Showing posts with label Ramesh Shanmugam. Show all posts
Showing posts with label Ramesh Shanmugam. Show all posts

Sunday, June 24, 2012

நண்பனின் கடிதங்கள் - 6



கூடிக் களித்துக் கொண்டாடி
கூட்டம் தவிர்த்து கூட்டம் போட்டு
வாழ்க்கை வாலிபம் வல்லமை
வையகம் வளர்க்கும் பொய் அகம்

நிஜத்தில் தேங்கும் நிச்சயம் - மற்றும்
நித்தமும் வளர்த்த கங்கணம்
உடைத்துச் சேர்த்த உண்மை - முற்றும்
கடைந்து தேர்ந்த கவிதை

காதல் கோர்த்த கற்பனை
கண்ணில் பார்த்த காலம்
சாதல் ஜெயித்த சகம்
சுகத்தில் லயித்த சுயம்

எல்லாம் நானாய் என்னிலும்...
என்னைப் பார்க்கும் உன்னிலும்...

கடந்த நாட்கள் கவிதைகள் சொல்வன
காவிய வித்தென கடிகளும் சுற்றின

வாழ்ந்த நாட்களை வாழ்ந்த விதமோ
வாழும் நாட்களை வாழும் விதமோ
முரணோ இல்லை முதிர்வெனச் சொன்னால்
உடன்பட நிஜமோ ஒவ்வாதி றக்கும்

பரிணாமம் இதுவோ பரிகாரம் எதுவோ
பரிச்சயம் தோற்பின் பரஸ்பரம் எழுமோ
விதியோ வினையோ வேல்விளை யாட்டோ
இருமுனை கூறெனில் எவர்ஜெயிப் பாரோ

பொய்யல்ல நண்பா இதுநம் இடைத்திரை
போலி மூட்டம் பெரும்பொய் நாடகம்
உடையும் நிஜங்கள் உணர்த்தும் சேதி
உனக்கு மட்டுமா எனக்குந் தானே

போருக்குத் தானே புறப்பட்டு வந்தேன்
போர்க்களம் இன்றோ மனதில் தானே
எந்தச் சிலம்பை எவள் உடைத்தாளோ
இந்தப் பரல்கள் எப்படி வந்தன

சொல்லும் வல்லமை எனக்கிலை தோழா
சொப்பன நிஜங்கள் போதும் போதும்

வந்து போகும் வாழ்க்கை போகும்
தந்து போகும் செல்வம் போகும்
வெந்து போகும் உடலும் போகும்
வேகா நிஜங்கள் போதும் போதும்

- ரமேஷ் சண்முகம்
1990 - 91

Sunday, May 15, 2011

நண்பனின் கடிதங்கள்

ரமேஷ் சண்முகம்
02-03-88

நண்பா,

              நீ
              நின் மனிதம்
              உன் கவிதைகள்
              உன் கவித்துவம்
              உன் நேசம்
             உன் நியாயம்
             ....
             ....

                     இவை என்னை பொறாமைப்பட தூண்டுவன. பாராட்டக் கட்டளையிடுகின்றன. 

                     உனக்கு ஒரு முத்தம்.

                     உன் பேனாவுக்கு....
                     ....கோடி முத்தங்கள்.

                                                                         அன்புடன்,
                                                                          ரமேஷ்.

Wednesday, December 22, 2010

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 4
17/11/89

பிரிய சரவணா,

உன் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி.   I.C. ஏன் சரியாக எழுதவில்லை? அது ஒன்றும் அவ்வளவு கடினமான பாடம் அல்லவே. எனினும் நீ அதில் தேர்ந்து விடுவாய் என நம்புகிறேன்.  இக்கடிதம் உன்னை அடையும் நேரம் எல்லாப் பரீட்சைகளையும் நல்ல முறையில் எழுதிவிட்டு வீடு சேர்ந்திருப்பாய் என நம்புகிறேன்.

ஹரியின் சித்தப்பாவின் மறைவு மிகவும் வருத்துகிறது. வாழ்வு எவ்வளவு அநித்தியமானது.

