏற்படும் சிறுபிளவே பெருங்கலத்தை கவிழ்த்தல் போன்று, மனம் பலவீனமாய், வலுவற்றதாய் மாற்றப்பட்டு வெறுமை என்னை ஆக்கிரமிக்க, உதவி புரியும் காரணங்களுள் சில என்னை எப்போதும் ஒட்டிக் கொண்டேயிருக்கும், கர்ணனின் கவச குண்டலன்களைப் போல்.
பெரும்பாலான போதுகளில், நான் என் சுய, சமூக நிர்ப்பந்தங்களுக்காக அவற்றை வெட்டியெறிந்து விட முன்வருவதில்லை. ஆனாலும் அவை என்னை ஆட்கொண்டு ஆளுமை செய்யவும் அனுமதிப்பதில்லை.
எப்போது இந்த வெறுமைகள் நேர்கிறதோ, அப்போதெல்லாம் இவை தங்களின் பலியாடான என்னை பார்த்து சிரிப்பதுதான், நான் படைக்கும் காதல் மொழிகளாகவும், கவிதைகளாகவும், ஓவியங்களாகவும் உருமாற்றம் பெற முடியம்.
சமயங்களில், இந்த கிரியா ஊக்கிகளின் இலாபங்களையும், இலாகிரிகளையும் வேண்டி வெறுமைகளை என்னில் நானே செயற்கையாய் ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்திருக்கிறேன். அம்முயற்சிகளில் பலமுறை நான் தோல்வியையே தழுவினேன் என்பதை வெளிபடுத்துவதில் வெட்கமில்லை.
காதலுக்காகவும், கவிதைக்காகவும் நான் முயன்றும் ஏற்படுத்திக்கொள்ளத் தவறிய வெறுமைகள், காதலையும் கவிதையையும், ஒவ்வொரு பிறப்பின் சாரமாகவுள்ள இயற்கையை பெருமைப்படுத்தினவேயன்றி யாரையும், குறிப்பாக என் சிந்தனையின் சாரத்தையும், வீர்யத்தையும் சிறுமைப்படுத்தவில்லை என்றே கருதுகிறேன்.
ஆனால், சிந்தனை வெறுமையை என் ஆளுமைக்குள் கொணர்ந்து, மாயைகளையும் விளைவுபிசாசுகளையும் பற்றிக் கவலையின்றி நான் சில சமயம் படைத்த பரிமாணங்களில், முத்தின் வனப்பும், வைரத்தின் வன்மையும், தங்கத்தின் தன்மையும் இல்லாமலில்லை.
என் போன்றோரைத் தவிர சிந்தனை வெறுமையை நுகர்வோர் என்று மதுவருந்தியவன் மற்றும் மனநிலை பிறழ்ந்தவன் என்று குறிக்கத் தோன்றுகிறது. அவர்களை போலவும் வெறுமையின் நிறைவை அதிகமாய் சுவைப்போர் யாரிருக்கிறார்கள்?
மாயையின் உந்துதலால், நான் சூழ்நிலை பரிகாரம் தேடப் புறப்பட்டு அடையும் இடம் கண்டிப்பாக, ஒவ்வொரு இவ்வகை நிகழ்வின் முடிவிலும், எனக்கு முன்பே பரிச்சயமானதாகத்தான் இருந்திருக்கின்றது.
சிறிது நேர சிந்தனை, மனதை வலுக்கட்டாயமாக மற்ற நேர்வுகளில் செலுத்துவது, நண்பனுடன் அளவளாவுதல் போன்ற காரியங்கள் இந்த முரட்டுக் குதிரைக்கு சவுக்குகளாய் இருப்பதை கண்டிருக்கிறேன். வெறுப்பல்ல அது, பெரிதும் இந்த முரட்டுக் குதிரையே என்னை படைப்பின் சிகரங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறது என்பதும், தன்மானச் சரிவுகளிலிருந்து காத்திருக்கிறது என்பதும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.
- 17/03/87
Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
Saturday, April 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
-
The other day, I was searching for Aldous Huxley’s writings and chanced upon a century-old school of thought, propounded by Hermus Trismegis...
-
"Annai! Annai! Aadum Koothai Naada cheidhaai ennai!" These were the lines by Mahakavi Bharathi in his poem titled 'Oozhi ko...
-
எ த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து... அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்...
No comments:
Post a Comment