Monday, November 9, 2020

சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் மூன்று கவிதைகள்

 என்னவென்பது


நியதிகளேதுமற்றதே போல் தோன்றும்
இந்தக் கானகத்தில்
பற்ற ஒரு நியமம் தேடியலைகிறேன்
எப்போதும் உடுத்து அலையும்
வெண்ணிற உடையில்
களிகூடி மிதந்து
காடே சொந்தம்போல்
இறங்கிவரும் பட்டுப்பூச்சிகள்
அவ்வப்போது தீற்றிச் செல்வதை
கறையெனக் கொள்வதா
வண்ணமா

உயிர்பற்றிக் கொண்டாடும்
இவ்வாழ்வில்
கால்கள் இடறியும்
கலைகள் பயின்றும்
கைகள் பிணைக்குற்றும்
மாண்பை தரிசித்தும்
இன்னும்
இன்னுமோர் தருணம்
என்றலைதல்
ஆட்டத்தின் ஓரங்கம் என்பதா
அதுவே ஆட்டமென்பதா

பற்றிலேதும் வரவின்றி
உதித்து விரைந்து
உதிரும் நாட்களுக்குள்
கணக்கேதுமின்றி
எதையும் பதியாமல்
தடமெதுவும் இல்லாமல்
மகிழ்வேதும் தாராமல்
துயரதுவும் கொள்ளாமல்
மறைந்து போவது
குறைவென்பதா அன்றி அதுவே
நிறைவென்பதா

உரைகல்

வீதியெங்கும் வழியும்
உன்னதம்பொழியும் இசை
யாருமுணரா வித்வம்
விரல்களின் நர்த்தனம்
அரங்கம் ஒன்றிருந்தால்
கோடிகள் பெறும் படைப்பு
தெருமுனையில் தன்னந்தனியே
தவிப்பேதுமின்றி
தன்னிலை நினைப்பேதுமின்றி
வாசிப்பவனின் யாசகம்
யாதாக இருக்கக்கூடும்
கடந்தவர் நின்றவர்
விரைந்தவர் இரந்தவர்
யாவரும் யாரவன்
என்றறியாதவரே
ஏந்திய குவளையில்
சிந்திய இக்காசுகள்
இழந்துபோன நுண்ணுணர்வுகள்
வீழ்ந்துபோன அறிதல்
வணிகமே வாழ்வென்றாதல்

  • ஜீன் வெய்ன்கார்ட்டென் (Gene Weingarten), ஜோஷுவா பெல் என்ற புகழ்பெற்ற அமெரிக்க வயலின் இசைக்கலைஞரைக் கொண்டு நடத்திய ‘த கிரேட் சப்வே வயலின் எக்ஸ்பெரிமெண்ட்’ – டின் தாக்கத்தில்.

கடந்த வழி

காண்பதெதுவும் புதிதல்ல
யாரும் மாறிவிடவோ
மாற முயற்சிக்கவோ
ஒன்றுமில்லை
பதற வேண்டாம்
இருண்ட கண்டத்திலிருந்து
கிளம்பிப் பரவிய
காலங்களிலிருந்து
இப்படித்தான் இருந்திருக்கிறது
ஓரங்கள் வெடிப்புற
அடிப்பாதம் தேயத்தேய
நடந்து கடந்த
மலைகளும் நதிகளும்
வனங்களும் பாலைகளும்
எதையும் எப்போதும்
மாற்றி விடவில்லை
இணைப்பதை விட
பிரிப்பது எளிது
ஆக்குவதை விட
அழிப்பது
எளிய வழிகள்
எல்லாருக்குமானவை
எனவே என்றுமுள்ளவை
உங்கள் வழியை
இன்றே தேர்ந்தெடுங்கள்
அவ்வப்போது எழும்
அவ்வரிய குரல்களைக்
கேட்டு பதற வேண்டாம்
நம் வழி
மனிதத்தின் வழி

***

சொல்வனம் மின்னிதழில் மூன்று கவிதைகள்

 சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் மூன்று கவிதைகள் 


https://solvanam.com/2020/11/08/%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/


Pandit Venkatesh Kumar and Raag Hameer