Monday, May 3, 2010

காரணம் தொலைத்தவன்

என் கைகளுக்குள்
பலமுறை
கண்ணீர்க் கோடுகளை
ரேகைகளாய் வடித்துவிட்டு
பேச்சற்று
பகல்களிலும் ஒளியிழந்துபோன
என் கண்களை
செதுக்கிய
உன் கண்களைத் தேடி கொண்டிருக்கிறேன்

மன்னித்து விடு

தேடுவதை
நீ
விரும்பமாட்டாய்
என் அறிவேன்

வார்த்தைகளின்
வழியில் ஏதேனும்
விழுந்திருந்தால்
தயவு செய்து
எடுத்து வீசாதே
என் மேல்

சொற்களை
நீ அதிகம் செதுக்குகிறாய்
இதயங்கள்
நொறுங்கும் தன்மையான

என்னிடமுமிருக்கும்
வில்லும் கவசமும்
நினைவுக்கு வரும் அவ்வப்போது
ஆயினும்
நொறுங்கிப்போன இதயத்தின்
நினைவுகள்
என்னை
தொந்தரவு செய்கின்றன

கவனமின்றி
கவசத்தின்
விலாப் பகுதியை
உன் சொற்களுக்கு
பலி கொடுத்ததுண்டு

ஆனால்
நெற்றியை இலக்கெனக் கொண்ட
இந்த கணைக்கு
கண்களை பறிகொடுத்தது
என் கவனத்தின்
அனுமதியோடுதான்

பார்த்துக் கொள்
இந்தப் புண்களை
அவற்றில்
வழிகிற குருதியை
துடைத்திட
குறைப் பார்வையுடன்
தடுமாறுகிற
என் கையை

சொல்லி விடு,
அந்தக்
காரணத்தை மட்டும்

- 05/04/90

1 comment:

Kamaraj M Radhakrishnan said...

In-depth search in human mind and remembrence is highly expressed in your poems. Well done

Pandit Venkatesh Kumar and Raag Hameer