Sunday, April 11, 2010

சகம்

இருள் புலரும்போது
கீழ்வானில் வெளிறிய சிவப்பு
முதலெழுந்த புட்கள் குரல்
யாருக்காகவும்
காத்திராத கடன்கள்
அதிலொரு நிறைவு

அறிந்தும் அறியாமலும்
நெருங்கியும் நெருங்காமலும்
அடித்தும் அணைத்துமாய்
ஒரு சகம்

எதுவும் தேவையற்று
விரைந்து பரவும்
ஒளியொன்ற வேண்டி
ஈடுகொடுக்க வேண்டும்
ஒரு சகம்

மனதுக்குள்
கண்டுபிடித்திராத
எண்ணிலடங்கா
நிறப்பிரிகைகள்
படிமங்கள்

கல்லை
புரட்டிப்பார்க்க
ஒவ்வொரு படிமமும்
அற்புத அழகுடன்
அகோர அவலச்சனத்துடன்
விரிந்த நிறக்கதிருடன்
பெருமைப்பட செதுக்கி
பூரணமாய்
மகிழ்ந்து கொள்ளும்
என் சகம்

- 05 / 5 / 91
காவியம் வடிக்க
கல் செதுக்கியபோது
மெதுவாய்
ஊர்ந்தது தேரை

விழுதுகள்

கனவுக்குள்
வெண்புகை சூழ
ஆடிக்கொண்டிருக்கும்
அந்த ஊஞ்சலில்
நீயும் நானும்

என் அருகிறுத்தி
பார்க்கும் பொது
என்னோடும்
ஆடுகிறது ஊஞ்சல்

உன் பார்வையை
நானுணரும் பொது
எப்படி
நீயும் நானும்
தனித்தனியாய்

ஊஞ்சல்கள்
ஆடுகின்றன
நனவுக்குள்
புகுந்துவிடும்
ஓர் உன்மத்த
முயற்சியின் இயலாமையோடு

- 22 /10 / 93

காலை

சூம்பிப்போன
ஆப்பிள்காரிகளின்
கொழுகொழு குழந்தைகள்
நடைபாதையில்
ஒண்ணுக்கிருக்கும்
நைந்து போன
கிழவியொருத்தி
அவளைவிடவும்
அழுக்கான பழம் விற்பாள்
நிச்சயமாக
இன்றோ நாளையோ
இறந்துவிட வேண்டியிருந்தும்
விரல்களற்ற கையினால்
பீடிபுகைக்கும் கிழவன்

தடதடத்து விரையும்
மின்வண்டியின் தாளம்
சேராத லயத்துடன்
தோள்துண்டு
நெற்றியின் சந்தனப்பொட்டுடன்
குழல் வாசிக்கும்
என்றோ
உயர்விலிருந்த வித்தகன்

காதலிகளுக்காக
சிகரட் புகைத்து
நகம் கடித்துக் காத்திருக்கும்
இளைஞர்கள்
அவர்களை
ஆர்வத்துடன் நோட்டம் விடும்
பெண்கள்

படிப்பதாய் பாவனை செய்யும்
பாதி நேரம் கூட்டம் மேயும்
பெரிசுகள்
நீட்டிய கையில்
டிக்கட் தரவேபடாத
பரிசோதகர்

'வேர்க்கடலெய், இஞ்சி மொரப்பா,
சீப்பு, பொம்மை, சீசன், பஸ்பாஸ்
ரேஷன் கார்டு கவர்'
சத்தம் கடந்து போனால்
'இயேசு விரைவில் வருகிறார்'

எதற்கென்றே தெரியாமல்
எப்போதும் இருக்கும்
பத்துப் பதினைந்து பேரோடு
மூலையில்
மூடிவைக்கப் பட்டிருக்கும்
போன ரயிலில்
அடிபட்டு ஈமொய்க்கும்
(அவன், அவள்)
அது

20 /10 / 93

பரிணாமம்

பார்த்து கொண்டிருக்கும்போதே
நிகழும் உருமாற்றம்
இது வேறு

உருமாறுகையில்
மாறும் சூழல்
அல்லது
சூழல் மாறியதும்
அதன் உருவா

இதோ
மற்றொரு உருமாற்றம்
இதுவும் வேறு சிதைவு

மற்றுமொன்று

மாற்றச்சிதைவு
முற்றுப்பெற்றதா

அதிர்ந்து பார்த்து
விரைந்து கலைக்கையில்
அடுத்த மாற்றம்


ஐயோ
இது
என் முகம்

08 / 09 / 92

சிற்சிதைவுகள்

முகமற்ற சலனங்கள்
கருந்திரையில் பிம்பங்கள்
நேராய் தொங்கும்
வௌவால்
புகைபோக்கி வழியே
மனிதர்கள்
வான் முழுதும்
அசைகிற
ஒலியற்ற உதடுகள்
சிரிக்கும் போல் அழும்
அழும் போல் சிரிக்கும்

அந்தத்துக்குள்ளிருந்து
ஜீவசிசுவின் முனகல்கள்

தொட முடியாத
எரிச்சலூட்டுகிற மார்புகள்
படுத்தால்
இறந்து விடப் போகிற
பயங்கள்

முற்றுப்பெறாத
என்
அர்த்தச் சிதைவுகள்

- 15 / 10 / 93

ஏன்

ஏனென்று கேளுங்கள்
அனைத்தையும்
அதிகம் தெரியாதவர்கள்
அப்படிக் கேட்பது
அவசியம்
அதற்கு பதிலிறுக்க
அநேகம் பேர்
ஆனால்
அவர்களுக்கு
அந்தப் பதில் தெரியாது
அது ஏனென்று
அவர்களிடம் கேளாதீர்கள்
அது தவறான இடம்
அக்கேள்விக்கு வேறு பேர்

எப்பொழுதும்
எப்படியும்
ஏனென்று கேட்பது
அனாவசியம்
என்று மட்டும்
எண்ணி விடாதீர்கள்

ஆகவே
எப்பொழுதும்
ஏனென்று கேளுங்கள்
இந்தக் கவிதையைப் போல

- 08 / 09 / 92

Pandit Venkatesh Kumar and Raag Hameer