மெல்லிய திரையொன்று
விலக,
நானும் நீயும்
அமர்ந்திருக்கிறோம்;
ஆச்சர்யம்
என்னை அமிழ்த்துகிறது
என் இவ்வளவு அருகே
உன்னை நான் சந்தித்ததில்லையே?
என் முகமருகே
குனிந்து
ஏதோ முணுமுணுக்கிறாய்
சிரித்தவண்ணம்
அசையும்
உன் இதழ்களையும்
மின்னுகிற உன் பற்களையும்
கவனித்து கொண்டிருக்கிறேன்
புரியாத மொழியுதிர்க்கும்
உன் இதழ் மூடும்
என் கைவிரல்
செந்நிற இதழ்களை
வருடுகிறது.
புன்னகை...
எப்படியோ
எப்போதோ
உன்னருகில் நகர்ந்து
கன்னங்களின் செம்மையை
துடைத்துவிடும்
முயற்சியில் ஒரு முத்தம்...
எனக்கு
அப்போதும் ஆச்சர்யமாயிருக்கிறது
நான்?
சிரிப்புகள் சத்தமற்று
பளீரிடும் புன்னகைக் கோர்வை
உன் கழுத்தின் பின்புறம்
பொன்னிற சிற்றிழை ஒதுக்கி
உன் குழற்கற்றைகள்
என் மார்புரச
கமழ்கிற மணம்
நுகர்ந்தொரு முத்தம்
வார்த்தைகளேயற்றுப் போன
உடல் முழுதும்
உன் அருகாமையில் இசைகிற
தவிப்புகள்
புன்னகைகளால்
இசைவுகளால் இயங்க
வாய்நுனி வரை
வந்து நிற்கிறது
'என் நேசம் நீ...
என் தேவை நீ...'
உள்ளுமையோ
உள்ளுணர்வோ
ஏதோவொன்று தடுக்கிறது
நீ சொல்லட்டுமென்று
உன் இசைவுகள்
என்னில் இசையாகும் போது
ஓசை என்ன முக்யத்துவம்
இதுவரை
அதிசயித்துக்கொண்டிருந்த எனக்கு,
உன் எதிர்பார்ப்பு நிறைந்த
குறும்பு கண்களில் மின்னுகிற
புன்னகை
வியப்பளிக்கவில்லை
....
யார் சொல்வார்?
- 11/07/1990
No comments:
Post a Comment