யதார்த்தம் வேறு. நம் லட்சிய இலக்கு வேறு; வரையறைகள் வேறு. பொதுமை, பெரும்பான்மை இவையே யதார்த்தம் என்றால் என் யாசகம் யதார்த்தம் அல்ல. "சூழலின் சுக வெம்மை" தேவைப்படுகிறதா? சரவணா! இது சிதை வெம்மையோ, பணிக்குடச் சூடோ அல்ல.  உனது மூச்சில் எனது மூச்சடைக்கும் புழுக்கம். பொறாமை, அறியாமை, கர்வம் இவை இச்சமூகத்தை தீக்கிரையாக்கியுள்ளன. இச்சூழல் வெம்மையா? எனில் எப்பனி தீர்க்க இவ்வெம்மை நாடுகிறாய்.

'ஒரு பானைச் சோற்றுக்கு....' பழமொழி மனித இனத்திற்கு ஒத்து வராது. சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி உலகம். நீ தனி. நான் தனி.  நமது ரசனைகள் ஒத்துப் போகலாம்.  நம் சிந்தனைகள் ஒரே தளத்தில் இறக்கலாம்.  நம் தேவைகள் ஒரே மாதிரி இருக்கலாம்.  எனினும் நான் பார்க்கும் உலகம் தனி. நீ பார்க்கும் உலகம் தனி. நம்மை தனி வர்க்கமாய் காணலாம். வரையறுக்க முடியாது.  நமது வர்க்கத்தின் குணாதிசயமாய் எதையும் நிர்ணயிக்கவும் முடியாது.  இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய எல்லோருமே சிந்தனையாளர்கள். அவர்களது சிந்தனையின் திக்குதான் வேறு.  எனவே விளக்குகளை வைத்து எதையும் நிர்ணயிக்க முடியாது.  எனவேதான் சூழல் மறுத்து, யதார்த்த நிர்பந்தம் வெறுத்து, வாழ்வின் ஏதோ ஒரு திசையில் என் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.

யதார்த்தத்தை ஏற்காததின் காரணம் பயம் அல்ல. இங்கு கற்பிக்கப்பட்டு வரும் யதார்த்தம் முட்டாள்தனமானது. இவர்கள் தங்கள் போக்கில் வாழ்ந்து கொண்டு, யதார்த்த வாழ்க்கை என்று பீற்றிக் கொள்வது வேடிக்கை. இவர்கள் எப்படி வாழ்ந்தாலும் அதுதான் யதார்த்தமா?

'அனைவரையும் அப்படியே ஏற்றுக் கொள்ளத் தெரிய வேண்டும்; பழக வேண்டும்'. உண்மை. அதற்காக இவர்களது முட்டாள்தனத்தையும் கபடத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது.  இவர்களது பாமரத்தனம் என்னைப் பற்றிய தவறான கணிப்பைத் தோற்றுவிக்கிறது என்றால், அது என் நிஜத்தின் தோல்வி. இதை என்னால் ஏற்க முடியாது. இதுவே இச்சமூகத்தின் பெரும்பான்மை.

நான் பொதுனலவாதியல்ல.  இவர்களிடம் போராடி என்னைப் பிரதிபலித்து, ஏதோ ஒரு காலத்தில் என்னைப் பேசுவதற்காய், சிலை வைப்பதற்காய், வெற்றி பெற.  நான் ஓர் உன்னதமான சுயநலமி.  எனக்கு நிகழ்தேதிதான் நிஜம்.  இன்றைய நாள்தான் என் வாழ்வின் அனைத்தும்.  நாளைகள் நிச்சயம் என்றாலும், இன்றைய கணத்தில் நேற்றும் நாளையும் மாயைகளே.  என் நிலைப் பிரக்ஞை என்றும் என்னில் உண்டு.  என் ஜீவாதாரமே அதுதான்.

நான் எதிர்ப்பது இல்லை. விலகிப் போவதுண்டு. வெறுக்கச் செய்து விலக்கி வைப்பதுண்டு.  அந்த வெறுப்பை மீறிய அணுகல் எப்போதாவது ஏற்படுவதுண்டு.  அதுவே எனப்பற்றிய மற்றும் என் புரிதல்களுக்கு வழி வகுக்கும். குறைபாடுகளையும் விகாரங்களையும் (மனதின்) என்னால் புரிந்து கொண்டு விலகி நின்று வேடிக்கை பார்த்து, நேசிக்க முடியும்.  அவற்றை என்னால் மதிக்க முடியாது.

