Showing posts with label Ammaa. Show all posts
Showing posts with label Ammaa. Show all posts

Wednesday, February 15, 2012

என் தாய்த் தமிழ் உணவு

திடீரென்று அம்மாவின் நினைப்பு வந்து விட்டது அன்றொரு நாள். உறங்காமல் படுத்திருந்தேன் அவளை நினைத்துக் கொண்டே. பழஞ்சேலை வாசத்தோடு எப்போதும் அவளைச் சுற்றி இருக்கும் சமையல் வாசம் வந்து சூழ்ந்து கொண்டது. சமையலில் பெரிய நிபுணி என்றெல்லாம் சொல்ல முடியாதென்றாலும் வகை வகையான சமையலில் கெட்டிக்காரி என்று தோன்றியது.

அப்படியே யோசித்துக்கொண்டிருந்தவன், நினைவிலேயே அம்மா சமைத்து நான், என் தம்பி, தங்கை அவரவர் திருமணம் வரை உண்டு வளர்ந்த உணவுகளை அடுக்க ஆரம்பித்தேன். அசந்து விட்டேன். கூட இருக்கும்போது எதன் அருமையும் தெரிவதில்லை.


நீண்டு கொண்டே போன பட்டியலில் ஒரு பகுதி இதோ:

காலை உணவு
இட்லி
தோசை
முட்டை தோசை
வெங்காய தோசை

உப்புமா
ரவா கஞ்சி
சேமியா கிச்சடி
இடியப்பம் - தேங்காய் பால்
ஆப்பம்
சப்பாத்தி
பூரி - உருளை கிழங்கு
கம்பங்கூழ்
வெந்தயக்களி
கேப்பைக்களி
உளுந்தங்கஞ்சி
பயத்தம்பருப்பு கஞ்சி
அவல் உப்புமா
அடை
குழாய்ப் புட்டு
கேப்பைப் புட்டு
சட்டினி - சுமார் 10 வகைகள்
பாசிப்பருப்பு சாம்பார்
எள்ளுப் பொடி

இட்லி மிளகாய் பொடி

மதிய உணவு
சாம்பார் - பல வகைகள்
புளிக்குழம்பு - பல வகைகள்
மிளகு ரசம்
வெந்தய ரசம்
பூண்டு ரசம்
வேப்பம்பூ ரசம்
பூண்டு குழம்பு
பருப்புருண்டைக் குழம்பு
மோர்க் குழம்பு
முட்டைக் குழம்பு
கழனிப் புளிச்சாறு

இதற்கு தொட்டுக்கொள்ள
வறுவல் வகைகள்
பொரியல் வகைகள்
அவியல் வகைகள்
கூட்டு வகைகள்
கீரை மசியல்
மாங்காய் பச்சடி
துவையல் - பல வகைகள்
ஊறுகாய்கள்
மாவடு
வத்தல் வகைகள்
வடகம்
மோர் மிளகாய்
உப்பு கண்டம்
அப்பளம்

அசைவம்
பிரியாணி - கோழி, ஆட்டிறைச்சி, வெஜிடபிள்
முட்டை வகைகள்
கோழி வகைகள்

ஆட்டிறைச்சி வகைகள்
நண்டு
மீன் - வறுவல், குழம்பு
இறால் - வறுவல், குழம்பு
சுறாப்புட்டு

குடிக்க
காபி
தேநீர்
பானகம்
மோர்
தயிர்
பால்
ஆட்டுக்கால் சூப் (உடல் நலமில்லை என்றால்)
இஞ்சிச் சாறு (எல்லா ஞாயிற்றுக் கிழமையும் காலை எழும்போதே அப்பா ஒரு கையில் தம்ப்லரையும் மறு கையில் சர்க்கரையையும் வைத்துக் கொண்டு, அழ அழ குடிக்க வைப்பார்)
நீராகாரம் (வெயிலில் சென்று விட்டு உள்ளே வந்தால்)
கிரிணிப்பழ சாறு
பருத்திப் பால்
சீம்பால்

வெளியூர் பயணம்/சுற்றுலாப் பயணங்கள்
புளியோதரை
எலுமிச்சைச் சாதம்
தேங்காய் சாதம்
தக்காளி சாதம்
வெஜிடபிள் சாதம்

மாலை சிற்றுண்டி/விடுமுறை சிற்றுண்டி
சோளம் - அவித்து, வாட்டி
வேர்க்கடலை - அவித்தும் வறுத்தும்
சுண்டல் - வகைகள்
தட்டாம்பயறு
சர்க்கரைவள்ளி கிழங்கு
மரவள்ளி கிழங்கு
கொள்ளு
எள்ளு
பயறு வகைகள்

தீபாவளி போன்ற விசேட நாட்கள் (முக்கியமாக கிருத்திகை விரதத்தின் போது)
வெள்ளைப் பணியாரம்
இனிப்புப் பணியாரம்
கொழுக்கட்டை - வகைகள்
மசால் வடை
உளுந்தம் வடை
பஜ்ஜி - வகைகள்
போண்டா
வாழைப்பூ வடை
கேசரி
 பாயசம் - வகைகள்
அதிரசம்
முறுக்கு
சீடை
மைசூர் பாகு
சோமாஸ்
எள்ளுருண்டை
ரவா லட்டு



எத்தனை உணவுகள், எத்தனை வகைகள்...

எத்தனை காய்கள், பழங்கள், கீரைகள், பருப்புகள், கிழங்குகள் உண்டோ, எவ்வெவற்றில் எல்லாம் நல்ல சத்தான சுவையான உணவு சமைக்க முடியுமா அவற்றிலெல்லாம் நம் தாய்மார்கள் சமைத்திருக்கிறார்கள் என்பது புலப்பட்டது. இவையனைத்தும் அப்பா கடையில் வாங்காமல், அம்மா வீட்டிலேயே சமைத்தவற்றின் தொகை.

எவ்வளவு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் நம்முடையது!

இன்று பற்பல கோளாறுகளுக்கு ஆளாகி மருத்துவரிடம் சென்றால், கிடைக்கும் அறிவுரை - நார்ச்சத்து மிகுந்த, இயற்கையான, கால பருவ நிலைக்கேற்ற, நீர் சதவிகிதம் அதிகமுள்ள உணவை ஒரு நாளைக்கு ஐந்து வேளை சாப்பிட வேண்டுமாம். இதைத்தான் நம் முந்தைய தலைமுறைத் தாய்மார்கள் நமக்கு தந்து வந்திருக்கிறார்கள் அல்லவா?


இந்த காலை உணவில் மட்டுமே இப்போது என் குடும்பத்தில் எத்தனை வகை பிழைத்திருக்கிறது என்று எண்ணிப் பார்த்து நொந்து விட்டேன். இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பூரி. மற்றவை வழக்கொழிந்து விட்டன.

நல்ல வேளை, தமிழகத்தில் இன்னும் இலட்சக்கணக்கான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த அற்புத உணவு முறையை வழங்கி வருவார்கள் என்று என்னை நானே தேற்றிக் கொண்டு, தினப்படி செய்யும், அரைக்கப் ஓட்சில் கொஞ்சம் பாலை விட்டு சாப்பிட்டு விட்டு பணிக்கு கிளம்பினேன்.

Pandit Venkatesh Kumar and Raag Hameer