Sunday, April 11, 2010

பாவத்தின் சம்பளம்

வடிக்கப்படாமல்
மடிந்து போகும்
கவிதைகளுக்காய்
இதயம்
இனிமையற்றுப் போன
இரவுகளில்
இரத்தம் சிந்துகிறது


மரணிப்பதற்கா வாழ்வு
முயற்சிகளும்
முயங்குதலும்
முகிழ்ச்சிகளும்
அர்த்தமறுமா

போற்றிக்காத்து
மயங்கிச் சுமந்து
குருதிச் சதைப்பிண்டமாய்
செத்து விழும்
குறைப் பிரசவமா

ஆமெனில்
இங்கு கலவி எதற்கு

இல்லாத பொருள் கூறாதீர்

விழிகளுக்காக
காத்துக் கிடக்கிற
காட்சிகளும்
வீழ்ச்சிகளுக்காக
உயர்ந்து கொண்டிருக்கிற
உன்னதங்களும்
அதிகமிங்கு


வாழ்வதற்குள் முடிந்துவிடும்
முடிவதற்குள் வாழ்ந்துவிடு

கைகளுக்கு
கத்திகளையும், கீதைகளையும்
தயக்கமின்றி
பழக்கிவிட்டேன்
இனி,
பயமின்றி இருக்கலாம்
இறக்கலாம்

- 29 /01 /92

- Ve

நகராமல்
நின்று கொண்டிருக்கிறதோ?

ஆம்
காலம் அசைவற்று
இரைவிழுங்கி கிடக்கிறது

கால் தேடுகையில்
சிறகு முளைக்கும்
எத்தனங்கள்

கனவுகளின்
நாட்குறிப்புகள்
நிகழ்வுகளில் தானே
எழுதப்பட வேண்டும்

நான்
வென்றுவிட வேண்டும்

காலம் உறங்குகிறது


செஞ்சாந்து சுடர்
எழுமுன்
விழித்துக்கொள்ள வேண்டும்

- 15 /01 / 92

எங்கெங்கு காணினும்

அதுபோன்ற ஊர்வலங்களில்
கலந்து கொண்டு பழக்கமில்லை
என்று சொல்லியிருந்தும்
அழைத்து சென்றார் நண்பர்

பார்த்ததும்
வெளியே தினத்தந்தியோடு
போட்டிருந்த பெஞ்சு எழுந்து
கைகுலுக்கிய பழைய நண்பர்கள்
சேமநலம் விசாரித்து
டீக்குடிக்கும்போது
மாலை மூன்று மணி

போதிய கூட்டம் சேர்ந்தது
சைக்கிளுருட்டி
மெதுவே பேசி நடந்தோம்
'பழைய பாட்டுகள் தான் அருமை'
வாதிட்டார் அன்று பழக்கமானவர்
என்னோடு அணிசேர்ந்து
புதுபாட்டுக்கோ ஓரிருவர்

நடந்து கொண்டிருந்தோம்

வந்து சேர்ந்து விட்டோம்
ஏற்பாடுகள் முடிந்ததும்
எங்கிருந்தோ ஓர்
அழுகுரல் கேட்க
அமைதியாக
ஒருநிமிடம் நின்றோம்

- 14 / 01 /92

என்னைப்பற்றி

ரோட்டோரத்தில்
குழம்பின நிறமாய் ஓடும்
மழை நீரில்
துளி விழுந்து எழும் குமிழ்
உடையாமல்
எவ்வளவு தூரம் போகும்

ஊர்தெரியாமல்
போகும் ரயிலிலிருந்து
நான் போட்ட
காற்றின் வேகத்தில் சுழன்று
அடித்தளம் மறையும்
அலுவல் காகிதம்
எத்தனை நாள் அங்கே கிடக்கும்
பத்து நாட்களில் என்னவாகும்


கழுநீர்த் தொட்டியை
முகர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்
காக்கை குத்திய
கழுத்து புண் சுமந்த மாடு
அதன் கண்ணோர கண்ணீர்க் கறை?

பேருந்து இறங்கி
கரட்டோரம் சிறுநீர் கழித்து
பூத்திருந்த செடி
அடுத்த தடவை வந்தால்
ஞாபகம் வைத்துக்கொள்ள வேணுமாய்
நினைவில் பதிக்கும் அந்தச் சின்னப் பூ?

வாழ்க்கை அப்படித்தான்

- 13 / 01 / 92

சாதனைகள்

எல்லோரும் பார்க்காதீர்கள்
ஏனப்படி பார்க்கிறீர்கள்
உங்களில் யாரும்
அப்படியில்லாமலிருக்கிறீர்களா
பின் ஏன்

ஒருவேளை இருக்கலாம்
எனக்கு தெரியாது
இருப்பினும்
அப்படியொரு பார்வை
தேவையில்லையென்றே தோன்றுகிறது

முன்வந்து
நிதர்சனமாய் வெளிபடுத்திவிட்டு
ஒளிந்து கொள்ளுங்கள்
பரவாயில்லை

உங்களில் யாருக்கும்
துணிவில்லை
என்னைப் போல்

போகட்டும்

சற்றுநேரம்
தத்தம் நிர்வாணங்களை
இனி பாருங்கள்,
அடுத்து
என்னையப்படி பார்க்கும் வரை

- 13 / 01 / 92

நனவு மிச்சங்கள்

முகமற்றுப் போகப்போகிற
இரவுகளின் இறுக்கத்தில்
கண்ணீரில்
முகம்புதைத்துத் தூங்கியிருக்கிறேன்

தோள்களோ மெலிந்துபோய்
கையிடுக்கிலும் காலூன்றும்
கட்டைகளைக் காணோம்

முதுகும், கத்திகளும்
குருதிவழியும் புதைகுழிகளும்
இருண்ட முகங்களும்
அரட்டும் கனவுகளுக்காய்
நனவில் இரவு

எதிர்பார்ப்புக்கள்
புதைந்து கிடக்கும்
குழிக்குள்
கனவுப்புழுதியின்
மிச்சம் ஒட்டிய
முகமற்ற விரல்கள்
நடுங்கிக்கொண்டே நீளும்
உதவிக்கோ உட்தள்ளவோ

கண்மூடினாலும்
கருவிழியின் ஒளியில்
காலத்தை
கடந்தாலோசித்து விடுகிற
கலை மறந்து போனேன்
கனவு மறந்து போனேன்


என்
கால்களும் புதைகையில் அறிவேன்
உயிரற்று போவேன்
சுயமற்று போகும்முன்

- 29 /12 /91

சிரசு விரல்கள்

காவிய வார்த்தைகளின்
களங்கம் அற்று
மௌனத்தால் எனக்கு
மகுடம் சூட்டவந்த
நீ

Pandit Venkatesh Kumar and Raag Hameer