Saturday, April 24, 2010

என் - துளி

என் கண்களுக்குள்
நானுணரும் வெப்பம்
கரித்தபடி
நகர்கிறது ஒரு துளி

உன் கண்ணில்
ஒற்றி
பகிர்ந்து கொள்ள
ஆவியாகுமுன்
வருமோவுன்
குவிந்த கைகள்

- 13/05/2001

ஒற்றைச் செருப்பு

நாற்சந்தியில்
நடுத்தெருவில்
நடைப்பாதையில்
எப்போதும் கிடக்கும்
ஒற்றைச் செருப்பு
எப்படித் தொலைந்தது
மற்றொன்று
எந்த நிர்ப்பந்தம்
பிரிக்குமவற்றை

கவனிப்பாரற்று
கிடந்துகொண்டேயிருக்கிறது
அடித்து புரட்டும்
அடைமழை வரும் வரை

போகும் ஊர் முழுதும்
பார்க்குமந்த
ஒற்றைச் செருப்பை
எண்ணப் புரியாத
ஏதோவொன்றின்
சீரழிவாய் எண்ணி
ஏங்கி விதிர்க்கும்
மனசு

- 16/05/92

(ம)த(க)னம்

மோகனத்தில் குளித்துவிட்டு
முத்தெடுத்து போர்த்திய பின்னும்
ஏன் எனக்குள்
அப்படியோர் நடுக்கம்
உன்
இதழ்களின் வளைவுகளில்
ஈரங்களின் அழைப்புகளில்
இறங்கிப் போயும்
ஏன் என்னில்
அச்சம்

கன்னக் கதுப்போடு
சிவந்த மென்செவி மடலோடு
உரசியும்
என்னுதடுகள்
ஏனிப்படித் துடிக்கின்றன

மேலெங்கும்
பரவிப் போர்த்தும்
உன் கூந்தலிழை பின்னும்
என் விரல்கள்
எதைத் தேடுகின்றன

விம்மித் தணியா
வெம்மூச்சுகள்
முத்தத்தின் ஈரத்தை
மறைத்து விடாதா

இடை பொடித்திருக்கும்
மயிர்த் துளிகள்

இமை சோர
என்னிமை மூடும்
உன் இமையிழைகள்

நீள் விரல்களின்
மென்பதிவுக்குள்
புதைந்து கிடக்கும் முகம்

தன்னோடு
எரிந்து போகும்
காமம்

- 28/02/92
பாதை தேடிக்கொண்ட பின்

தேட வேண்டும் -

- என் கால்களை

- 02/01/92

Friday, April 23, 2010

பிரசுரம்

உயிரோசையில் வெளிவந்திருக்கும் 'எதிர்நோக்கும் இருவழிவிலகல்'

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2804

Sunday, April 18, 2010

எதிர்நோக்கும் இருவழி விலகல்



தணலையுமிழும் உன் தோள்கள்
தண்மை கொண்டிருந்தன அன்று
பேசியவை காதல் மொழிகள்
அல்லவென்றாலும்
அருவருப்பை கூட்டும் விதமாய்
இல்லை இன்று போல் அன்று
கண்கள் நேர் பார்வையில்
காரணம் புரியும் அன்று
விரிந்த கைகளும்
தலை கோதும் விரல்களும்
அருவமாய் வீசிப் பரப்பும்
அமைதியை அன்று
காமத்திற்குள் காதல்
புகுத்தியதில்லை நாம்
துணையுடன் கலவியும்
அவ்வாறே

நாமின்று
நடந்து போகும் பாதை
நமக்கென விதிக்கப்பட்டதல்ல
ஒவ்வொரு வளைவிலும்
கழன்று விழுகின்றன
சொற்கள்
மௌனத்தினால் அளக்கப்படும்
இந்தப் பயணம்
மிக்க வலி மிக்கது
என நீயும் அறிவாய்

உன் என் குருதிகளால்
நிரம்புகின்ற பாதையின் சரிவுகள்
நம் கடந்த நினைவுகளை
பிரதிபலித்து தளும்புகின்றன
விண்ணெங்கும் பொழியும்
ஒளி கருகுகிறது
நம் இன்றைய உறவைப் போல்

நேர்கொள்வதில்லை கண்கள்
வார்த்தைகள் தம் இலக்கை
விளிப்பதில்லை
அருவமாய் சூழ்ந்திருந்த
புரிதலின் சருகுகளின் மேல்தான்
நாம் நடக்கும்
இந்தப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது

நானஞ்சிய
பாதையின் இருவழி விலகல்
எதிர்கொள்கிறது இன்று
பாதங்களிலும் உடல்களிலும்
படிந்து இழியும்
நினைவுகளின் எச்சங்களையும்
குரூரங்களின் வலிகளையும்
கழுவி விடும்
ஒரு பெருமழையை
பன்முறை பொய்த்திருந்தும்
எதிர்நோக்குகிறோம் நாம்

எங்கிருந்தோ நீளும்
என நான் நம்பும்
ஒரு விரல் சுட்டும் பாதையை
தெரிவு செய்ய
நான் காத்திருக்கிறேன்
உன் வழமையான
என்னில் மட்டும் சித்தித்திராத
அமைதியுடன் நீயும் காத்திருக்கிறாய்
நம் முன்னே
நாமடையப் போகும்
வெவ்வேறு இலக்குகளின்
மறைவுகளை பொதித்து
பாதைகளும் காத்திருக்கின்றன
ஓர் உன்மத்த அணைப்பில்
கரைந்து விடும்
அற்ப சாத்தியத்துடன்

Saturday, April 17, 2010

மனமுவந்து

பஸ்ஸில்

பிரயாணித்து கொண்டிருந்த
என்
பார்வை மறைவுக்குள்
பல ஊர்வலக் கால்கள்

பூச்சிந்தும் சில
சிந்திய பூவை மிதிக்கும் சில
ஆடிய வண்ணம் சில
குதிக்கும் சில
செருப்பணிந்து சிலவும்
வெருங்கால்களும் உண்டு
சைக்கிள்கள் உருட்டிக்கொண்டு
சில

நகர்ந்து கொண்டிருந்தது
பஸ்

இடம் கிடைத்து அமர்ந்தேன்
இன்னும் கால்களை
கவனிக்க
ஊர்வலம் கவனிக்க
நடந்து கொண்டிருந்த
அத்தனை கால்களுக்கிடையேயும்
படுத்திருந்த
இரு கால்கள்

- 26/01/90

Pandit Venkatesh Kumar and Raag Hameer