என் குற்றங்களை என்னால் ஒத்துக் கொள்ள முடியும்.  எனக்குள் என்னால் இருமுகம் காட்ட முடியாது, என் சுய கற்பிதங்களால் என் தவறை வெளியில் மறுத்து விளையாடிக் கொள்ளலாம். என்னிடம் மறைக்க முடியாது.  சந்தியில் பல முகம் காட்டுவது நிர்பந்தம்.   வாழ்க்கை. உள்முகத்திற்கு அது வேடிக்கை. பல முகம் காட்டி, உண்மையாக இருக்க முடியுமா? அடிப்படை உண்மையை பாதிக்காமல் எதனை விதமான முகங்களையும் காட்ட முடியும். எனினும், பல முகம் காட்டுதல் கபடம் அல்லவா? ஆம். கபடந்தான். கபடம் இங்கு கட்டாயம். அம்மணமாய் வெளிவரும் நிஜம் அடிபட்டே சாக. கபடம் ஓர் கேடயம். நிஜத்தை விட்டெறிந்து விட்டால், நம் நிர்வாணம் கூட இவர்களுக்கு நாடகமாய்ப் படும்.

பொறுமை முக்கியம். தணலும் தண்மையும் மாறி மாறிச் சூழ்ந்து நிற்க, கனன்று தணியும் பொறுமை அவசியம். உளம் அணைத்து வழிகளிலும் இம்சிக்கப்பட்டும், அழியாமல் அமைதி காட்டும் பொறுமை அவசியம்.  இத்தகு பொறுமையை தவமேற்கொள்ளும்போது அவமானம், துக்கம், புகழ் எல்லாமே அந்நியப்பட்டுப் போகும்.

சரவணா! நானும் நீயும் விளக்குகள் அல்ல. விலகத் துடிக்கும் ஜீவன்கள்.  இன்னும் இச்சமூகத்தில் நாம் விழையும் சிற்றின்பங்கள் ஏராளம். பாலகுமாரன் மிக நன்றாக (significantly) விலகியிருக்கிறான். சுந்தர ராமசாமி, அக்னிபுத்திரன் ஆகியோரும் நல்ல விலக்குகள் அத்தகைய ஒரு தீவிரமான விலகல் தேவை. நாம் விலக்குகள் அல்ல.  நாம் எளிதில் உணர்ச்சி வயப்படுகிறோம். பாலியல் நட்பில் அதீத கவனம் செலுத்துகிறோம். நாம் நம் திசை வரையறுக்கப்படாமல், போகும் திசையை நம் திசையை கற்பித்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

சரவணா! "காலச் சுழற்சியில் காணாமற் போவது" அச்சுழற்சியின் நியாயம்; கட்டாயம்.  களிப்பும், சிலிர்ப்பும், சோர்வும், சோகமும், சுழற்சியின் அத்தியாயங்கள். இதை அனுபவித்து அதன் போக்கிலேயே போவோம்.  சுழலும் சக்கரத்தில் நம்மைப் பிணைத்துச் சுற்ற, நமக்குச் சக்கரமும், சக்கரத்திற்கு நாமும் நித்தியங்கள் (relativity).  இச்சுழற்சி சத்தியம். நாம் சுழவதும் சத்தியம். இதில் அசத்தியமாய் நான் காண்பது ஏதுமில்லை. எனக்காகப் பிறர் வாழ வேண்டாம். நானும் எவர்க்காகவும் வாழ்வதில்லை.  ஆயினும் என்னைப் போருக்க உனது வாழ்வு, எனக்காகத் தான், என்னை சிந்திப்பதாய் தான் அமைய வேண்டும். இதன் நேர்மாறும் நிஜம்.

நேற்றைய உண்மை இன்றைக்குப் பொய்யாகாது. உண்மை என்றைக்குமே உண்மைதான். ஆனால், சில வேளைகளில், உண்மை மறைந்திருக்க, ஒரு சில பொய்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும்.  முற்றிலுமான உண்மை என்றுமே பொய்யாகாது. புவியீர்ப்பு தத்துவம் பொய்யாகுமா? இற்றைய கணத்தில் நாம் உண்மை என்று கற்பிதப் படுத்திக் கொண்டிருக்கும் எந்த உண்மையான உண்மையும் என்றுமே உண்மைதான்.

----------பற்றி நான் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவும் விடவில்லை. புரிந்து கொள்ள அனுமதிக்காதது கபடமில்ல.  ஒரு விழைவு.  சிற்றின்பம். கொஞ்சம் sadism  கலந்தது. நான் அதீதமாய் கற்பனை செய்யப்பட்டு  விடுவேனோ என்ற பயம். என் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில தவறான புரிவுகளின் விளைவுகள் இன்னும் என்னைத் தண்டித்துக் கொண்டுள்ளன. தவறு செய்யாமலே தண்டிக்கப்படுகிறேன். அந்த தண்டனை உணர்த்தும் எச்சரிக்கை இது.  --------இடம் நிறைய பேச வேண்டும். என் நிலை தெளிவாக. நான் தெளிய.

சென்ற ஞாயிற்றுகிழமை சுருளி அருவிக்குச் சென்றோம். லேசான சாறல் வேறு.  நண்பர்களாக ஆறு பேர். சரியான குளியல். அதன்பின் இதுவரை சென்றிராத ஒரு பாதையில் சென்ற போது, அருமையான ஒரு இடம் அமைந்தது. வளைந்து செல்லும் ஓடை. சுற்றிலும் அடர்த்தியான மரங்கள். அவற்றைக் கிழித்து உள்வரும் கிரணக் கீற்றுகள். ஓடைக்கரையில் வழுவழுப்பான சரளைக் கற்கள்.  ஓடையின் நடுவே ஆங்காங்கே பாறைகள். அதில் ஒரு பெரிய பாறையின் நடுவில் அமர்ந்து கொண்டு celebrate பண்ணிவிட்டு, ஒரே பாட்டும் கவிதையும் தான். மிகவும் நன்றாக இருந்தது.

இங்கு நசீமும் (Loyola) அவனது தோழர்களும் வந்திருக்கிறார்கள்.  அவர்களை கவனித்துக் கொள்வதில் நேரம் போகிறது.

மற்றபடி வேறு விசேஷமில்லை.

அன்புடன்,
ரமேஷா 

Sunday, December 12, 2010

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 3

உத்தமபாளையம்


அன்புள்ள சரவணனுக்கு,

நலம், நலமே விளைக! நலமே விழைக!

உன் வாழ்த்து அட்டை கிடைத்தது. மிகவும் மகிழ்ந்தேன். மிகவும் ரசித்தேன்.

நீ தீபாவளி எப்படிக் கொண்டாடினாய்? தீபாவளியன்று உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  இந்த முறை தீபாவளி பழைய உற்சாகத்துடன் இல்லை. பால்ய காலத்து நினைவுகளில்தான் கொஞ்சம் குளிர் காய்ந்து கொண்டேன். பெரும்பாலான நண்பர்களால் ஊருக்கு வர முடியவில்லை.  மேலும், கலவரங்களால் சகஜ வாழ்க்கை அக்கம் பக்கத்துக்கு கிராமங்களில் பெரிதும் பாதிக்கபட்டிருந்ததால் தீபாவளியே சோபையிழந்து கிடந்தது. எனது பிறந்த தினத்தைப் போலவே தீபாவளியையும் எளிமையாக, மிக அமைதியான முறையில் கொண்டாடினேன்.  எனது நெருக்கமான நண்பர்களான பகவதிமுத்துவும், ஜெகனும் என் அருகில் இருந்தது சற்று உற்சாகம் ஊட்டியது.  உனது சேய்மை கொஞ்சம் உறுத்தியது உண்மை.

இங்கு தற்போது நிலவும் காலநிலை. நண்பா! நான் இதில் உன்னை விடுத்துச் சுகம் சுகிக்கும் சுயநலமி ஆகிவிட்டேன். கடந்த பருவநிலையில் பெய்த பெருமழை போய், தற்போது மேகங்கள் கவிந்து மோடம் போட்டு திடீரென்று, "சிரித்துப் போன கீதாவாய்" 'சடசடத்து', கையில் பிடிக்குமுன் காணாமல் போகும் சிறுமழையுடன். எனினும் தோழா! எனைப் புரிந்து கொண்டு சுகமூட்டும் உன் சேய்மையில் மனம் வலிப்பது நிஜம். இதே கால நிலை. அடுத்த மாதமே மாறும் என்பது எனக்குத் தெரியும். சூரியனை நாடுகடத்தி குளிரும் மார்கழிப் பணியில் மௌனம் சாதிக்கும் என் இரவுகள் இனிதான் வரவிருக்கின்றன.

