Sunday, May 15, 2011

ஞானஸ்நானம்

அதோ,
அந்த வனாந்திரம்...

ஈரத்தோடு கூடிய
இலைகளின் மேல்
அவளும் நானும்
நடக்கையில்
இவள் பாதம்
இடர்ப்ப்படுமோவென
அஞ்சத் தோன்றுகிறது

மண்ணின் அந்த வாசம்

என் தோள்மேல்
புரளும் அவள் தலைமயிர்
பொன்னிறக் கோடுகளாய்
கோலம் போடுகிறது

பறவைகள்
இவள்குரலைக் கேட்டு
வாயடைத்துப் போகின்றன

துணிந்த சிலகுயில்கள்
பலமுறை பாடிப் பார்க்கின்றன

அவளை
அணைத்துச் சாய்த்து
மெதுவாய் நடக்கையில்
உலகின் கோடியை
அடைந்து
வெளிச்சென்றார்ப் போல்
தோன்றுகிறது

கதிரவன்
புகையோடு கூடிய தன்
கைகளை நீட்டி
அந்த அடர்ந்த கானகத்தில்
எங்களை ஆசீர்வதிக்கிறான்
1515342953_4d17f59a3b.jpg (500×451)
அந்த நிசப்தத்தில்
எங்களுயிர்
காதலுக்கு ஏங்குவது கூட
கேட்கிறது

நடக்கிறோம்
நடந்து கொண்டேயிருக்கிறோம்

ஓர் எல்லையற்ற வெளியில்
இயற்கையின் அழகோடு
அவளோடு
வாழ்நாளெல்லாம் இருந்துவிடலாம்போல்
இருக்கிறது

மனம்
அக்கணம்
இன்பமா துன்பமா
வேண்டுமா போதுமா என
உணர்வதை நிறுத்திவிட்டது
அனிச்சையா ஆணையிட்டதா
என்பதுகூட
புரியவில்லை

அந்தக் கானகம்
அடர்ந்து விட்டது

காற்று இலைகளாய்
அட்சதை தூவுகிறது
இவள் மேலுதிர்ந்த
இலைகள் 
கன்னம் தடவை
சாபல்யமடைந்து மெதுவாய்
கீழே விழுகின்றன

அந்த அழகிய காட்டில்
அவளும் நானும்

- 22/07/1986

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer