Saturday, April 17, 2010

வைபவம்

மேம்பாலம்
முழுக்க அலைமோதும்
கூட்டம்
வைகையின்
எப்போதுமே நீரற்ற
பரப்பில்
கள்ளழகர்
குதிரையிலிறங்கும்
வைபவம் காண
பக்கத்து கிராம
தகப்பனின் தோள்களில்
வந்து
பலூன் வாங்க
இறங்கி
திரளில் தொலைந்த
குழந்தையாய்
நான்

- 28/12/89

என்றாலும்

யாருக்காவது
புரிந்து விடுகிற
ஒரு கவிதையை
படைக்கிற துடிப்பு
எனக்குள்ளே
இன்னும்
என் சிதறல்களை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது

முற்றுப் பெறாத வாசகங்கள்
மோனங்கலையாத உறவுகள்
என
என் வெளிப்பாடுகள்
தொடர்ந்த போதும்

- 28/12/89

Monday, April 12, 2010

யாராம்

பாலாடையின் மேல்பரப்பு
மெல்லிய மிக
மெல்லிய காற்றில்
மிருதுவாய் சலசலப்பதை
கண்டும்

அரைக் கோவணத்தின்
சுதந்திரத்தோடு
தூண்டில் வீசி
வெயில் காயும்
சிறுவர்களை
ரசித்துக் கொண்டும்

இழப்பு எது
மீட்பு எது
என்றே தெரியாத
பாவனையோடும்
நான்


இழத்தல் ஏன் மீட்சியில்லை
மீட்பு ஏன் இழத்தலில்லை
எனும் இறுக்கம் கொள்கையில்
நிகழ்வின் தொடர்வில்
என் பங்கு ஏதுமில்லை
எனப் புரிந்தது

- 28/12/89

முகத்திரை

அகந்தைகளாலும்
அவமானங்களாலும்
அடைக்கப்பட்டிருந்த
கம்பிகளை விளக்கி
வெளியே பார்த்தேன்
ஒரு நாள்

எதிரே ஒரு நான்

மலைத்து பார்த்த
என்னை
எள்ளி நகையாடி
அவன் செய்த காரியங்கள்
இதுவரை
நானாடி வந்திருக்கும்
வேடத்திற்கோ
சிறிதும் பொருத்தமில்லை

எதிர்க்க முயன்ற
என் முகத்தில்
ஓர் அடி விழுந்தது

வேடத்திற்குள்
இன்னொரு வேடத்தின்
அவசியம்
புரிந்தது போலிருந்தது

மறுகணம்
விலகிய கம்பிகள்
இறுக
சாத்திக் கொண்டன
சிறிதே
குற்றவுனர்ச்சியுடன்
பத்திரமாக நான்
மறுபடியும்
- 28 / 12 / 89

அவள் நினைவுகள்

இருண்ட சந்துகளில்
குருடனாய்
கைத்தடியின் சத்தம் மட்டும்
அவ்வப்போது முனகுவதாய்
முன்னேயும் பின்னேயும்
ஆளின்றி
நடந்து போகும்
நானறியாது
இதோ
இச்சுவர்களிலும்
இழுத்து அடைக்கப்பட்ட கதவுகளிலும்
தரையிலும்
என்னைத் தொடர்ந்து வரும்
நிழலே
போய்விடு போ போய்விடு

என் பாதையே
நானறியாத போதில்
எங்கே நான்
சுமப்பது உன்னை

இருள் கவிந்த
கண்களுக்குள்
நிழல் துணை உணர்ந்து
புன்னகை மலரும்

கவனம் சிதறி
கண்ணீர் வர
விழும் வேளையில்
நீயொரு சுமை

போ போய்விடு

நிழலுமற்ற தனிமை
நான் மட்டுமே துணை
அடர்ந்த இரவுகளிலும்
என்னருகே இருக்க
நீ காட்டும்
விசுவாசம் கருதி
சில போதும்
விழத் தயாரில்லை

இந்த குருடனை
அந்தகாரத்தில் வாழவிடு
அதற்குள்
என்னை அரசாள விடு
நிஜன்தேடி நிழலணைக்க
ஆகாது

போ போய்விடு

- 26 / 10 /89

Sunday, April 11, 2010

கரிய தேவதைகள்

துர் அதிர்ஷ்டத்தின்
அழகிய கறை படிந்த
என்
கரிய தேவதைகள்
நான் போகுமிடமெல்லாம்
தொட்டுவிடப்போவதாய்
பாவனையில்
தொடாமல் ஒரு சரசம்
சிக்கிக் கொள்வதாய்
நிகழ்வில்
சிக்காமல்
மகிழ்ந்து கொண்டு நான்

எனத்
தொடர்கிறது

கறைகளை
அர்த்தப்படுத்திக் கொள்ள
தெரிவதோடு
முடிந்துவிடவில்லையோ
என் தேவதைகளின்
தொடர்வுகளை
அலட்சியப்படுத்தும் வழியாய்
கறைகளை
கண்களாக்கிக் கொண்டேன்

இனியெல்லாம்
இனிய கருமை
தொடாமலே விடுபட்டுப் போகும்
அன்றி சிக்குண்டு மூச்சிறும்

- 11 / 10/ 93

பாவத்தின் சம்பளம்

வடிக்கப்படாமல்
மடிந்து போகும்
கவிதைகளுக்காய்
இதயம்
இனிமையற்றுப் போன
இரவுகளில்
இரத்தம் சிந்துகிறது


மரணிப்பதற்கா வாழ்வு
முயற்சிகளும்
முயங்குதலும்
முகிழ்ச்சிகளும்
அர்த்தமறுமா

போற்றிக்காத்து
மயங்கிச் சுமந்து
குருதிச் சதைப்பிண்டமாய்
செத்து விழும்
குறைப் பிரசவமா

ஆமெனில்
இங்கு கலவி எதற்கு

இல்லாத பொருள் கூறாதீர்

விழிகளுக்காக
காத்துக் கிடக்கிற
காட்சிகளும்
வீழ்ச்சிகளுக்காக
உயர்ந்து கொண்டிருக்கிற
உன்னதங்களும்
அதிகமிங்கு


வாழ்வதற்குள் முடிந்துவிடும்
முடிவதற்குள் வாழ்ந்துவிடு

கைகளுக்கு
கத்திகளையும், கீதைகளையும்
தயக்கமின்றி
பழக்கிவிட்டேன்
இனி,
பயமின்றி இருக்கலாம்
இறக்கலாம்

- 29 /01 /92

Pandit Venkatesh Kumar and Raag Hameer