Showing posts with label Jeyamohan. Show all posts
Showing posts with label Jeyamohan. Show all posts

Sunday, January 26, 2014

வெண்முரசு - 'நோக்கங்களின்' தகுதிகள்

“ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….”

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

வெண்முரசு படிக்கும்தோறும் விரிந்து வருகிறது. மகாபாரதக் கதையை முழுமையாக அறிந்திருக்க வேண்டியவர்கள் இந்தியர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மானுட பிறவியுமே.

தத்துவ விளக்கங்கள், அறநெறிகள், உளச் சிக்கல்கள், ஆண் பெண் உறவுகளின் வெவ்வேறு படி நிலைகளில் அவரவர் கடமைகள் - என இக்காவியத்தில் இல்லாதது என்ன இருந்து விட முடியும்?

நடையழகும் மொழிச்சுவையும் கூறலின் அடர்த்தியும் முன்பின்னாக கிளைக்கதைகளை இணைக்கும் நேர்த்தியும் மனதை ஏதோ செய்கிறது. இந்தியனாகவும், தமிழ் அறிந்தவனாகவும், ஜெயமோகனை படிப்பவனாகவும் இத்தொடர் என் மன எழுச்சியையும் பெருமிதத்தையும் ஒவ்வொரு நாளும் தொட்டுத் திரும்புகிறது.

“ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….”

இவ்வரியை சிந்திக்காத நாளேயில்லை.

ஞானம் அடைதல்; ஞானம் சித்தித்தது என அதை ஒரு பெறுபொருளாக, வெளியிருந்து உட்சேரும் கூறாக எண்ணி வந்ததற்கெல்லாம் மாறாக, அனைவருக்குள்ளும் எப்போதும் இருந்து கொண்டிருக்குமொன்றெ அது; பல்வேறு மாயைகளும் அறியாமைகளும் இன்ன பிறவும் களைகையில் மிஞ்சுவதே என்ற கருதுகோள் என்னை பொறுத்த மட்டில் ஒரு பெரிய திறப்பு.

இத்தனை லௌகீக இடையூறுகளுக்கிடையேயும் மேலும் மென்மேலும் இவ்வரியின் உட்சென்று சிந்திக்க உங்கள் வெண்முரசு ஓர் உந்துசக்தி.

பத்து வருடங்கள்! தினமும்!
இது ஒரு வேள்வி.

தானறிந்ததை தன்னை ஈர்த்ததை தான் கூற முடிவதை தன்னை உருக்கித் தருவதென்பது நான் கண்டிராத ஒன்று.

இதற்குள் என்ன சுயலாபம் இருந்து விட முடியும்? பிர்தௌஸ் கேட்டது போல் என்ன 'நோக்கம்' இருந்து விட முடியும்?

அந்த 'நோக்கம்' கேள்வியும், இன்றைய தமிழ் பொதுச் சிந்தனையில் எழுப்பப் படப் போகும் உள்ளர்த்தங்களும் எதிர் பார்க்ககூடியவையே என்றாலும் மிகக் குரூரமாக, வக்ரமாக உணர்ந்தேன்.

எத்தகைய உழைப்பு!

காலை சிங்கப்பூரில் 7 மணிக்கு படிக்க முடிகிறதென்றால் இந்தியாவில் 4.30 மணிக்கு பதிவேற்றப் பட வேண்டும். கேள்வி கேட்பவர்கள் இது போன்றதொரு அர்ப்பணிப்போடு ஏதேனுமொன்றை படைத்து விட்டு கேட்கும் தகுதியுடன் கேட்கலாம் என்ற சுய உணர்வு இருக்காதா?

அது போன்ற 'நோக்க' கேள்விகளுக்கு நீங்கள் மீண்டும் மீண்டும் பதிலளிக்கத்தான் வேண்டுமா?

சரி, அப்படியே இந்தப் படைப்புக்குப் பின் உங்களுக்கு ஓர் இந்துத்துவ நோக்கம் (கேட்பவர்களின் நோக்கங்களோடு முரண்படுவதாக இருந்தாலும் - மகாபாரத காவியத்தை இந்து காவியம் எனல் எவ்வளவு முட்டாள்தனமாக பாமரத்தனமாக இருப்பினும்), இருந்தால்தான் என்ன தவறு?

ஒரு படைப்பாளன் தான் விரும்பும், நம்பும் ஒரு கொள்கைக்காக தன் படைப்பூக்கத்தின் உச்சத்தில் விளம்பரம் விழையாமல், இயக்க சார்பும் ஆதரவுமில்லாமல், வருவாயின் வழியாக இவ்வெழுத்தை எண்ணாமல், இந்த படைப்பும் உழைப்பும் தருவதென்றால், அந்தக் கொள்கையும் அந்த அர்ப்பணிப்பும் அழியா அர்த்தம் பெறுகிறதல்லவா?

உங்கள் நோக்கங்களை சந்தேகிப்பதற்குமுன் அவரவர் நம்பும் நோக்கங்களுக்காக வருடக் கணக்கில் உழைப்பை செலுத்தி விட்டு உங்களை கேட்பதே முறையல்லவா?

உள்நோக்கங்கள் நிறைந்த, கையாலாகாத, தகுதிகளற்ற வினைகளை புறந்தள்ளி விட்டு, தயவுசெய்து உங்கள் நேரத்தையும் திறனையும் இம்மாகாவியத்தை வடிப்பதில் செலுத்துங்கள்.

மற்றபடி, புரிதலுக்காக அவ்வப்போது நீங்கள் விடையிறுப்பது சரியே எனினும், கூறியது கூறல் வேண்டுமா?

உங்கள் முயற்சியின் உன்னதம் வெற்றியடைய வாழ்த்தும்,

சரவணன்

Sunday, October 13, 2013

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன்,

புறப்பாடு தொடர் படித்து வருகிறேன்

எத்தனையோ வாழ்வியல் அனுபவங்களை படித்தும் கேட்டதுமுண்டு.
இந்தப் பதிவுகள் பலருக்கு பல விதத்திலும் ஒரு சிகரமாக இருக்கப் போகின்றன.

முழுதும் முடிந்த பின்னர் ஒரு மிக நீண்ட உணர்வுக்குறிப்பு எழுத திட்டம்.

ஆனால் முதலில் சொல்ல வேண்டுவது முதலில்.

ஐம்பது வயதின் அனுபவங்களோடு முப்பது நாற்பது வருடங்கள் பின்னோக்கிப் பார்த்து எழுதும் போது, இயற்கையாக நிகழ்ந்து விடக் கூடிய, இப்போதைய அறிவும் அனுபவமும் தற்குறிப்பாக நிகழ்வுகளை ஆராயும் எந்த சாத்தியங்களும் தென்படா வண்ணம், அந்த வயதுக்கே உரிய அறியாமையும், அலைக்கழிப்பும், உணர்ச்சிகளும் மிக எழுதுகிறீர்கள். இது ஒரு அரிய எழுத்து சாதனையென எண்ணுகிறேன்.

பற்பல சம்பவங்களில் என்னை நான் கண்டதுபோல் உங்கள் வாசக நண்பர்கள் அனைவரும் தங்களைக் காண்பார்கள்.

பதற்றமுடன் ஒவ்வொரு நாளின் விடிகைக்கும் காத்திருக்கும்,

சரவணன்

சிங்கப்பூர்

Thursday, February 11, 2010

Letters to Jeyamohan - 9

அன்புள்ள ஜெயமோகன்,


தங்கள் மலேசியப் பதிவில் மரபின் மைந்தன் முத்தையா மரபுத் தமிழை சுவைபட பேசி (பாடி?) நீங்கள் ரசித்ததாக எழுதியிருந்தீர்கள். மேலும் தமிழின் சந்தச் சுவையையும் அதன் மூலம் தமிழ் தொடும் நுண் தள சாத்தியங்களையும் சிலாகித்திருந்தீர்கள்.

எனக்கென்னவோ, அந்நிகழ்வின் தாக்கமே ஈராறு கால்கொண்டெழும் புரவியாக கட்டற்று உங்களை, உங்கள் தமிழை பாய வைத்திருக்கிறது இந்தக் கதையில் என்று தோன்றுகிறது. உங்களின் எந்தக் கதையிலும் இல்லாதவோர் நடை. ஒரு வித்தைச் செழுமைக்காக எழுதிப் பார்த்ததிலும் உழைப்பின் தீவிரமும் ஆற்றலும் தெரிகிறது.

"கரஞ்சு விளிச்சா கஞ்சி வந்துடுமுண்ணு குட்டிக நெனைக்கும், நீரு நெனைக்க முடியுமா வேய் ? உம்ம உலகம் மாறியாச்சு. நடந்து வந்திட்டேரு.. இனி நீரு பொறகால போக முடியாது பாத்துக்கிடும்…”- இதைத்தான் பிள்ளை அறிந்து கொண்டு விடாமல் ஜீவனை கடத்தி விட்டாரோ? இன்னொரு இடத்தில், பிள்ளையை நெருஞ்சி முள்ளென்று ஞானமுத்தன் சொல்வான். பிள்ளையின் தீராத அலைச்சல் அவரது குணசித்திரமாக மற்றவர்கள் மூலம் வெளிப்படும் இரு இடங்கள் இவை. தவிர, பிள்ளை அவர்மட்டில், அந்தந்த கணத்தில் அவர் தேடி அலையும் தண்ணீராகட்டும், மனைவியின் சுகமாகட்டும், அந்தத் தேடலில் உண்மையாகவும், கவனச்சிதறலோ ஆன்ம சேதனமோ இல்லாமல் thaan தேடுகிறார்.

மத்தகத்தை விடவும், எழுத்தில் நுணுக்கமாக பல இடங்களில் காமம் விரவிக் கிடக்கிறது. வயது குறைந்து கொண்டே வருகிறது!

நன்றி ஜெயமோகன்

சரவணன்
சிங்கப்பூர்

Sunday, January 17, 2010

Letters to Jeyamohan - 8

அன்புள்ள ஜெயமோகன்,

பெண்மையில் ஆண்மையையும், ஆண்மையில் பெண்மையையும் பிரித்துணரும் வல்லமை அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இயற்கையின் இவ்விரு சக்திகளுக்கிடையே நாம் அனுதினமும், நமது வெளிப்பாடுகளையும், புரிதல்களையும், அனுசரணைகளையும் மாறுபடுத்த வேண்டியிருக்கிறது.

“தன் ஒவ்வொரு துளி இருபபலும் பிறிதொன்றுக்காக காத்திருக்க, தன்னை வந்தடையும் ஒரு சிறு தொடுகையில் பூரித்து கண்விழித்தெழ, தன்னுள் விழும் ஒரு துளி உயிர்த்தூண்டலை தன் மொத்த ஆன்மாவையும் உணவாகக் கொடுத்து உருவாக்கி எடுக்க பெண்மையாலேயே முடியும். உடலிலும் உள்ளத்திலும் உறுதியாகிவிட்ட ஆண்மையின் இறுக்கத்தை கரைத்து பெண்மையாகி நெகிழ எத்தனை தவம் எத்தனை கண்ணீர் தேவைப்பட்டிருக்கும்!”

மொத்த கட்டுரையின் சாரமாக நான் கருதும் இவ்வரிகள் தான் எத்துணை சத்தியமானவை! எத்துணை நெகிழ்ச்சியானவை!

சரவணன்

Letters to Jeyamohan - 7

அன்புள்ள ஜெயமோகன்,

எவ்வித எதிர்பார்ப்புகளும் அற்ற நிலையை மட்டுமே இயற்கையின் வல்லமையின் முன் கைக்கொள்ள தோன்றுகிறது. அனைத்தையும் கடந்த, அனைத்தையும் தோற்றுவித்த பரிபூரணத்தின் முன் என்னை ஆட்கொள், அருள் செய் என்று இறைஞ்சுவது கூட அவசியமா என்று தோன்றுகிறது. அப்படிக் கேட்பதே கூட அகண்ட சக்தியிலிருந்து என்னைப் பிரித்து உணர்ந்து விடுவதாகிவிடாதா?

விரிந்து கிடக்கும் பள்ளத் தாக்குகளிலும், காடுகளிலும், புரண்டோடும் நதிகளிலும், மலைகளிலும், கடல்களிலும், பாலைகளின் முன்னும் தன்னை கரைத்துக் கொள்வது தவிர வேறெது சிறந்தது? என்னைப் படைத்து வாழ்விக்கும், என் சந்ததியை வாழ்விக்கப் போகும் இப்ப்ரபஞ்சத்தினிடம் கேட்பதற்கு எதுவுமில்லை, தன்னில் என்னை ஈர்த்துக் கொள்ளும் கணங்களை நீட்டித்து தரும்படி கேட்பதைத் தவிர.

சில வருடங்களுக்கு முன், கேரளாவில் காலடிக்கு சென்றிருந்தேன். அப்போது பெரியாற்றின் கரையில் பெற்ற அந்த மனவெழுச்சியின் பதிவை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி ஜெயமோகன்,

சரவணன்
சிங்கப்பூர்

Saturday, November 14, 2009

Letters to Jeyamohan - 6

அன்புள்ள ஜெயமோகன்,


நீண்ட நாட்களின் வேலைப்பளுவிற்கு பின் 'முறையீடு' பதிவைப் படித்தேன்.

அலங்காரங்கள் ஏதுமற்ற, சொற்கள் உணர்வின் வெளிப்பாடுகளை சிதைக்காத, மிக நுண்ணிய ஆனால் மிக நேரடியான, அது, அதை பதிவு அல்லது கட்டுரை என்றெல்லாம் குறுக்க முடியாத, ஓர் உணர்ச்சி...

பொதுவாக பிறவுயிர்களின் அவலம் கூறும் எழுத்துகளில் தன்னேற்றம் ஒரு தடையென மாறி விடுவதுண்டு. அநாதரவான அந்த உயிரின் நிலை ஏற்படுத்த வேண்டிய உணர்வழுத்தம், சுய விவரனையிலோ கழிவிரக்கத்தினாலோ பின்னுக்கு தள்ளப்பட்டு நீர்ப்பதுண்டு.

முறையீட்டில் அது மிக இயல்பாக உருபெற்றிருக்கிறது. காரணம், எவ்வித உடன்பாடுகளும் மறுதளிப்புகளும் இல்லாமல், எந்த கற்பிதமும் இல்லாமல் அந்த உயிரின் வலியை உங்களால் உணர முடிந்திருக்கிறது.

பரிபூரணமாக கைவிடப்பட்டவனின் அழுகையைப் போல இந்த உலகத்தின் அத்தனை அழகுகளையும் இன்பங்களையும் ஒருசேர அருவருப்பாக்கத்தக்க வேறொன்று இல்லவேயில்லை. வேதம் கூறும் மகா வாக்கியம் போலொரு உண்மை. நாம் வாழும் வாழ்க்கையும், அனுபவிக்கும் இன்பங்களும், இடும் போட்டிகளும், கொள்ளும் தந்திரங்களும், இத்தகையதோர் கணத்தில் நம்மை கடையனிலும் கடையனாக உணரச் செய்கின்றன.

சுடர்மிகும் அறிவின் விளைவாய் ஒருபுறம், உயிர்களின் மீதான காதலும், மறுபுறம் மூளையின் கூர்மையை மழுங்கச் செய்ய வேண்டும் ஏற்புகளும்...

ஆனால், எத்தகைய உணர்வையும் சித்திரமாய் வடித்து விடும் வல்லமை வரப் பெற்றவனுக்கு முறையீடுகளும் ஓர் ஓவியவெளிதானோ?

இதயம் தொட்ட பதிவிற்கு மிக்க நன்றி,

வணக்கத்துடன்
சரவணன்
சிங்கப்பூர்

Saturday, March 14, 2009

அனல் காற்று - வருடிச் செல்லும் ஒரு சுகந்தம்

அன்புள்ள ஜெயமோகன்,

'அனல் காற்று'!

தமிழுக்கு என்ன ஒரு வன்மை! உங்கள் எழுத்துக்கு 'அனல் காற்று' ஒரு புத்தம் புதிய சிறகு. மிதந்து செல்லும் நிகழ்வுகளூடே அலைந்து திரிந்து முடித்த உடன் ஏற்படும் களைப்பு புது அனுபவம்.

ஸ்டெல்லா ப்ருசினுடைய 'அது ஒரு நிலாக் காலம்' தந்த சுகம், உணர்வை ரசித்தேன்.
ராம்கி, சுகந்தா, ரோஸ் போன்ற நிலைத்துவிட்ட மாந்தர்கள், அருண், சுசி, சந்திரா மற்றும் அம்மா.

கதை முழுதும் கொஞ்சப்படுகிற சுசி, காதலை தவிர எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அரிய பெண். மற்றவர்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக்கொள்ளும் எளிய, நம் வாழ்வில் அனுதினம் சந்திக்கும் நபர்கள்.

அடிக்கடி நீங்கள் கூறுவது போல், அனல் காற்று, உங்கள் படைப்புகளில் புது வார்ப்பு. புது களம்; உரையாடல்கள். ஜோ பேசும் வரிகளில் மட்டும் கிண்டலும், எள்ளலும் ஊறிக் கிடப்பது தேர்ந்த திறனின் வெளிப்பாடு.

இக்கதையை பாலு மகேந்திரா படம் செய்ய எத்தனித்தார் என்று சொல்லி இருந்தீர்கள். இந்த கதைக்குத்தான் தமிழ் வேண்டுமே தவிர, விஷூவலுக்கு மொழி தேவையில்லை. காட்சிபடுத்தலுக்கு அபூர்வமான வார்த்தைக்கூறுகளை முயன்று வெற்றியும் கண்டிருக்கிற இயக்குனர்கள் பலர் உலக திரைப்பட வரலாற்றில் உண்டு.

சொல்லப் போனால், இக்கதையை ஓர் அழுத்தமான, வசனங்கள் குறைந்த, அடர்த்தியான திரைப்படமாக பார்க்கும் ஆசையில் யார் அந்த ஆளுமை என்று என் குறைந்த சுவை அனுபவத்தில் தேடி நிற்கிறேன். ஏன், கமல் ஹாசன் தன் படைப்பு திறனின், பாசாங்கற்ற உச்சத்தில் இருந்த போது செய்திருக்கக் கூடிய முயற்சியே 'அனல் காற்று'.

பலர் காண்பது போலல்லாமல், ஆணின் காமமாக மட்டும் இக்கதையின் அமைப்பு தோன்றவில்லை. மிக எளிய, இரு பாலருக்கும் மிக மிக பொதுவான காதலும், காமமும், காமம் தோன்றும் ஊற்றுக்கண்ணாக சுயநலமும், இன்னும் பல எளிய, தொன்மையான திரையிடப்படாத உணர்ச்சிகளுமே 'அனல் காற்றை' நாம் திகைப்புற வீசி செல்லும் படைப்பாக ஆக்கியிருக்கிறது.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு, என்னை ஈர்த்த 'அனல் காற்றின்' சில வரிகள் (சில, அமரத்துவம் ததும்பும் அழகு):

"புதிய வெயிலில் நீராடிய பெருநகரம் என்னை நோக்கி பெருகி வந்தது.

உன் உடல் வழியாக ஒவ்வொரு கணமும் புத்தம் புதிதான பேரழகுடன் நிகழ்ந்துகொண்டிருந்தாய். ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு பெண்ணை உன் உடலில் கண்டபடி கண்கள் மட்டுமே நானாக பிரமித்து அமர்ந்திருந்தேன். சுசி, எத்தனை நூறு அழகுபாவனைகளின் தொகுப்பு பெண்!

பெண்மையின் முடிவிலா ஜாலங்களில் சிக்கி அழிவதையே ஆணுக்கு இன்பமென வைத்திருக்கிறான் உலகியற்றிய முட்டாள்.

உன்னைப்போல் சிந்தனையிலும் சிரிப்பவர்கள் ஆசீர்வதிக்கபப்ட்டவர்கள்.

நெஞ்சில் இல்லாத புன்னகையை முகத்தில் வரவழைப்பதென்பது எத்தனை சிரமமானது…

மிக நெருக்கமாக ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட கணங்கள். பின்னால்செல்லும் ஆட்டை முட்டி முன்னால்தள்ளி நகரும் ஆட்டுமந்தைபோல காலம்…

நாம் மிக நேசிக்கும் ஒருவருக்கு நாமளிக்கும் ஆகச்சிறந்த பரிசே அவர் மிக விரும்பும் ஒரு நடிப்பைத்தான் இல்லையா?

நீ என்னைத் தொட்டிருந்தால் நீர்த்துளி சிறு தொடுகையில் உருவழிவதுபோல் நான் உடைந்திருப்பேன்.

இப்பூவுலகில் இதுவரை மலர்ந்த பெண்களிலேயே நீதான் பேரழகி என்று சற்றும் ஐயமின்றி நான் உணர்ந்த தருணங்கள் எனக்காக உருவாகிக் கொண்டிருந்தன அப்போது…

சொற்களில்லாமல் இரு தொலைபேசிகளுக்கு அப்பாலும் இப்பாலும் சில கணங்கள் நின்றிருந்தோம்.

தன் அம்மாவையும் மனைவியையும் ஒரே சமயம் சேர்ந்து காணும்போது ஆண் ஒரு விசித்திரமான மனக்குழப்பத்தை அடைகிறான்.

காமத்தால் அலைக்கழிக்க விதிக்கப்பட்ட ஆணை அனைவருமே மன்னிக்கத்தான் வேண்டும் சுசி.

ஆண் மனதின் நுண்ணிய மென்பகுதியில் அறைவதற்கு நீ கற்றிருக்கவில்லை. சுசி, அது ஆணுடன் நெருக்கமாக பழகிப் பழகி பெண்கள் கற்றுக்கொள்வது.

மண்ணில் எதையும் நியாயபப்டுத்திவிடலாம். கொஞ்சம் கண்ணீரும் கொஞ்சம் சொற்களும்போதும்."

நன்றி, ஜெயமோகன்.

Sunday, February 15, 2009

"நான் கடவுள்" - ஒரு விமர்சனம்


சிங்கப்பூரில் பார்த்த இரண்டே கால் மணி நேர படத்தில் (மூன்று பாடல்கள் இல்லை; மற்ற எதெல்லாம் இல்லை என தெரியவில்லை) முதலில் எழுந்த எண்ணங்கள் முதலில்:

பாலா இன்னும் கொஞ்சம் சீரியஸ் -ஆக எடுத்திருக்கலாமே? பிச்சைக்காரர்களின் வாழ்வு பரிதாபம் ஊட்டவில்லை சரி. ஆனால் வேடிக்கையாகவும் இருந்திருக்க வேண்டாமே? ஏறக்குறைய அனைத்து முக்கிய கட்டங்களிலும் நகைச்சுவை மிளிர பேசுவது காட்சியின் அடர்த்தியை குறைக்கிறது.

அகோர கால பைரவன் என்றால் அடித் தொண்டையில் ஏன் பேச வேண்டும்? அம்சவல்லி பிச்சை எடுக்கும்போது பாடும் பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் ஏன் அந்தந்த ஒரிஜினல் பாடல்களாக இருக்க வேண்டும்? ஏன் அந்த கதா பாத்திரத்தின் குரலில் இருந்திருக்க கூடாது?

ஏழாம் உலகம் படித்து விட்டு படத்தை பார்ப்பதிலும் ஒரு சிக்கல்.
கோலப்ப பிள்ளையின் நார்மல் முகம், தந்தை முகம், கணவனின் முகம் என பல நினைவுகள் ஓடுவதை படம் பார்க்கும்போது தவிர்க்க முடியவில்லை - அந்த முகங்களுக்கும் அவரின் தொழில் முகத்திற்கும் உள்ள முரணே அந்த கதையில் இருந்த ஷாக் வேல்யு. தாண்டவனின் அந்த முகங்கள் இல்லாதது கதையின் பிடிமானத்தை அசைக்கிறது. ஒரு வேளை ஏழாம் உலகம் படிக்காமல் பார்த்திருந்தால் வேறு மாதிரி படுமோ என்னவோ?

ருத்ரனுக்கு கஞ்சா குடிப்பதையும் நீரில் மூழ்கி எழுவதையும், பல வித நிலைகளில் யோகம் புரிவதையும் தவிர (கிளைமாக்ஸ் தவிர) வேறு அழுத்தமான உணர்வுகளை உண்டாக்கும்படி காட்சிகள் இல்லாமலிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

'நான் கடவுள்' என்ற பதத்திற்கு இன்னும் கதை மாந்தர்கள் மூலமாக நிகழ்வுகளையும், விளக்கங்களையும் கொடுத்திருக்கலாமோ?

காசியின் அந்த அசாதாரண சூழலுக்கும் தாண்டவனின் அந்த பிச்சை கிடங்குக்கும் இடையே ஏதோ ஒரு இணைப்பு இழை ஓடுகிறது என்றாலும் சூக்குமமாக அதை புரிந்து கொள்ள முடியவில்லை.

பின் பாதியில் வரும் காட்சித் தளங்களில் மாற்றம் இல்லாமல் ஒரே படிக்கட்டு, கற்கள், புதர்கள், ருத்ரன் வசிக்கும் பாழடைந்த கோவில் என்றிருப்பது வெறுமை கூட்டுகிறது.

இனி, இப்படி ஒரு கதையை சொல்ல பாலாவால் மட்டுமே முடியும். ஜெயமோகனின் வசனங்கள் கூர்மை; ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு அற்புதம்; இளையராஜா - முற்பாதியில் தோற்கருவிகளும், சிம்பல்சும். பிற்பாதியில் வயலின்களின் சாம்ராஜ்யம். ராஜா கொண்டுவந்திருக்கும் தொழில் நுட்பம், காட்டியிருக்கும் நேர்த்தி மற்றும் கதையின் புரிதலும் அழுத்தமும் மிக மிக உயர்தரம். இன்று இந்திய இசை சூழலில் இந்த படத்திற்கு யாராவது இசை அமைத்திருக்க முடியுமா என்று எடை போட்டால் கிடைக்கும் பதிலில் ராஜாவின் மேதமை தெரிந்து விடும்.

இன்னும், ஒப்பனை கலைஞர்களின் உழைப்பு மெச்சும்படி.

"வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்; வாழ கூடாதவர்களுக்கு தரும் மரணம் சாபம்" - இந்த கான்செப்ட் தெளிவுபட சொல்லப்பட்டிருப்பதாக எண்ணலாம். ஆனால் மரணம்தான் இயலாதவர்க்கும், கூடாதவர்க்கும் விடையா? வாழ்தல் என்பதற்கு என்ன பொருள்?

ஒரு வேளை, ருத்ரன் என்பதால்தான் மரணம் விடையோ?

Saturday, February 14, 2009

Letters to Jeyamohan - 4

அன்புள்ள ஜெயமோகன்,

சில கருத்துகள் தீவிரமாக இருந்த போதிலும், உங்கள் பதிவில் இருக்கும் மத, மொழி தாண்டிய நேர்மை சுடுகிறது. அத்தனையும் சத்தியம். போன வாரம் தன் சாரு நிவேதிதாவின் 'இந்தியா குப்பை; தேறாது' என்னும் பதிவை ஏறிட நேர்ந்தது.
வயிறு எரிந்தது.

இன்னும் கொஞ்சம் ஆழ்ந்த தேடுதலோடு இந்த பதிவை நீங்கள் முன்னகர்த்த வேண்டும் என்பது என் விருப்பம்.
கூறியிருக்கும் வெளி சக்திகள், ஆயுத பண பலங்கள், இங்கு குழி தோண்டும் 'நமது சொந்த சகோதரர்கள்', மற்றும் போலி அறிவு ஜீவிகள் அனைத்திற்கு நடுவிலும் ஒரே பலம், நாமும் நம்மை போன்ற என் நாட்டை நேசிக்கும், அதன் பண்பை விரும்பி போற்றும் மக்களே பெரும்பான்மை என்பதே.

"ஒரு தேசத்தின் அறிவுஜீவிகளில் பெரும்பான்மை அந்த தேசத்தின் பாரம்பரியத்தை அழிக்க எண்ணுவதும் ,அதுவே முற்போக்கு என்று அங்கே நம்புவதும் வேறு எந்த தேசத்திலாவது உள்ளதா?" - ஒரு கொடுங்கோன்மை தேசத்திலோ அன்றி வறிய செயலற்ற அன்றி கருத்து சுதந்திரம் சிறிதும் அற்ற ஒரு நாட்டிலோ இவ்வகையான நிலை நீடிப்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்நாடு அழிகிறது, அடக்குமுறை தாண்டவமாடுகிறது என்பதற்கு நேர்மையற்ற அழிவு சக்திகளால் என்ன ஆதாரம் கொடுத்து விட முடியும், அவர்களது "ஒருவரை ஒருவர் சொரிந்து கொள்ளும்' சுகத்திற்காக செய்வதை தவிர?

மிக்க உணர்ச்சி பூர்வமாகவெல்லாம், "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணை இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை" என்றெல்லாம் கூவ வேண்டியதில்லை.

பொருளாதார, அரசியல் சமூக ரீதியின் படி பாரதம் இன்னும் இருபது வருடங்களில் உலகின் இரண்டாவது பெரிய வர்த்தக மையமாக திகழும் ( சீனத்திற்கு அடுத்தபடி) என்பதை ஐஎம்எப், உலக வங்கி, ஆசிய முன்னேற்ற வங்கி, யுஎன் எனும் கருத்து கூடங்களும், அமெரிக்கா உள்ளிட்ட (இவர்களுக்கு சொறிவதற்கு கூலி கொடுக்கும் முதலாளிகள் உட்பட) அனைவரும் ஏற்று கொண்ட ஒரு நிதர்சனம்.

இவர்களின் அறைகூவல்கள், சதி வேலைகள், பரப்பு கூலிகள் எல்லாம் கடந்த அறுபது வருடங்களாக தொடர்ந்த போதிலும், பாரதம் எவ்விதத்திலும் சளைக்கவில்லையே; நமது விஞ்ஞான, பொருளாதார வளர்ச்சி சுனங்கவில்லையே;

இந்த சக்திகளை பாரதம் அடி பணிய செய்யும்.
அது காலத்தின் கட்டாயம்.

சரவணன்

Letters to Jeyamohan - 3

அன்புள்ள ஜெயமோகன்,

வர வர, எழுத்தாள இடைவெளி குறைந்து, பலரும் தோழமையும், வழிக்காட்டுதலும் தேடி அணுக்கமாய் உணரும் தளத்துக்கு செல்கிறீர்கள் என தோன்றுகிறது.

"அக்காலகட்டத்தின் களியாட்ட மனநிலையை பின்னர் நான் அறிந்ததே இல்லை. இளமையும் கலைகளும் கலந்து உருவான போதை அது" -

அட, என்ன ஒரு அற்புதமான வெளிப்பாடு!

பலரும் அவரவர் உணரும் தருணங்களை, அவற்றின் நுணுக்கமான ரசனைகளை, கால ஓட்டத்தில் மாறும் சுவை வேறுபாடுகளை வெளிப்படுத்த அறியாதவர்கள். அல்லது அந்த சுவைகளை பதியலாம் என்பதே தெரியாதவர்கள்.

நான் நினைக்கிறேன், அவர்களுக்கெல்லாம் உங்களின் இத்தகைய பதிவுகள் உணர்வு பூர்வமான வடிகால் மட்டுமல்ல, மீண்டும் வாழ்வை திரும்பி பார்த்து சுவை கூட்டிகொள்ளும் கிளர்ச்சியையும் தருமென்று.

நான் உட்பட, எத்தனை பேர் ஒத்த நண்பர்களுடன் இளமை வேகத்தில், கலைகளில் சுவையுடன், சாதிக்கும் கனவுகளுடன் எத்தனைஎத்தனை பேசியிருப்போம், எத்தனை நெகிழ்வோடு அந்த பருவத்தை கடந்திருப்போம் என்பன போன்ற எண்ணங்கள் ஒரு மின்னல் நொடியில் எனக்குள் ஒளிர்ந்தது, அந்த வரிகளை படித்த போது.

நன்றி, ஜெயமோகன்.

Letters to Jeyamohan - 2

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் 'வேராழம்' கண்டேன். எண்ணக்குவியல்களை கிளறிய பதிவு.

