Sunday, April 11, 2010

என்னைப்பற்றி

ரோட்டோரத்தில்
குழம்பின நிறமாய் ஓடும்
மழை நீரில்
துளி விழுந்து எழும் குமிழ்
உடையாமல்
எவ்வளவு தூரம் போகும்

ஊர்தெரியாமல்
போகும் ரயிலிலிருந்து
நான் போட்ட
காற்றின் வேகத்தில் சுழன்று
அடித்தளம் மறையும்
அலுவல் காகிதம்
எத்தனை நாள் அங்கே கிடக்கும்
பத்து நாட்களில் என்னவாகும்


கழுநீர்த் தொட்டியை
முகர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்
காக்கை குத்திய
கழுத்து புண் சுமந்த மாடு
அதன் கண்ணோர கண்ணீர்க் கறை?

பேருந்து இறங்கி
கரட்டோரம் சிறுநீர் கழித்து
பூத்திருந்த செடி
அடுத்த தடவை வந்தால்
ஞாபகம் வைத்துக்கொள்ள வேணுமாய்
நினைவில் பதிக்கும் அந்தச் சின்னப் பூ?

வாழ்க்கை அப்படித்தான்

- 13 / 01 / 92

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer