எல்லோருக்கும் திரைப்பாடல்கள் அவர்களது வாழ்வில் இயைந்திருக்கும் காலங்களை நினைவுகூர முடியுமாயிருக்கும். என்னைப் பொறுத்தவரை என் வாழ்வின் பல சுவையான கட்டங்கள், சில துன்பியல் நிகழ்வுகள் மற்றும் பருவ வளர்ச்சி பரிணாமம் அனைத்தும் தமிழ் திரை பாடல்களில் கலந்தே நகர்ந்திருப்பதை உணர்கிறேன்.
பல பாடல்கள் அறியாத வயதில் கேட்டவை. தொலைக்காட்சி இல்லாத காலம். வெறும் வானொலி மட்டும் வீட்டில். அடுத்து ரெகார்ட் ப்ளேயர் (ஜப்பானிய தயாரிப்பு - நல்ல ரத்த சிவப்பில் இருக்கும்) வந்தது. வானொலியோடு இணைந்தது. பல பாடல்கள் அதில் கேட்டது. அதே கால கட்டத்தில் நண்பர்கள் வீடுகளில் தொலைகாட்சி வர ஆரம்பித்து விட்டது. அங்கே சில பாடல்கள். மிக சிறு வயதில் திரை அரங்குகளில் பார்த்த பாடல்கள். கேசட் ப்ளேயர் வரவு அடுத்து. அவற்றில் பல வசதிகள், பல மாடல்கள். மறக்க முடியாத, வாழ்வின் பகுதியாகி இறுதிவரை வரப் போகிற ராஜாவின் பாடல்கள் எண்ணங்களுள் நுழைந்த காலம். இறுதியில் இப்போதிருக்கும் ஐ போன் வரை வந்து விட்டேன்.
இப்போது பகுத்து பார்க்கும் போது, இந்த பல தரப்பட்ட பாடல்கள், பற்பல ஊடகங்களின் மூலமாகவும், மிக பற்பல வயதுகளிலும், பல மனச் சூழ்நிலைகளிலும் என்னை வந்தடைந்திருக்கின்றன என்பதை உணர முடிகிறது.
ஷங்கர் கணேஷ் தொடங்கி நான் மேதைகளாக கருதும் எம்.எஸ்.வீயும் ராஜாவும் ஆக்கிரமித்திருக்கும் இந்த பட்டியலில், ஜி.கே.வெங்கடேஷ், வீ.குமார், டி.ராஜேந்தர் என்று பல இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். பாடகர்களில், டி.எம்.எஸ், எஸ்.பி.பி, கே.ஜே. யேசுதாஸ், ஜெயச்சந்திரன் இவர்களினூடே மலேஷியா வாசுதேவன் என்னை மிகவும் பாதித்த, நினைவில் தங்கி விட்ட பல பாடல்களை பாடி இருப்பது (எனக்கே ஒரு வித ஆச்சர்யத்துடன்) காண்கிறேன்.
மிகச்சிறு வயது நினைவுகள் (மூன்று முதல் ஒன்பது வயது வரை) நிறைய எண்ணவோட்டங்கள் எனக்குள் பொதிந்த காலம். பாடல்களும் அவ்வாறே. பதின்ம வயதிலும், கல்லூரி மற்றும் காதல் கார்காலங்களிலும் மிகப் பல பாடல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை பல காரணிகளால் மெதுவே குறைந்து இப்போதிருக்கும் சிங்கப்பூருக்கு வந்து சேரும்போது ஒரு பாடலைக் கூட இந்தப் பட்டியலில் காண முடியவில்லை.
ஒரு விஷயம். ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர், பரத்வாஜ், ஜி.வி. பிரகாஷ் போன்ற பலரின் பல பாடல்கள் எனக்கு இப்போது பிடித்திருந்தாலும் அவை இந்த பட்டியலில் இல்லாததற்கு ஒரு காரணம் உண்டு. இது எனக்கு பிடித்த பாடல்களின் பட்டியல் அல்ல. (இவற்றுள், பல பாடல்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்குள் எவ்வித ரசனையை தூண்டாத பாடல்கள் ஒரு சிலவும், வெறுமனே நிகழ்வுகளின் தொடர்போடு கடந்து சென்ற பாடல்களும் உண்டு). இந்தப் பாடல்கள் எங்கேயோ, எப்போதோ கேட்டும், ஏதோ ஒரு வகையில் மனதின் உள்ளில் போய் உட்கார்ந்து கொண்டவற்றின் தொகுப்பே.
மற்றொரு விஷயம். பாடல்கள் திரைக்கோ அல்லது தொலைக்காட்சிக்கோ வந்த கால வரிசைக்கும் நானவற்றை முதன் முதல் கேட்ட காலத்திற்கும் சம்பந்தமில்லை. பாடல் வந்து ஐந்தாறு வருடம் கழித்து முதல் தடவை கேட்ட பாடல்களும் உண்டு, வாழ்வில் ஓரிரு தடவைகள் மட்டுமே கேட்ட பாடல்களும் உண்டு.
