Monday, May 3, 2010

காரணம் தொலைத்தவன்

என் கைகளுக்குள்
பலமுறை
கண்ணீர்க் கோடுகளை
ரேகைகளாய் வடித்துவிட்டு
பேச்சற்று
பகல்களிலும் ஒளியிழந்துபோன
என் கண்களை
செதுக்கிய
உன் கண்களைத் தேடி கொண்டிருக்கிறேன்

மன்னித்து விடு

தேடுவதை
நீ
விரும்பமாட்டாய்
என் அறிவேன்

வார்த்தைகளின்
வழியில் ஏதேனும்
விழுந்திருந்தால்
தயவு செய்து
எடுத்து வீசாதே
என் மேல்

சொற்களை
நீ அதிகம் செதுக்குகிறாய்
இதயங்கள்
நொறுங்கும் தன்மையான

என்னிடமுமிருக்கும்
வில்லும் கவசமும்
நினைவுக்கு வரும் அவ்வப்போது
ஆயினும்
நொறுங்கிப்போன இதயத்தின்
நினைவுகள்
என்னை
தொந்தரவு செய்கின்றன

கவனமின்றி
கவசத்தின்
விலாப் பகுதியை
உன் சொற்களுக்கு
பலி கொடுத்ததுண்டு

ஆனால்
நெற்றியை இலக்கெனக் கொண்ட
இந்த கணைக்கு
கண்களை பறிகொடுத்தது
என் கவனத்தின்
அனுமதியோடுதான்

பார்த்துக் கொள்
இந்தப் புண்களை
அவற்றில்
வழிகிற குருதியை
துடைத்திட
குறைப் பார்வையுடன்
தடுமாறுகிற
என் கையை

சொல்லி விடு,
அந்தக்
காரணத்தை மட்டும்

- 05/04/90

அதாவது...

எச்சில் ஒழுகும்
கடைவாயோரம்
வெறிப்பார்வை
சதை புசிக்கும்போது
முலைகளும் தொடைகளும்
பட்சபாதமின்றி இரையாகும்
பிறன் மனை
பிறன் சொத்து
பிறன் பெருமை
உள்ளம் கொதித்து
கவிழ்த்து பிடுங்கி
தரை சாய்க்க
அணு பதறும்
என் உணர்ந்து
சுயம் தேடி
முகம் வரைந்து
முகம் கலைத்து
பணம் பெற்று
உடல் விற்று
கலையென பொய்பேசி
பெரியோர் பெரிகழ்ந்து
அவர் விற்று
உயிர் வளர்த்து
நம் பேரெழுத
ஆசை வரும்
அப்போந்தந்த
அந்தி வரும்
ஞானம் உணர்ந்து
ஊருக்கு பங்கிட்டு
தன்னைப் பிரித்து
பகடைகளுக்கு கொடுத்து
ஊனழித்து குருதிசிந்தி
முட்சுமந்து
காலம் சுமக்கும்
முடிவு நோக்கும்
துள்ளிக் குதித்து
தோள் தூக்கி
போரெடுத்து கடன்முடித்து
தலைகொய்து
சிரம் தாழ்த்தி
மண்டியிட்டு மானம் விற்று
மலம் தின்று
உயிர்மட்டும் சுமந்து
பிறவனைத்தும் இழந்து
வாழும்

எங்கே இதில்
என்னுயிர் என்னிருப்பு
என்னுடல்

வலி பொறுப்பேன்
துயரிழைப்பேன்
என்னுயிர் பொறுக்கும்வரை

எல்லாம் எறிந்துவிட்டு
உன் என் வக்ரங்களுக்காய்
நிர்வாணமாய் நிற்கையில்
இழந்துவிட
பெரிதாய் எதுவுமில்லையே
இந்த
உயிரைத் தவிர

- 17/05/90

Sunday, April 25, 2010

இரண்டாம் விற்பனைக்கு

மோனங்கலைதற்கஞ்சி
முகத்திரைகள்
முகங்களானதை
நான் எதிர்பார்த்தேன்

எனவே
நானுமொன்று செய்துகொண்டேன்

ஆயினும்
அவ்வப்போது வெளிப்பட்டவண்ணமிருந்தன
என் வெளிப்பாடுகள்

திரைகளை தூக்கிஎறிந்தேன்

கசகசவென்று
கனவிலும், நேரிலும்
வீட்டிலும், வெளியிலும்
முகத்தருகே
எப்போதும் முகங்கள்
அன்று, முகத்திரைகள்

திரைகளுக்காய்
திறந்து விடுகிற
என் நுட்பங்களை
எப்படிக் கரைத்து கொள்வது

கவலையில்
கையிருந்த ஓரிரு திரைகளையும்
விற்றேன்
வயிறு வளர்க்க

வெளிப்பாட்டு வறுமை
வறுத்தெடுக்க
செல்லாக்காசு மோனத்தை
நுட்பமறந்து போய்
விற்றுத் தொலைக்க
அல்லாடி கொண்டிருக்கிறேன்
இந்த வேளைக்கு


- அஞ்சலிக்குரல்கள் கேட்கும்
   அந்த
   அறைக்கதவை மூடிவிட்டு

- 26/02/91

மழைக்கால சுவடுகள் - II

நீ, நான்
உனது, எனது
இந்த மழைக்காலங்கள்

பெரிதாய் விழத்தொடங்கி
உடலதிர ஓடி
இடந்தேடி ஒதுங்குமுன்
அரைகுறையாய் நனைந்து
ஆசையோடு பார்த்து நிற்போம்

நின்று போகும் மழையை
நீ கை நீட்டி பார்க்க
பார்த்த கையை
முகர்ந்தணைத்து
நனைந்து போவோம்
பெய்யாத மழையில்

கை கோர்த்து
முகம் பார்த்து
தோள்சாய்ந்த மடல் பார்த்து
பாதை விலகி
உன் விழிகளுக்குள்
நடந்து கொண்டிருப்பேன்

உன் நாசிநிழல் சொட்டும்
நீர்த்துளி ஏந்தி
காவிரியை சிறைபிடித்ததாய்
மகிழ்வேன்

என் மகிழ்ச்சியை
நீ இரசிப்பாய்

மழை
நின்று போகும்

மழைக்காலங்கள்
திரும்புவதில்லை

- 12/10/91

மழைக்கால சுவடுகள் - I

புகைமூட்டமாய் விடிகிற பொழுது
என் மனதுக்குள்ளும்

ஆயிரஞ்சிறு சூரியன்கள்
வட்டமாய் உதிக்கிற
அக்குடிசைக்குள்
இன்று மழை

காட்சிகளை
விரிவாக்காத என் வீட்டுச்சன்னல்
என் பார்வைக்குள்ளும்
புகை மூட்டம்

தரையை
துளைத்து விடுகிற கோபத்துடன்
வானம் சரம் சரமாய்
ஊற்றிக் கொண்டிருக்கிறது

ஓடை
குடிசைச்சுவரின் முதுகிறங்கி
நதியாய் பெருகுகிறது

மிதக்கப் போகும்
வட்டிலிலிட்ட சோற்றுக்கு
வெளியோடும் நீரில்
விளையாடுவதை
தடுத்தழைக்கும் குரல்

கிழிந்த தலைத்துணி
இழுத்துச் சிரித்து கொள்ளும்
அவ்விருவர்
அக்குடிசை வாயிலில்

சன்னல் மறைக்க
என் வீட்டு கண்ணாடியிலும் நீர் மூட்டம்

தோள்தொட்டு என் சிறுமகள்
தந்த காப்பி
வாங்கத் திரும்பினேன்
நீர்மூட்டம் உறைய

- 31/02/91

Pandit Venkatesh Kumar and Raag Hameer