சரி சரி! நீ எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறாய்? நண்பர் ஹரி, எப்படி இருக்கிறார்? மற்றும் நம் பிற நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? எல்லாம் எழுது. உடனடியாக எழுது.

சரவணா! தற்போது என்னிடம் நல்லதாக நான்கு ஆய்வுக்கட்டுரைகள் - புத்தங்கங்கள் இருக்கின்றன. அதைதான் தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.  முதல் புத்தகம் க.நா.சு. எழுதியது.

எங்களது 'பட்டமளிப்பு விழ' என்றைக்கு நடக்கவுள்ளது என்பது பற்றிய சரியான விபரம் தெரிந்தால் எழுது.

செல்வி. விஜயலட்சுமி அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு என் அன்பைத் தெரிவி.  தம்பி எப்படி படிக்கிறான்? அவனையும் கேட்டதாகச் சொல். ________ என்ன ஆயிற்று என எனக்கே தெரியவில்லை. .....................

சரி விடு.  நீ என்னென்ன சினிமா பார்த்தாய்? எதாவது நல்ல படம்? தீபாவளியன்று அழியாத கோலங்கள் பார்த்திருப்பாய் என நம்புகிறேன். ரொம்ப top இல்ல? இன்றைக்கு வெற்றிகரமாக 6 - வது தடவையாக 'அபூர்வ சகோதரர்கள்' பார்த்தேன். இன்னும் 4 - தடவை (குறைந்தது) பார்ப்பேன். இந்தத் தியேட்டர்களில் படம் பார்பதே தேவசுகம். 'சோலைக்குயில்' பார்த்தேன்.

மற்றபடி இங்கு சொல்லத்தக்க விஷயங்கள் ஏதுமில்லை.

கொஞ்சம் சீக்கிரம் பதில் போடு.

அன்புடன்,
ரமேஷ் சண்முகம்


மனித மரம்


விழுது போட்டு,
அடிமரம் நீங்க  யத்தனிக்க,
அடி நழுவிப் போகும்.
அந்தரத்தில் கைவீசும்
விழுது.
அரிக்கப்பட்ட அடிமரம்
காற்று நினைந்து
கவலையுறும்.
உள்ளுள் கிளை ஒன்று
தளிர்விட்டு
புது விழுது பரப்பப்
புறப்பட்டு போகும் -
- அடியின் நித்தியம்
  தெரியாது.

ஆரங்கள்

நான், நீ, ஹரி நம்மூவரிடயேயுள்ள உறவு நட்பென்னும் பெரும் வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்கிறது.  அச்சாய், மிக மெல்லிய, கண்ணிற்ககப்படாத மிக நுண்ணிய புரிதலைக் கொண்டு, யாரும் தகர்க்கவோ, தலையிடவோ முடியாது சுழலும் இவ்வட்டத்திற்குள் நாம் ஆரங்களாய் அடைபட்டு கிடக்கிறோம்; ஓருடலோடு உடல் தழுவி, ஓருயிரோடு உயிர் பொருந்தி, கைகோர்த்து, இமை சேர்த்து மகிழ்வாய் சிறை கிடக்கிறோம்; சிறையே சுகம்; யாரும் வெளிவர விரும்பாத, இயலாத, கூடாத ஒரு வினோத சிறை.

யாருக்காகவும் வட்டத்தின் சுழற்சி நின்றுவிடாதபடி, இயக்க விதிகளுக்கப்பாற்பட்டு, வட்டம் சுழகிறது; சுழலும். தன் அச்சில் வெவ்வேறு வித படைப்புகளை சமைத்துக் கொண்டு, புரிதல் மேலும் வலுப்பட, அச்சு நிமிரும். அச்சின் இயைவில், சக்கரம் வளியாய் சுழலும்; படைப்பு எண்ணிறக்கும், அழகுறும். இதில் ஆரங்களற்ற சக்கரமோ, சக்கரத்திலினையாத ஆரண்களோ மதிப்பற்றவை; பயனிழப்பவை... மறந்து விடு... நாம் ஒரே சக்கரத்தின் ஆரங்கள்.
- 12/11/88

Sunday, August 29, 2010

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 2

உத்தமபாளையம்
17 /08 /89

பேரன்புள்ள நண்பா,

நலம், நலமறிய ஆவல்.

மிக்க அவசரத்தில் வந்ததால் உன்னிடம் சொல்லிக் கொள்ள முடியவில்லை. உன்னை பலதடவை இவ்வாறே வருத்த நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்.

