அன்புள்ள தோழி,
கொடி!
அது பற்றிப் படரும்; காற்றில் சஞ்சலமடையும்; புயலில் துடிக்கும்; தேர் தரும் பாரியை தேடும்.
நீ?
நீ கொடி போலவா? உனக்குள் இருக்கும் வண்ணங்கள் வியப்பூட்டுவன; உணர்வுகள் அதிர்வூட்டுவன. தவறாக கைபட்டால் எளிதில் உடைந்துவிடக்கூடிய மென்மையுடையதாய் தோன்றி, அதனால் தொடவே சிறிது அச்சத்தை ஊட்டக் கூடியவை, உன் பரிமாணங்கள்.
மென்மையானவள் நீ; ஈடு செய்யும் வகையில், உன் நேரடியான (அதனாலேயே எனக்கு மிகவும் பிடித்தமான) வெளிப்பாடுகளில் வன்மையானவள்; உண்மையானவள்.
கொடி பற்றிப் படரும்; நீயும் பற்றிப் படர்கிறாய். படரவும் ஆக்கி விடுகிறாய். உன் அன்பை இப்படியெல்லாம் வெளிப்படுத்த யாருனக்கு கற்றுக் கொடுத்தது?
உணர்பவை அனைத்தும் (இன்பமோ துன்பமோ) பகிர்ந்து கொள்ள நீ தேடும் சகம், அதிலுன் தேர்வு, உன் தீர்மானம், உன் பற்றுதல், நீ எதிர்பார்க்கும் வெளிப்பாடு, உன் limitations பற்றிய முன்கூட்டிய உன் தெளிவு...
சஞ்சலங்கள். எளிதில் பெண்கள் உணர்ச்சிவசப்படுவார்களாம். ஏன் விதிவிலக்குகள் இருக்கக் கூடாது? கோபப்படுகிறாய் அதிகம். ' சாதிக்க இயலாதவனே கோபப்படுவான்'. சொல்லியிருக்கிறேன். உன் கோபம் உன் குடும்பத்தையுமல்லாது என்னையும் சமயங்களில் கூர்பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது. கொடி கோபப்படக் கூடாது.
எங்கே உன் சுயம், வாழ்வுரிமை, லட்சியம் முதலியன பறிக்கப்படுமோ அங்கே உன் கோபம் தார்மீகமானது; அர்த்தமுள்ளது; வீரமானது.
மற்றும் பல உணர்ச்சிகள் உன்னில் எளிதில் தீவிரமாக தாக்குகின்றன. கவர்கிறாய், எளிதில் கவரப்படுகிறாய். உணர்வுகளால் விரைந்து எடுக்கும் எம்முடிவும் வேதனை தரும். தவறு! இவ்வுலகம் மிகச்சில நல்லவர்களையே கொண்டது. யார் மீதும் விரைந்து அன்புறுவதும் தவறு. அதிக எதிர்பார்ப்பு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்.
உன் அறிவு, உன் உலக ஞானம் கொண்டு நீ ஆராயக் கற்றுக் கொள்ள வேண்டும். எதிலும் எளிதில் மனம் பறிகொடாதே. (எவரிடமும்) முதலில், யார் எத்தகையவர், அவர் கண்ணோட்டம், லாப நஷ்டங்கள் எடைபோட பழகு. சுயநலமியாய் இரு. இவ்வுலகில் சுயநலமில்லாமல் வேறொன்றுமில்லை.
கல்வியில் உன்னார்வம் என்னை மகிழ்விக்கிறது. மென்மேலும் நீ கற்க வேண்டும். உன் எல்லைகளை விரிவுபடுத்தும் தருணமிது.
இரசனைகள் இயற்கையானவை. எனவே, இன்பமானவை. ஒரு கவிதையோ, உரைநடையோ அன்றி இரசனை குறித்த பேச்சோ உன்னிடம் வீசப்பட்டால் நீ சோர்ந்து போகிறாய். ஏன்? உலகியல் வாழ்வின் உயிர்நாடி இரசனை.
அதுவொன்றில்லாமல் நானில்லை.
எதையும் இரசிக்க வேண்டும். நீ துன்பமடையும் கணங்களிலும், சோக நிகழ்வுகளினின்று, வெளி நின்று, "இக்கணம் நம் வாழ்வில் ஒரு முறை வருவதை இருந்தால், இப்போதே இதை வாழ்ந்து விட வேண்டும்" என்று எண்ணி அனுபவி. இச்சக்தி எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனநிலை தரும்.
'நம்மை மீறி என்ன வரும்? என்னால் சாதிக்க முடியும். உயிரைத் தவிர பெரிதாய் வேறொன்றும் போய்விட முடியாது' போன்ற எண்ணங்கள் உன்னில் வளரவேண்டும். அவை, உன்னில் இப்போது காணப்படாத சகிப்புத்தன்மை, பொறுமை, வெல்லும் விடாமுயற்சி, முடிவில் இரசனை போன்ற, உன்னை மற்றவரிடமிருந்து தனித்து உயர்த்தக்கூடிய பண்புகளைப் பெற்றுத் தரும்.
உயரிய, தொலைநோக்கு மிகுந்த கொள்கைகள் உன்னில் குறைவு. இது உன் கல்விக்கும், சிந்தனை தெளிவிற்கும் பொருத்தமற்றதாய் இருக்கிறது. எப்படி வாழ வேண்டும், எங்கே, எவருடன், சாதனைகளின் குறிக்கோள், உன் கல்வி, உன் படிப்படியான வளர்ச்சி, உன் குடும்பம் பற்றிய முழுமையான திட்டங்களை நீ கொண்டிருக்க வேண்டும்.
இல்லையெனில், இப்பொழுது ஆரம்பி. சிந்தனைகளை பெரிதாக செய். எல்லைகளை தள்ளி வை. இலக்குகளை சிறந்தவையாய் நிர்ணயி. அதை அடைய பாடுபடும் வழிமுறைகள், தேவைப்படும் காலம், பொருள், மனித முயற்சி பற்றி திட்டமிட்டிருக்கிறாயா? இல்லையெனில், உடனே ஆரம்பி.
வேறே? உன் மென்மையும், பெண்மையும், அன்பும், பரிவும், கல்வியும், ஞானமும், உணர்ச்சிகளும் உயர்ந்தவை.
இவை இருக்கவேண்டிய இடம் இப்போது நீ இருப்பதல்ல.
நீ உயர வேண்டும்; மூட நம்பிக்கைகளுக்கு உடன்படாமல், இல்லறக் கட்டுப்பாடுகளுக்கு இடங்கொடாமல் , நீ உயர வேண்டும்.
செய்வாயா, எனக்காக?
சரவணன்
07/1990
No comments:
Post a Comment