இனி நானும் சில பாடல்களும்...
ராயபேட்டையில் குடியிருந்தார்கள் என் பெற்றோர். நான் மதுரையில் பிறந்து சென்னைக்கு என் அம்மா என்னைத் தூக்கிக் கொண்டு வந்த பிறகு இரு வேறு வீடுகளில் வசித்தோம். அவற்றிலொன்று ஐஸ் ஹௌஸ் அருகே முஸ்லிம்களும் தெருவின் கடைசியில் குயவர்களும் வசித்த ஒரு தெருவிலிருந்த வீடு. ஞாயிற்று கிழமை ஆனால் பானை செய்வோர் சூட்டம் போடுவார்கள். தெருவே நல்ல வெயில் காயும் அந்த நேரத்தில் வெண்ணிற புகை படர்ந்து கண்களையும் தொண்டையையும் எரிய வைக்கும். தணிந்து முடிந்த சாயங்காலங்களில், அந்த வெக்கை, காற்றில் சுற்றித் திரியத் தான் கூட்டாளிகளுடன் விளையாடுவது. வீட்டுக்கு எதிரே, வாசலில் பசு மாடு கட்டியிருக்கும், அந்த வீட்டினுள்ளே பல முஸ்லிம் குடும்பங்கள் குடியிருந்தன. அவர்களுக்கே உரித்தான நிறங்களில் உடைகள், வாசனைகள், உணவுகள்...
அந்தக் குடும்பத்திலொன்று பீடி சுற்றுவார்கள். இரவும் பகலும். முற்றத்தை ஒட்டி இருக்கும் இருளடர்ந்த தூண்களில் ஆளுக்கொன்றாக சாய்ந்து கொண்டு, பக்கத்தில் வானொலியை வைத்து கொண்டு, முறத்தில் பீடி இலைகளையும், தூளையும், செந்நிற மெல்லிய நூலையும் கொண்டு கருமமே கண்ணாக பீடிகள் உருமாறும். வெளியே தெருவில் திருடன் போலீஸ் ஆடும்போது, மாநகராட்சி குழல் விளக்கின் ஒளியில் இருந்து தப்பிக்க அந்த வீட்டுக்குள் அடிக்கடி ஒளிவதுண்டு. மூன்று அல்லது நான்கு வயதிருக்கும் அந்த நேரத்தில் தான் அந்த பாடலை பீடிக்காரகளின் வானொலியில் கேட்டேன்.
'என்னருகே நீயிருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்'
அப்போது அதை பாடியது பி.பி.எஸ், சுசீலா என்றெல்லாம் தெரியாது. ஆனால் நினைவு தெரிந்து நினைவில் பதிந்த முதல் பாடல் என்ற பெருமை அந்த பாடலுக்கே உண்டு. முஸ்லிம் பின்னணி, இருள் சூழல், பாடல் ஆரம்பத்தில் வரும் பேஞ்சோ-வோ அல்லது புல் புல் தாரா - வோ, மிக இனிமையான மிக துரித கதி இசைக் கோர்வை - இவை தான் காரணமாக இருக்க வேண்டும். அந்த பாடலை எப்போது கேட்க நேர்ந்தாலும் வெக்கை சூழ்ந்த அந்த அந்திப் பொழுதும், அதனூடாக காற்றில் வந்த அந்த பாடலும், பீடி மணம் கமழும் இருண்ட வீடும் தெளிவாக என் மனக்கண்ணில் காண முடிகிறது.
பைலட் திரையரங்கு அப்போது ஒரு வரப்பிரசாதம். நல்ல சிவாஜி படங்கள் அங்கு வெளியாகும். அப்பா அம்மா இருவரும் சிவாஜி ரசிகர்கள். எனவே பைலட்டுக்கோ கொஞ்சம் தள்ளி மவுண்ட் ரோடிலிருந்த சாந்திக்கோ மாதொருமுறை கணேசன் படத்திற்கு (அப்பா அப்படித்தான் உரிமையாக அழைப்பது) அழைத்து செல்வார். அதற்கு விதிவிலக்காக பைலட்டில் 'தீர்க்க சுமங்கலி' (முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்தது) படம் பார்க்கப் போனோம். அம்மாவுக்கு விஜயாவையும் அப்பாவுக்கு முத்துராமனையும் பிடிக்கும் என்பதை தவிர அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்த மற்றொரு காரணமும் நினைவில் இருக்கிறது. 'ஒரு அருமையான பாட்டு இருக்கு படத்தில'.