நான் இங்கு திங்கட் கிழமை காலை வந்தேன். மிகவும் தட்பமான சூழ்நிலை. நம் மனப் போக்கையும் விஞ்சும் வண்ணம் வினாடிக்கு விநாடி மனதை மாற்றி, தூறலாய் புன்னகைத்தும், மழையாய் காமம் காட்டியும் காதல் செய்யும் பூமிக்கும் வானத்திற்கும் நடுவே, கள்ளங்கபடமற்ற மக்களுடனும், கால்நடைகளுடனும், கால்வாயுடனும்.



என் சொந்த தேசத்தில் ஒரு விருந்தினனாய், ஒரு பூ மௌன அமைதியுடனும், சுகத்துடனும் காலத்தை களித்து கழித்துக் கொண்டிருக்கிறேன்.

இன்று மதியத்தில் அருகிலிருந்த சுருளி அருவிக்குச் சென்றிருந்தோம். அதன் பெருமையை என்னென்று சொல்ல. மென்மையான தூறலின் போது அருவியில் குளிப்பதென்பது தேவ சுகம் நண்பா! அந்த நீரின் வேகத்தை எதிர்த்து பலம் காத்தும் போதும், தோற்றுத் துவண்டு வெளிவரும் போதும், வந்த பின் அருகில் மென்மையாய் விழுந்து கொண்டிருக்கும் சின்ன வீழ்ச்சியின் மௌனத் தடவலில் மயங்கி நிற்பதும்...

என் மனத் தேவைகளை உடம்பு தீர்த்துக் கொண்டு கர்வப்படுகிறதே! இவையனைத்தும் என் சொந்த தேசத்து சொர்க்கங்கள் எனத் தெரிய வரும்போது... சரவணா! நான் மிக்க தலைக்கனம் பிடித்தவனோ? இருக்கலாம் நண்பா! எனினும் என் சோகங்களை பகிர்ந்து கொண்ட நீ என் சுகங்களையும் சுகிக்க வேண்டாவா?

நல்லது நண்பா! தற்போது உன் கல்வி, கவிதை, கலை, காதல், கனவுகள் ஆகியனவெல்லாம் எப்படி இருக்கின்றன? உனது கவிதைத் தொகுப்புக்கு நிச்சயமாக ஒரு நல்ல முன்னுரையை, கூடிய விரைவில் எழுதி அனுப்புகிறேன். தம்பி கார்த்தி எப்படி படிக்கிறான்? அப்பா, அம்மா எப்படி இருக்கிறார்கள்? நண்பர் ஹரி எப்படி இருக்கிறார்? இவர்கள் அனைவருக்கும் என் அன்பையும் நல விசாரிப்பையும் தெரிவி. மற்றபடி உனது மற்றும் நமது நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? அனைவருக்கும் என் அன்பைத் தெரிவி.

'மெர்க்குரிப் பூக்கள்' படித்தேன். பாலகுமாரன் தன்னை ஒரு பெண் வயப்பட்ட கபடதாரி என்பதை நிரூபித்துவிட்டான். நேரில் பேசலாம். முழுக்க முழுக்க நமக்கு ஒத்து வராத பாத்திரப் படைப்புகள் . நேரில் பேசலாம் . இனிமேல் யாராவது (எவளாவது) பாலகுமாரனைப் பற்றி பெருமையாகப் பேசினால் சும்மா விடாதே .

வேறு விசேஷமில்லை .

அன்புடன்,
ரமேஷ் சண்முகம்

Sunday, August 22, 2010

நண்பனின் கடிதங்கள்

ரமேஷ் சண்முகம் –


என் கல்லூரிக்காலம் தொடங்கி இன்றும் தொடரும் சகம்.

சுயம் நேசிக்கக் கற்றுத் தந்தவன்.
கவிதையும் இலக்கியமும்
'பாலின் தெளி நீராய்' பகுத்தாய வகுத்தவன்.
நடுவே நிலைகொண்டிருக்கும்
காலமும் இடமும்
கவிதைகள் கடிதங்கள் வழியே
கடந்து சென்ற பற்பல நினைவுகளில் இருந்து...


