மழை பெய்து கொண்டிருக்கிறது
அந்தியிலிருந்து இரவுக்கு
இடம் மாறும் நகரத்தின்
நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலை
உன்னையும் என்னையும்
உறுத்தாவண்ணம்
குளிரூட்டப்பட்ட காருக்குள்
நானும் நீயும்
'முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்பூவாய்...'
இசையில் குரலில் வழியும் தாபம்
இசையை தவிர
வைப்பரின் தாளம்
பல வருட உறவு
ஒரு வருட பிரிவு
அருகிருந்தும் ஒரு
மனவிலகல்
ஏதேதோ கற்பிதங்கள்
உண்மைகளை உரத்து
ஒத்துக் கொள்ள
இருவருக்கும் ஏற்பில்லாதவொரு
இடைவெளி
பிரிவின் வருடத்தில்
எத்தனை வலிகள்
அத்தனை வருட
உறவின் மூலமறுக்கும்
வலிகள்
இரவின் நெருக்கமுணர்ந்த
படுக்கையில்
தனியே தனியே
கரைந்து துடைத்த
வலிகள் வலிகள்
'நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தால் தகுமா...'
சகிக்க முடியவில்லை
இந்த மௌனம்
பாடலின் அழகு குறித்து வினவுகிறேன்
அவளின் குரல் உணர்த்தும்
உணர்ச்சி குறிக்காமல்
மிகக் குறுகிய
ஆயினும் மிகநீண்டதோர்
ஆவிநின்ற
இடைவெளிக்குப் பிறகு
தாபமும்
வலியும்
தயையும்
தன்னிரக்கமும் பொதிந்து
'ம்' என்கிறாய்
அத்தனை உணர்வுகளையும்
ஒற்றை அசையில்
ஏற்பதற்கு
கழியும் நொடிகள் நிமிடங்கள்
சாலையில் இருந்து
பார்வையை திருப்பி
உன்னைப் பார்க்கிறேன்
பாடல் நிறைவடைந்தும்
வெளி நிறைந்து கிடக்கிறது
கார் மழையினூடே
விரைந்து கொண்டிருக்கிறது
No comments:
Post a Comment