பகட்டு உடைகள்
பகல் வேஷங்கள்
இருட்டு நளினங்கள்
உதட்டுச் சாயங்கள்
குழு நீங்கி
முகம் கலைத்து
சூழ்ந்து நின்று
துக்கம் விசாரித்த
அரிதார மனிதர்களோடும்
உண்மை பேசி
நிகழ்வு சிந்திக்கப்போன
அவனும்
நடிகனாகி போனான்
அவன்
அப்படியிருக்கவே குழு
ஆசைப்பட்டது
ஆணையிட்டது
பகட்டு ஆடைகளிலும்
பல்வேறு வேஷங்களிலும்
அவன் அழகாயிருப்பதாய்
எடுத்து காட்டியது குழு
அவன் நடிப்புக்கு
சில நேரம் கைதட்டலும்
பல நேரம் கல்லெறியும்
கிடைத்தது
கைதட்டலும் கல்லெறியும்
குழுவே
ஆட்களை வாங்கி
நடத்தியது
நாடகத்துக்குள்ளும் நாடகம்
அவன்
நன்றாய் நடிப்பதாக
நம்பத் தொடங்கியிருந்தபோது,
குழுவின் கைதட்டல்
பலமாயிருந்தபோது,
அவன் பேச
ஆசைப்பட்ட
உண்மைகளும் நிகழ்வுகளும்
நாடக மேடை படுதாவுக்குள்
உறைந்து போய்,
அவ்வப்போது
அவன் சுதந்தர உணர்வுகளை
தீனக்குரலில்
விசாரித்து விட்டு
அடிக்குப் பயந்து
ஒளிந்து கொள்ளும்
அவன் நடிப்புக்கு
இவையெல்லாம்
தடையெனக் கருதிய குழு,
இந்தச் சின்ன சின்ன
தாகங்களை,
மாலையும் துண்டும் போட்டு
விலைக்கு வாங்கும்
அவன்
நடிகனாகிப் போனான்
உண்மையும்
நிகழ்வும் பிறதொழிலும்
மறந்து போய்
நடிப்பே
உயிரும் உயர்வுமாகிப்
போனான்
வேறொன்றரியாதுமானான்
குழுவோடு
ஒப்பந்தம் முடியும் காலம்
நெருங்கியது
முடிந்தது
மேடைக்குள்
நுழைந்த அவனை
முகம் தொட்டு
புறந்தள்ளிய
பல கைகளை
வெறிகொண்டு
விலக்கிப் பார்த்தபோது,
அங்கே
பகட்டு உடையிலும்
உதட்டுச் சாயத்திலும்
பற்கள் மட்டுமே சிரித்த
புன்னைகையோடும்
உண்மை பேசி
நிகழ்வு சிந்திக்கப் போன
இன்னொருவன்
-08/03/1990
No comments:
Post a Comment