 
கடிதம் - 1

04 /11 /1989

பிரிய சரவணா,

உன் கடிதம் கிடைத்தது. எதிர்பார்த்திருந்த ஓர் ஆனந்தத்தின் கொந்தளிப்பை கொஞ்சம் அதிகமாகவே அனுபவித்தேன். மிக்க நன்றி. 'எதற்கடா மடையா? இதற்குப் போய் நன்றி?' என்கிறாயா? நிஜ நேச பரிமாறலுக்கு விலை மதிப்பதோ அன்றி சம்பிரதாய பாராட்டல்களோ ஏற்புடையதன்று எனினும், ஏமாற்றத் தொடர்வுகளின் மத்தியில் எதிர்பார்த்த நிஜம் தொட, நண்பா! என் ஜீவா சிலிர்ப்பின் வெளிப்பாடு இதில் மட்டுமே சாத்தியமாகிறது. மிக்க நன்றி, நண்பா! நன்றி.


உன் கவிதை படித்தேன். நீ சொல்ல விழைந்த அத்தனை குழப்பங்களும் தெளிவாய் புரிந்தது. இக்குழப்பம் நம் கொள்கைகளின் முரண். ஆனால் யதார்த்தத்தின் நிர்ப்பந்தம். நாம் இருவருமே இதன் கைதிகள். நம் சிந்தனையின் வேகத்திற்குச் சூழல் பயணிக்க இயலாது; அன்றி விழையாதிருக்கலாம். இதற்குத் தீர்வுகளாய் நான் கருதுவது, நம் சிந்தனையின் வேகத்தை கட்டுப்படுத்துவது அல்லது சூழலை நம் வேகத்திற்கு பயணிக்கச் செய்வது. இரண்டுமல்லையேல் சூழலை மறுத்து நம் சிந்தனையின் வேகத்தில் பறப்பது. இதில் முதலாவது தீர்வு முற்றிலும் அசாத்தியம். இரண்டாவது மிகவும் கடினம் மற்றும் வெகுபல காரணிகளை பொறுத்தது. மூன்றாவது, நான் மிகவும் விரும்புவது (நீயும் விரும்பலாம்). இதன் சாத்தியக் கூறுகளை நாம் தெளிவாக பகுத்தாய்ந்து விவாதிக்க வேண்டும். அதை நேரில் செய்யலாம்.

இவ்விடம் என் வாழ்க்கை மிகச் சுலபமாக இருக்கிறது. சரவணா! யாருக்கும் கட்டுப்பட வேண்டாத சூழல். அப்பா அம்மாவின் அருகண்மை. சுலபமான உறவுகள். புரிய முற்படாத, (அதனால் தவறான புரிவுகளுக்குச் சந்தர்ப்பமில்லாத) நம்மை நாமாகவே பார்க்கிற நண்பர்கள். அவர்களுடனான அளவளாவுதல்கள். மரங்களடர்ந்து இருள் கவிந்து கிடக்கும் ஊருக்கு வெளியே போகும் சாலைகளில், சாரல் சப்தத்தூடே மாட்டு வண்டிகளும், கதிரறுத்துக் களைத்தும் சலசலத்து வரும் நாட்டுப்புறப் பெண்களும்,புதிய உற்சாகத்துடன் கிளர்ந்து வர, நண்பா! இந்த இயற்கைக்கு எப்படி நன்றி பயப்பது, என் நிஜத் தோழர்களுக்கு இந்த நிஜத்தை எப்போது பரிசளிப்பது? என் காதலிக்கு இதை பரிசமாய் கொடுப்பது எப்போது?

இயற்கையின் வினோதங்கள் என்னை ஏளனமாய் பார்க்கிறது. நானோ பிரமிப்பில் சக மனிதர்களை ஏளனமாய்ப் பார்க்கிறேன்.

இக்குளிரும் பணியும் எத்தனைக் காலம்? குளிர் தாண்டி கோடை வருமே? கோடை போக குளிர் வருமே? எது நித்தியம்? இது எல்லாமே நித்தியந்தான். இச்சுழற்சி நிச்சயம். சுழல்வுடன் நாமும் சுழல நம் இருப்பும் நித்தியம். இக்கணம் இதோடு சாவதாயினும் அடுத்த கணம் இல்லாமல் போகாது.

நாளை என்பது இன்றின் கர்ப்பம். இன்று - நேற்றின் சமாதி. நாளை மற்றுமொரு இன்றே. இதில் நித்தியமில்லை என்று சொல்ல முடியாது. It is not transient , but periodic . so is our life . வாழ்வை ஒவ்வொரு கட்டமாய் கடந்து போவோம். காலத்துடன் நாமும் போக, கட்டங் கட்டமாய் களித்துச் சிலிர்த்து கால முடிவில் காத்திராமல் காணாமர்ப் போவோம்; காலமாகிப் போவோம்.