'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'
என்று துவங்கும் வாணி ஜெயராம் பாடிய அந்த பாடலின் ஆரம்ப இசை எம்.எஸ்.வியின் மேதைமைக்கு ஒரு சான்று. பெண்ணின் அருகாமையும் மல்லிகை மலரின் மணமும் அறிந்தவர்கள் அந்த இசைக் கோர்வையின் இனிமையை நுகராமல் இருக்க முடியாது. குழல், வயலின் கூட்டமைப்பு, ரிதம் கிடாரின் 2x2நடை பின்னி மெதுவே தளர் நடை பயிலும் பாடல். அகண்ட திரையில் பாடல் படமாக்கப்பட்ட விதமும், அச்சிறு வயதில், ப்ராயிட் கூறுவது போல் ஏதோவொரு கிளர்ச்சியான பாலுணர்வை சுரக்கச் செய்திருக்க வேண்டும்.
அங்கிருந்து சிறிது தொலைவில் இருந்த மற்றொரு வீட்டில் தான் என் பெற்றோர் நான் பிறப்பதற்கு முன் குடியிருந்தார்கள். பெரியம்மா என்று நான் அழைத்த ஒரு முதியவர் தான் குடும்பத்தலைவி. திருமணம் செய்து கொள்ளாதவர். அவரது தம்பியும் (அப்போதே ரயில்வேயில் இருந்து ரிடையராகி விட்டிருந்தார்), மற்றொரு விதவைத் தங்கையும் அவரது மூன்று மகன்கள், மற்றுமொரு மகளுமென பெரிய குடும்பமாக வசித்தார்கள். அந்த வீட்டிலிருந்த மற்றொரு போர்ஷனில் குடியிருந்து பிறகு வேறொரு வீடிற்கு சென்ற பிறகும் இரு குடும்பத்தின் நட்பு தொடர்ந்ததற்கு இரு காரணங்கள்: ஒன்று குழந்தையான நான், மற்றொன்று இன்னொரு குழந்தையான என் அம்மா (ஆம், என் அம்மா அப்போது படு வெகுளியாக இருந்ததாக சொல்லக் கேள்வி).
சனியன்று என் தந்தை வேலைக்கு செல்லும் வழியில் என்னை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு செல்வார்; மறுபடியும் ஞாயிறு மாலை வந்து அழைத்து கொள்வார். அதுவரை சிறு பிள்ளை இல்லாத வீட்டில் நான் தான் ராஜா. அப்படிக் கொஞ்சுவார்கள் என்னை. எனக்கென்று ஒரு பெரிய சைஸ் மரத் தொட்டில் இருக்கும். அதற்குள் தின் பண்டங்களோடு ஏற்றி விட்டுவிட்டு பக்கத்தில் வீட்டின் ஆண்கள் சீட்டு விளையாடுவார்கள். ஞாயிறு மாலை நான்கு மணிக்கு யார் எங்கிருந்தாலும் வானொலியை சத்தமாக வைத்து விட்டு வேலைகள் நடக்கும். 'நேயர் விருப்பம்' - முழ நீளத்திற்கு விரும்பிக் கேட்டவர்கள் பெயர்களை வாசித்து விட்டு புதுப் பாடல்களை ஒரு மணி நேரம் ஒலிபரப்புவார்கள்.
மறக்க முடியாமல் பதிந்து போன சில பாடல்கள் அப்போது கேட்டவையே. கமல் ஹாசன் முதன் முதலில் பாடிய 'அந்தரங்கம்' பட, 'ஞாயிறு ஒளி மழையில்', எஸ்.பி.பி பாடிய 'உத்தமன்' பட 'படகு படகு ஆசைப் படகு' பாடல் வரிசையில் அபூர்வ ராகங்கள் பட பாடலான ' அதிசய ராகம் ஆனந்த ராகம்'.
ராஜாவும் சரி, விஸ்வநாதனும் சரி நல்ல மெட்டாக இருந்தால் வழக்கமான இரண்டு சரணங்களுக்கு பதிலாக மூன்று அல்லது நான்கு சரணங்கள் அமைப்பதை பார்த்திருப்பீர்கள். அதில் அதிசய ராகம் ஆனந்த ராகம் உண்மையிலே ஒரு அபூர்வ பாடல். யேசுதாசின் கந்தர்வ குரலும், வயலின் இசைக் கோர்வைகளும், சரணத்துக்கு சரணம் மாறும் மெட்டும்... மைதிலி, மாதவி போன்ற அழகான பெயர்களை முதன் முதல் கேட்ட அனுபவமும் காரணமாக இருக்கலாம்.
படகு படகு ஆசைப் படகு - அப்போது கேட்ட மற்றொரு பாடல். மூன்று சரணங்களுடன், பாடலின் நடுவே, அரேபிய இசைப் பாணியில் எஸ். பி. பி. 'லைலா' என்று இழுத்து ஏற்ற பாலைவன பின்னணி இசையுடன் படுவது ஒரு மாதிரி 'ஹான்டிங்' ஆக நினைவில் இருக்கிறது. பல மூடுகள் மாறும் அந்தப் பாட்டு எங்கும் கேட்க முடியாத அபூர்வம்.