Sunday, April 11, 2010

என்னைப்பற்றி

ரோட்டோரத்தில்
குழம்பின நிறமாய் ஓடும்
மழை நீரில்
துளி விழுந்து எழும் குமிழ்
உடையாமல்
எவ்வளவு தூரம் போகும்

ஊர்தெரியாமல்
போகும் ரயிலிலிருந்து
நான் போட்ட
காற்றின் வேகத்தில் சுழன்று
அடித்தளம் மறையும்
அலுவல் காகிதம்
எத்தனை நாள் அங்கே கிடக்கும்
பத்து நாட்களில் என்னவாகும்


கழுநீர்த் தொட்டியை
முகர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்
காக்கை குத்திய
கழுத்து புண் சுமந்த மாடு
அதன் கண்ணோர கண்ணீர்க் கறை?

பேருந்து இறங்கி
கரட்டோரம் சிறுநீர் கழித்து
பூத்திருந்த செடி
அடுத்த தடவை வந்தால்
ஞாபகம் வைத்துக்கொள்ள வேணுமாய்
நினைவில் பதிக்கும் அந்தச் சின்னப் பூ?

வாழ்க்கை அப்படித்தான்

- 13 / 01 / 92

சாதனைகள்

எல்லோரும் பார்க்காதீர்கள்
ஏனப்படி பார்க்கிறீர்கள்
உங்களில் யாரும்
அப்படியில்லாமலிருக்கிறீர்களா
பின் ஏன்

ஒருவேளை இருக்கலாம்
எனக்கு தெரியாது
இருப்பினும்
அப்படியொரு பார்வை
தேவையில்லையென்றே தோன்றுகிறது

முன்வந்து
நிதர்சனமாய் வெளிபடுத்திவிட்டு
ஒளிந்து கொள்ளுங்கள்
பரவாயில்லை

உங்களில் யாருக்கும்
துணிவில்லை
என்னைப் போல்

போகட்டும்

சற்றுநேரம்
தத்தம் நிர்வாணங்களை
இனி பாருங்கள்,
அடுத்து
என்னையப்படி பார்க்கும் வரை

- 13 / 01 / 92

நனவு மிச்சங்கள்

முகமற்றுப் போகப்போகிற
இரவுகளின் இறுக்கத்தில்
கண்ணீரில்
முகம்புதைத்துத் தூங்கியிருக்கிறேன்

தோள்களோ மெலிந்துபோய்
கையிடுக்கிலும் காலூன்றும்
கட்டைகளைக் காணோம்

முதுகும், கத்திகளும்
குருதிவழியும் புதைகுழிகளும்
இருண்ட முகங்களும்
அரட்டும் கனவுகளுக்காய்
நனவில் இரவு

எதிர்பார்ப்புக்கள்
புதைந்து கிடக்கும்
குழிக்குள்
கனவுப்புழுதியின்
மிச்சம் ஒட்டிய
முகமற்ற விரல்கள்
நடுங்கிக்கொண்டே நீளும்
உதவிக்கோ உட்தள்ளவோ

கண்மூடினாலும்
கருவிழியின் ஒளியில்
காலத்தை
கடந்தாலோசித்து விடுகிற
கலை மறந்து போனேன்
கனவு மறந்து போனேன்


என்
கால்களும் புதைகையில் அறிவேன்
உயிரற்று போவேன்
சுயமற்று போகும்முன்

- 29 /12 /91

சிரசு விரல்கள்

காவிய வார்த்தைகளின்
களங்கம் அற்று
மௌனத்தால் எனக்கு
மகுடம் சூட்டவந்த
நீ

சாயம் போன

தூண்டுதல் சட்டமிட்ட
மனப் பலகை
இருளடித்து
அகோரங்களும்
அழகுகளும்
அற்புதங்களும்
உன்னதங்களும்
எழுத
உடனே அழிபடும்

அழித்தழித்து
வெளுத்துப் போய்
அழிகிற வலிகளுக்காய்
எழுதுவதும் இற்று
பலகை பயனற்றுப் போமோ?

புதுக்கருமை கூட்ட வேண்டும்
இருளே தனிமை
தனிமையே அழகு
அழிவற்ற அழகு

- 26 / 06 / 91

சகம்

இருள் புலரும்போது
கீழ்வானில் வெளிறிய சிவப்பு
முதலெழுந்த புட்கள் குரல்
யாருக்காகவும்
காத்திராத கடன்கள்
அதிலொரு நிறைவு

அறிந்தும் அறியாமலும்
நெருங்கியும் நெருங்காமலும்
அடித்தும் அணைத்துமாய்
ஒரு சகம்

எதுவும் தேவையற்று
விரைந்து பரவும்
ஒளியொன்ற வேண்டி
ஈடுகொடுக்க வேண்டும்
ஒரு சகம்

மனதுக்குள்
கண்டுபிடித்திராத
எண்ணிலடங்கா
நிறப்பிரிகைகள்
படிமங்கள்

கல்லை
புரட்டிப்பார்க்க
ஒவ்வொரு படிமமும்
அற்புத அழகுடன்
அகோர அவலச்சனத்துடன்
விரிந்த நிறக்கதிருடன்
பெருமைப்பட செதுக்கி
பூரணமாய்
மகிழ்ந்து கொள்ளும்
என் சகம்

- 05 / 5 / 91
காவியம் வடிக்க
கல் செதுக்கியபோது
மெதுவாய்
ஊர்ந்தது தேரை

Pandit Venkatesh Kumar and Raag Hameer