ஒவ்வொரு விஷயமும் ஏதாவது மற்றொரு விஷயத்தை பொறுத்தே வரையறுக்கப் படுகிறது. இத் தொடர்பின் புரிதலே வாழ்க்கையை ஜெயித்தல். வாழ்வும் இவ்விதமே. சமூகம் என்று நம்மை பெரும்பாடு படுத்தும் காரணியின் அதிமூலம் இதுவே. நமது வாழ்வு; வாழ்வின் ஒவ்வொரு செய்கையும் சமூகம் என்ற பிற ஒரு காரணியை பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. இதைப் புரிந்து ஜெயிக்க முற்படுகையில் சாதாரண மனிதம் தென்படுகிறது. இதைப் புரிந்து பொருட்படுத்தாமல் போகையில் நம் சிந்தனை ஜெயிக்கிறது.

எங்கோ ஆரம்பித்து வேறெங்கோ போய் விட்டேன் போல் படுகிறதா? நண்பா, இல்லை நம் நித்தியத் தேடலில் சற்றாழமாய் சிந்தித்து விட்டேன். நீயும் சிந்தியேன். சிந்திப்பாய் - நான் சொல்லா விட்டாலும்.

மற்றபடி, க.நா.சு. கட்டுரைகள் கொஞ்சம் சுவையாகவும் கொஞ்சம் வரண்டதாகவும் இருக்கிறது. மேலும் நண்பர்களுடன் ஊர் சுற்றி அரட்டை அடிக்கவே நேரமில்லாதிருப்பதால் அதைச் சரியாகப் படிக்க முடியவில்லை. சென்ற வாரம் கமல் ஹாசனின் "மய்யம்" வார இதழ் படித்தேன். அதில் ஒரு கவிதை. ரொம்ப ரொம்ப டாப் மாப்பிளே. எழுதுன கம்மனாட்டி யார் தெரியுமா? கமலேதான். அப்படியே பிரம்மராஜன் ஞானக்கூத்தன் trend . அசந்துட்டேன் மாப்பிளே. வாரா வாரம் எழுதுறானாம். ரொம்ப டாப். படிச்சு பார். நாம குமுதத்துக்கு எழுதலாம்னு நெனச்ச கடித்தத இவனுக்கே எழுதலாம் போல இருக்கு. நேரில் பேசலாம் நெறைய.

தம்பியை கொஞ்சம் நன்றாக படிக்கச் சொல். அறிவாளிக்கு அனுபவ அறிவைவிட கேள்வி அறிவே ரொம்பப் பயன் தரும். அவனிடம் நிறையப் பேசு. ஒரு வழிக்குக் கொண்டு வா. இது ரொம்ப ரொம்ப மோசமான stage . பையனை உருப்படி தேற்று.

இங்கு ஜெகன், பகவதி இருவருமே இல்லை. ஜெகன் மெட்ராசுக்கு வந்து விட்டான். பகவதி மதுரைக்கு போய்விட்டான். நான் மட்டும் உள்ளுக்குள் - தனியனாய். என் உலகம் நினைப்பதை ஒரு நிர்பந்தத்தில் மறுத்து, இவ்வுலகம் பார்த்துச் சிரித்து அதனூடேயே மிகச் சுலபமாய், சில சமயம் சுவராசியமாயும், சில சமயம் கட்டாயத்திற்காயும் வாழ்ந்து வருகிறேன். இரண்டு மூன்று கவிதைகள் எழுதினேன்.

பொழுது போகிறது. பொழுதுடனே நானும் போகிறேன்.

மற்றபடி நண்பர் ஹரி, கார்த்தி, விஜி, அப்பா, அம்மா ஆகியோருக்கு என் அன்பைத் தெரிவி. நான் convocation இக்கு முதல் இரு தினங்களில் சென்னை வந்துவிட்டு உடனடியாக திரும்பி விடுவேன். மற்றபடி வேறு விசேஷமில்லை.

உடனடியாக பதில் போட்டால் மகிழ்வேன்.

அன்புடன்,
ரமேஷ்

Pandit Venkatesh Kumar and Raag Hameer