இந்த இரவு
என்னுடயதாவென்று
எண்ணிப் பார்க்கிறேன்
ஆற்று மணலை
அளைகையில்
விரல்வழியோடும் குறுமணல் போல்
பற்பல நினைவுகள்
ஆயிரம் தாரகைகள்
அள்ளி இறைத்திருக்கும் வானம்
என் துருவம் நீ
அற்புத சொல்லாட்சியின்
அருந்தமிழ் வடிவம்
ஆழ்கடல் செல்வம்
புலன்வழி புனைந்தவை
உனக்கே அர்ப்பணம்
மண் பார்க்க குமைந்து
மேலே பார்த்து
தடுக்கி விழுந்த தவறுகள்;
காயங்கள் எனது
கைதரத்தான் ஆளில்லை
ஊர் சிரித்தது
சிரிப்பொலியின் எதிரலை
செவிப்பறை முழுதும்
அனர்த்தம்
இந்த இரவு
என்னுடையதா தெரியவில்லை
உறக்கம் தப்பிய
இரவுகள்
உறங்கவே மறுத்த
இமைகள்
வாட்டுதல் மட்டுமே
குறிக்கோள்
பூவில் களிநடம் புரியும் காற்று
நுகர்ந்து
மனம் மரணத்திலிருந்து
மீளும்
நித்தியம் பெறும்
அத்தகு தருணம்
கைகளில் தேங்கிய
காவியங்களோடு நான்
குருடர்களும்
செவிடர்களும்
செங்கோல்
ஏன்?
பாலைவனத் தாகமாய்
பிறந்த கேள்வி
மறையாக் கானலாய்
மாதுயரூட்டும்
இந்த இரவு
என்னுடையதா தெரியவேண்டும்
உறையாத அறியாமையும்
நெகிழாத மௌனங்களும்
என்
அன்றாட எதிர்பார்ப்புகள்
இறுகிக் கிடந்து
மூச்சு முட்டி வெம்பிய
கோர உணர்வு நெரிசல்களுக்குள்
விடுதலை வேள்வி
அணு அணுவாய்
துடித்தது
விரைவில்
வழிய விட்டாலன்றி
விபத்து வெடிக்கும் எனும் நிலை
வல்லூறொன்று
சிறகுகளை கோதிக் கொண்டு
அலகை
அலட்சியமாய் திருப்பி
அசுரபலத்துடன்
கிளைத்து பறந்தது
நாள் செல்லச் செல்ல
அனுபவச் சுமை
அதிகமாயிற்று
பயணம்
இன்பமாயிற்று
வெற்றியே வேதம்
வேதத்தின் பிரணவம்
திருவினையாக்கும்
ஒருமுகம்
சிந்தனைத் தீவிரம்
அம்பின் கூரிய நுனியில்
ஆயிரமாயிரம் அணுக்கள்
என்
சுடரொளிச் சிந்தனையின்
ஒவ்வொரு தணலும்
வெப்பமும் வியாபிப்பும்
வெற்றியே பரப்பும்
தீயின் நிறமும் மாறும்
நாக்குகள் பொசுக்கும் பொசுங்கும்
ஓமப்புகை வானிட்ட பாலத்தில்
வெற்றி ஊர்வலம்
மண் நோக்கிக் கவிழ்ந்த
மானுடம் நிமிரும்
அம்பறாத் தூணிகள்
சிந்தனை நிரப்ப
சிறியோர் மேல்
சினமிகு போரிடும்
கடமை ஒருகை
காவியம் மறுகையென
கையிணைத்த
நெறிகள் வரலாறாகும்
கடமைக் களங்களில்
கண்ட காயங்கள்
ஒவ்வோர் உயிரும்
ஏங்கும்
காயக்கதை பேசி
காதற்க் கடலில்
கலந்திட்ட நதிகளே
காட்டாறுகளே
இன்னும்,
இந்த இரவும்
என்னுடையதா என்று
தெரிய வேண்டும்
-12/07/1988