Sunday, October 2, 2011

இருள்

பகலின் கர்ப்பம்
வான வீட்டுக்கு வந்த
வரதட்சணையில்லா மருமகள்
சூரிய ஸ்பரிசத்திற்கு
காத்திருக்கும் அகலிகை
விண்வெளி வீட்டுக்கு
இரவில் அடித்த வர்ணம்
பகலில் வெளுத்த சாயம்

அச்சச்சோ
தொடுக்க வைத்திருந்த
முல்லை மல்லிகை கொட்டிய
தென்றல் 
வானமெங்கும்
பூப்பூவாய் மலர்த்தியது
அழகு பார்த்தது

மண்
தன இரவுமகளை
மணமுடிக்க ஏற்பாடு
எத்தனை அலங்காரம்
எத்தனை கும்மாளம்
கருப்பாக இருந்தாலும்
பொன்குஞ்சு அன்றோ
நிலவே தோழிப்பெண்
சிறுமிகளெல்லாம் வெண்ணிற உடையில்
சித்திரங்கள், நட்சத்திரங்கள்  
சிரித்து மகிழ
தலை குனிந்த இரவுப்பென்னை
யாரும் பார்க்கவில்லை

திருமண நேரம் நெருங்க
மணவாளன் அருகமர
மணப்பெண்ணின் கரிய முகத்திலும்
செந்நின்ற வெட்கம்

தென்றல்
மலர்களை காற்றோடு
அட்சதை தூவியது
குருவிகள் நாகஸ்வரம்
காக்கைகள் மேளம்
வானமெங்கும் ஊர்வலம்


சிறுமேக கூட்டங்களில்
சிங்கார மாப்பிள்ளை அழைப்பு
உயர உயர மரங்களிலெல்லாம் 
பந்தல் தோரணம்
இலைகளாடியது

மகளை கட்டிக்கொடுத்த 
மண்தாயின்
ஆயிரமாயிரம் கண்களில்
ஆனந்தக் கண்ணீர்
துளித்துளியாய்

கணவன் வீட்டுக்கு
சென்று மறைந்த
கண்மணி மகளை
காண்பதெப்போ?

- 12/09/85

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer