Monday, August 24, 2009

Letters to Jeyamohan

அன்புள்ள ஜெயமோகன்,


நண்பர் பிரபுவிற்கு தாங்கள் அளித்த பதில் கண்டேன். தங்கள் வாயிலாக அவருக்கு என் எண்ணங்களை கூற விரும்புகிறேன்.

கடந்த மூன்று வருடங்களாக தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்து வருகிறேன். இங்கு சிறுபான்மை இனமாக வசித்து வரும் இந்திய சமூகத்தினரோடு உள்ள நட்பின் காரணம் எனது இன்னொரு தகுதி, இப்பதிலை எழுதுவதில்.


பிரபு, மரபின் தொடர்ச்சியை நீங்கள் வேண்டுமானால் உணர மறுக்கலாம்; அல்லது உங்கள் மரபையே மறுதலிக்கலாம். ஆயினும், உங்களையும் உங்கள் சந்ததியையும் உலகம் எப்படி அடையாளம் காணும்? நீங்கள் உங்கள் மரபை, உணர்வை, பற்றை, உடையை, மொழியை, உணவை, மதத்தை, அமெரிக்க, ஐரோப்பிய மரபில் இணைத்தாலும் அவர்கள் எந்நாளும் உங்களை அவர்களில் ஒருவராக அடையாளம் காண மாட்டார்கள்.


உங்கள் தனித்துவமே உங்கள் அடையாளம். அதுவே உங்கள் மரபாகவும் பண்பாடாகவும் இருக்க முடியும்.


மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வாழும் (மூன்று நான்கு தலைமுறையாக) இந்திய தமிழர்களில் தான் இத்தகைய போக்கை கண்டு மனம் வெதும்பினால், புலம் பெயர்ந்த இந்தத் தலைமுறையினரும் இவ்வாறு கருதுவது ஒரு கலாசார சீரழிவே.


இங்கு வாழும் இந்திய தமிழர்களுக்கு, இந்தியா ஓர் ஏழை நாடு; பண்பாடற்ற மக்களின் கூடம், பிழைக்க வழியற்று அவர்கள் நாட்டை தஞ்சமடைந்த (மிக பல பேர் திருட்டுத்தனமாக) ஒரு கூட்டம், மலம், அழுக்கு, பிச்சைகாரர்கள், பன்றிகள், நாய்கள், சில கோவில்கள், தி.நகர்... சுருங்க கூறின், நமது கலாச்சாரமும் பண்பாடும் அவர்களுக்கு தமிழ் திரைப்படங்கள் காட்டுவதே.


இத்தகையவர்களிடம் பல முறை வாதிட்டு இருக்கிறேன் - மூவாயிரம் வருட பாரம்பரியம் உள்ள நாடு எனது; எனது கலைகள், எனது கோவில்கள், எனது இசை, எனது தர்க்கம், எனது இறையியல் கொள்கை, - இந்த நாடுகளில் காட்டுங்கள்?


ஜெயமோகன், இந்தியா ஏழை நாடாகவும், அவ்வப்போது பொய்க்கும் பருவ மழையினூடே ஒரு பில்லியன் மக்களுக்கு உணவு அளிக்கும் சுமை கொண்டதாகவும் காட்சியளிப்பது தான் (மேற் பட்டியலிட்ட இணையற்ற செல்வங்கள் இருந்தும், இருப்பது தெரிந்தும்), இவர்களுக்கு உள்ள - 'இந்திய அடையாளத்தில்' உள்ள மனத்தடை.


இன்னும் இருபது வருடங்களில், உலகின் முதல் நிலை பொருளாதாரமாக மாறி வளர்ந்த நாடாக மாறி விட்டால், இவர்களுக்கெல்லாம் இந்தியாவும் அதன் மரபும் பிடித்தமானதாக மாறிவிடும். 'நான் இந்தியன்' என்று அப்போது தலை நிமிர்ந்து (நம்மோடும் சேர்ந்து) கூவவும் ஒரு கூட்டம் இருக்கும், நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்!

1 comment:

Kamaraj M Radhakrishnan said...

Dear Saravanan, i am waiting for the wonderful moment. Yes.. i am waiting.

Pandit Venkatesh Kumar and Raag Hameer