Sunday, April 18, 2010

எதிர்நோக்கும் இருவழி விலகல்



தணலையுமிழும் உன் தோள்கள்
தண்மை கொண்டிருந்தன அன்று
பேசியவை காதல் மொழிகள்
அல்லவென்றாலும்
அருவருப்பை கூட்டும் விதமாய்
இல்லை இன்று போல் அன்று
கண்கள் நேர் பார்வையில்
காரணம் புரியும் அன்று
விரிந்த கைகளும்
தலை கோதும் விரல்களும்
அருவமாய் வீசிப் பரப்பும்
அமைதியை அன்று
காமத்திற்குள் காதல்
புகுத்தியதில்லை நாம்
துணையுடன் கலவியும்
அவ்வாறே

நாமின்று
நடந்து போகும் பாதை
நமக்கென விதிக்கப்பட்டதல்ல
ஒவ்வொரு வளைவிலும்
கழன்று விழுகின்றன
சொற்கள்
மௌனத்தினால் அளக்கப்படும்
இந்தப் பயணம்
மிக்க வலி மிக்கது
என நீயும் அறிவாய்

உன் என் குருதிகளால்
நிரம்புகின்ற பாதையின் சரிவுகள்
நம் கடந்த நினைவுகளை
பிரதிபலித்து தளும்புகின்றன
விண்ணெங்கும் பொழியும்
ஒளி கருகுகிறது
நம் இன்றைய உறவைப் போல்

நேர்கொள்வதில்லை கண்கள்
வார்த்தைகள் தம் இலக்கை
விளிப்பதில்லை
அருவமாய் சூழ்ந்திருந்த
புரிதலின் சருகுகளின் மேல்தான்
நாம் நடக்கும்
இந்தப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது

நானஞ்சிய
பாதையின் இருவழி விலகல்
எதிர்கொள்கிறது இன்று
பாதங்களிலும் உடல்களிலும்
படிந்து இழியும்
நினைவுகளின் எச்சங்களையும்
குரூரங்களின் வலிகளையும்
கழுவி விடும்
ஒரு பெருமழையை
பன்முறை பொய்த்திருந்தும்
எதிர்நோக்குகிறோம் நாம்

எங்கிருந்தோ நீளும்
என நான் நம்பும்
ஒரு விரல் சுட்டும் பாதையை
தெரிவு செய்ய
நான் காத்திருக்கிறேன்
உன் வழமையான
என்னில் மட்டும் சித்தித்திராத
அமைதியுடன் நீயும் காத்திருக்கிறாய்
நம் முன்னே
நாமடையப் போகும்
வெவ்வேறு இலக்குகளின்
மறைவுகளை பொதித்து
பாதைகளும் காத்திருக்கின்றன
ஓர் உன்மத்த அணைப்பில்
கரைந்து விடும்
அற்ப சாத்தியத்துடன்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer