Saturday, April 17, 2010

மனமுவந்து

சரிந்து விழுந்த
சாம்ராஜ்யத்தில்
அங்கே கிடப்பதுவும்
ஒரு கோட்டை

நானும் திறமையாகத்தான்
ஆடினேன்
இது முதல் அல்ல

அத்திறமையான
ஆட்டத்தை
குறிவைத்து
மெதுவே என்
முனைவுகளை குறைத்து
மூலைகளை அடைத்து
என்னை
முதல் தவறு செய்ய விட்டு
காய் நகர்ந்ததும்
இலக்கு மாறாமல் தொடுத்து

மிகத் திறமையான
ஆட்டம் தான்

ஏமாற்றி விட்ட
அந்த நகர்விற்காக
எதிராளியை
பாராட்ட வேண்டும்தான்
அங்கே
வீழ்ந்து கிடப்பது
என் கோட்டையாக
இருந்த போதிலும்

- 15/01/90
காத்திருத்தல் -

அறுந்து தொங்கும்
ஒற்றையிழை
சிலந்தியாய்
அதன் ஏறலாய்

- 10/01/90

சந்தர்ப்பம்

ஒவ்வொரு நாளும்
ரயில் நிலைய
பாலத்தின் படியேறுகையில்
பார்ப்பேன்
அந்தக் கிழவியை

மடிந்த மெலிந்த
கால்களின் முன்
என்றோ அவளுடல்
மீதிருந்த சாட்சியாய்
ஓர் அழுக்கு புடவை
விரித்திருக்க
எப்போதுமே
காலியாய் கிடக்கும்
அந்த தகரக்குவளையோடு
சூம்பிய கைகளில்
ஓரிரு சில்லறைக்காசுகள்

ஒவ்வொரு நாள்
படியேறும்போதும்
காசு போடணும் என்று
நினைப்பேன்
நேரமோ மனமோ
இருந்ததில்லை

இன்று
தீர்மானித்து
காசெடுத்து
போட்டு நிமிர்ந்தால்
விரித்த துண்டின் முன்
யாரோ

- 28/12/89

வைபவம்

மேம்பாலம்
முழுக்க அலைமோதும்
கூட்டம்
வைகையின்
எப்போதுமே நீரற்ற
பரப்பில்
கள்ளழகர்
குதிரையிலிறங்கும்
வைபவம் காண
பக்கத்து கிராம
தகப்பனின் தோள்களில்
வந்து
பலூன் வாங்க
இறங்கி
திரளில் தொலைந்த
குழந்தையாய்
நான்

- 28/12/89

என்றாலும்

யாருக்காவது
புரிந்து விடுகிற
ஒரு கவிதையை
படைக்கிற துடிப்பு
எனக்குள்ளே
இன்னும்
என் சிதறல்களை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது

முற்றுப் பெறாத வாசகங்கள்
மோனங்கலையாத உறவுகள்
என
என் வெளிப்பாடுகள்
தொடர்ந்த போதும்

- 28/12/89

Monday, April 12, 2010

யாராம்

பாலாடையின் மேல்பரப்பு
மெல்லிய மிக
மெல்லிய காற்றில்
மிருதுவாய் சலசலப்பதை
கண்டும்

அரைக் கோவணத்தின்
சுதந்திரத்தோடு
தூண்டில் வீசி
வெயில் காயும்
சிறுவர்களை
ரசித்துக் கொண்டும்

இழப்பு எது
மீட்பு எது
என்றே தெரியாத
பாவனையோடும்
நான்


இழத்தல் ஏன் மீட்சியில்லை
மீட்பு ஏன் இழத்தலில்லை
எனும் இறுக்கம் கொள்கையில்
நிகழ்வின் தொடர்வில்
என் பங்கு ஏதுமில்லை
எனப் புரிந்தது

- 28/12/89

முகத்திரை

அகந்தைகளாலும்
அவமானங்களாலும்
அடைக்கப்பட்டிருந்த
கம்பிகளை விளக்கி
வெளியே பார்த்தேன்
ஒரு நாள்

எதிரே ஒரு நான்

மலைத்து பார்த்த
என்னை
எள்ளி நகையாடி
அவன் செய்த காரியங்கள்
இதுவரை
நானாடி வந்திருக்கும்
வேடத்திற்கோ
சிறிதும் பொருத்தமில்லை

எதிர்க்க முயன்ற
என் முகத்தில்
ஓர் அடி விழுந்தது

வேடத்திற்குள்
இன்னொரு வேடத்தின்
அவசியம்
புரிந்தது போலிருந்தது

மறுகணம்
விலகிய கம்பிகள்
இறுக
சாத்திக் கொண்டன
சிறிதே
குற்றவுனர்ச்சியுடன்
பத்திரமாக நான்
மறுபடியும்
- 28 / 12 / 89

Pandit Venkatesh Kumar and Raag Hameer