ப்ரீ யு.கே.ஜி காலத்துக்கு முன்பிருந்தே (ஒரு வயது?) என் நினைவுகள் மிகத் துல்லியமாக என்னை தொடர்கின்றன. பெரிதும், என் அம்மா அப்பாவின் நண்பர்கள், நாங்கள் குடியிருந்த அத்தனை வீடுகள், அவற்றின் போர்ஷன்கள், அங்கிருந்த குடும்பங்கள், வீடிருந்த தெருக்கள், மணங்கள், கேட்ட பாடல்கள், வைத்திருந்த பொருட்கள், தோழர் தோழிகள், செய்த பாலியல் சேட்டைகள் (நம்ப மாட்டீர்கள்!), அனைத்தும் - நீங்கள் சொல்வது போல், நினைவு கூர்ந்தால் மீட்டெடுக்க முடியாத வாழ்வின் கட்டமே இல்லை எனலாம். பின்னாளில் இவற்றை நான் சொல்லும் போதெல்லாம், என் தாய் தந்தை தவிர, என் தம்பி ஒரு நம்ப முடியாத பாவனையுடன் கேட்டதும் நினைவில் இருக்கிறது.

தாங்கள் Sigmund Freud படித்திருப்பீர்கள். அவரது வாழ்விலும் நினைவுகள் ஆறு மாதத்தில் துவங்குகின்றன. பெரிதும் அவை பாலியல் அடையாளக் (தன் தாயினதும் உட்பட) கூறுகளை ஆராய்தல், இருப்பை உணர்தல் மற்றும், சூழலின் வகைகளை உணர்தல் என்றே நினைவுகள் ஆரம்பிப்பதாக அவர் கூறியிருக்கிறார். இரண்டு வயதில் மேசை மீதிருந்து கீழே உணவை எடுக்க எட்டி, விழுந்து கீழ் தாடையில் தையல் இட்டதைப் போல.

இளைய பதிவுகள் என்னவோ அனைத்து மாந்தருக்கும் பொதுவென தோன்றுகிறது; ஆயினும், அந்நினைவுகளை பின்னாளில் மீட்டெடுப்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அக்காரணங்களையும் அவர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார் (சில நம்மளவில் ஏற்க முடிவதில்லை என்றாலும்).

சரவணன்

Letters to Jeyamohan- 1

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. நிறுத்தாமல் எழுதிக் கொண்டிருப்பதற்கு நடுவிலும் பதிலனுப்ப தீவிரமான கடப்பாடு இருக்க வேண்டும்.

கடைசிக் குடிகாரன் பதிவு படிக்கும்போதே பல கிளைகளாக பிரிந்து சென்றது. பெருமிதமும் சுய நம்பிக்கையும் கொண்டிருப்பவர்கள் பலரும் வாழ்வின் பற்பல தருணங்களில் பிறரிடமும், தன் ஆளுமையில் இல்லாத சூழ்நிலையிடமும், ஏன், தன்னிடமே கூட தோற்க நேரிடுகிறது. இந்த பதிவு சொல்வதில் அது ஒரு கிளை.

சுயத்தை வெல்லச் செய்யும் முயற்சிகள் சுயத்தினுடாக அல்லவா இயலும்? சுயத்தை இழப்பதற்கும் தன்னைப்பற்றி தான் கொண்டிருக்கும் பெருமிதத்தில் இருந்து சரிவதற்கும் உள்ள தொடர்பானது, பல நேரங்களில் நம்மை நாமறியாமலே தடுக்கிறது; மீட்கிறது. இந்தப் பதிவில் அது ஒரு கிளை.

கேட்பதற்கு செவிகளும், சாய்வதற்கு தோள்களும் இல்லாத நிலை எத்தனை கொடுரமானது! நம் வாழ்வில் நாம் கடந்து வந்த அதே போன்றதொரு நிலையில் மற்றொரு உயிர் கண் முன்னே தவிப்பதின் வலி எத்தனை பேருக்கு புரியும்? அதுவும், ஒரே நேரத்தில் நாம் துடிப்பதை போலவே அந்த உயிரும் வதைபடுவதை காண்கையில், மற்ற அனைத்து பிடிமானங்களும் கற்பிதங்களும் இழந்து போய், நாம் அவனாகவும், அவன் நாமாகவும் உணர முடிவது ஓர் உயரிய சாத்தியம்.

கடைசி குடிகாரன் செல்லும் முக்கியமான கிளை இது எனப்படுகிறது. அந்நிய தேசத்து நாய் நம்மூர் தெருவில் கூசி நடப்பது, விளக்கு கம்பங்களின் நிழல் தெருவில் ஓடிச்சென்று மறைவது, நாயின் துணை, படபடத்து அமையும் பாலிதீன் சருகு, உள்ளே செல்லும் எறும்பா வெளியில் வருவது.....

உங்களால் முடியாத காட்சிப்படுத்தல் இல்லை எனலாம்.

நன்றி, ஜெயமோகன்.

Pandit Venkatesh Kumar and Raag Hameer