Thursday, January 7, 2010

இளையராஜாவின் 'இசையில் தொடங்குதம்மா'



சில வருடங்களுக்கு பிறகு, ஹே ராம் படத்தில் வரும் 'இசையில் தொடங்குதம்மா' என்ற பாடலை மீண்டும் அனுபவிக்க நேர்ந்தது. இரண்டு நாட்களுக்கு வேறு பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை என்பது மட்டுமல்ல, இளையராஜாவின் இசை ஆளுமையை நேர்கொண்ட உற்சாகம் அவரது உன்னதத்தை உணர வைத்தது.


பல்லாயிரம் பாடல்கள், பல்வேறு இசைகோவைகள் தந்த ராஜாவின் மிக அற்புத பாடல்கள் என்று யார் ஒரு பட்டியலிட்டாலும் 'இசையில் தொடங்குதம்மா' அப்பட்டியலில் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. பல காரணங்கள். மிக அபூர்வமாக இசைக்கப்படும் விவாஹப்ரியா ராகம் எப்படி கையாண்டிருக்கிறார், சாஸ்திரிய ஹிந்துஸ்தானி இசை எப்படி கலந்திருக்கிறது என்பது போன்ற வல்லுனர்கள் கூற வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் அந்த பாடலில் இருக்கலாம்.

என்னை போன்ற ஒரு சாதாரண ராஜா ரசிகனின் பார்வையிலும் அந்த பாடல் உள்ளத்தை உறைய வைப்பதற்கு சில காரணங்கள் உண்டு. அந்த பாடலை எழுதியதும் ராஜாதான். பாடியது பண்டிட் அஜய் சக்ரபோர்த்தி. படத்தில் அந்த பாடல் இடம் பெறும் சூழ்நிலையை இங்கே விவரிக்க வேண்டும். நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆண்டாள் பாசுரம் பாடும் தீவிர வைணவ குடும்பத்து இளைஞன்; புதிதாக திருமணமானவன்; மிக அழகிய, அவனை தவிர வேறொன்றும் அறியாத, மேலெங்கும் அறியாமை போர்த்திய மனைவி; இந்து இயக்க புரவலரான (இந்தியாவின் மேற்கில் ஒரு) மகாராஜா தரும் விருந்து; சூழலில் மது; திடீரென சமூக தளத்தில் கிடைக்க பெறும் அந்தஸ்து, கவனிப்பு - இந்த பின்புலத்தில் நடக்கும் இராவண வதம் விழாவில், இடம்பெறும் பாடல் அது.

இயக்குனர் கமல் ஹாசன் ராஜாவிடம் என்ன சொல்லியிருக்க முடியும், எவ்வளவு சொல்லியிருக்க முடியும் என எண்ணிப் பார்க்கிறேன். மதுவின் போதை, அழகி மனைவியின் போதை, ஒரு வகையில் தீவிரவாத அதிகாரம் தரும் போதை என்று நாயகன் தடுமாறுகிறான். காமம் அவனை சுழற்றுகிறது. சுற்றிலும் ஆட்டம், களி, வண்ணங்கள், விழாவின் மயக்கம் தரும் சைகெடலிக் குழப்பம்.

பாடல் ஒரு பின்னணி இசை போல அங்கே துவங்குகிறது. அவனது பேசும் குரல்கள் முன்னணியில் ஒலிக்கின்றன. மனைவி அறியாமையின் அழகோடு வாசனையோடு அருகே இருக்கிறாள். சோம பானம் அவனை வெறிகொள்ள செய்கிறது. இந்த மனநிலை, இந்த கலாசார பின்புலம்,  நாட்டின் தனித்தன்மை வாய்ந்த ஒரு பகுதியில் நடைபெறும் நிகழ்வின் பாடல்.

'இசையில் தொடங்குதம்மா' வில் வேறுபட்ட ராஜாவை காண்கிறோம்.

நௌஷாத் மற்றும் சலீல் சௌதுரி போன்ற மேதைகள் வெறும் தாள வாத்தியங்களின் ரிதம் அமைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு மாபெரும் வெற்றி பாடல்களை உருவாக்கினார்கள். ராஜாவும் சில பாடல்கள் அப்படி தந்திருக்கிறார். அதில் 'இசையில் தொடங்குதம்மா' உச்சத்தில் இருக்கும். நாயகனை சுழற்றியடிக்கும் பல்வேறு போதைகள் பாடலிலும் சுழல்கின்றன, தாள வாத்தியங்களின் விரைந்த அடுக்குகள், ஒன்றின் மேல் மற்றொன்று என ஒரு காம்ப்ளெக்ஸ் கோர்வையாக அமைக்கபட்டிருக்கிறது. தோலக், தபலா, முழவுகள், ராம லீலா உர்ச்சவத்தின் போது இசைக்கப்படும் கொட்டுகள் மற்றும் சிம்பல்கள்... முன்னெப்போதும் ராஜாவின் பாடல்களில் கேட்டிராத நரம்புகளை சுண்டும், உடலை பதற செய்யும் ஒரு தாளம்.

பொதுவாக ராஜாவின் பாடல்கள் அனைத்திலும் ஒரு கிரியேடிவ் ரஷ் தெரியும், முன்னிசை அல்லது இடையிசை ஆகட்டும், ஒரு ஸ்ட்ரிங், ஒரு விண்ட், ஒரு பெர்குஷன், மீண்டும் ஒரு ஸ்ட்ரிங் Orchestration என அடுத்தடுத்து இசைகோர்வைகள் ஒன்றை தொடர்ந்து இன்னொன்று வந்து கொண்டேயிருக்கும். அவற்றில் ஒரு பீஸ் 8 - 10 நொடிகளுக்குள் முடிந்து விடும். உதாரணங்கள் - தென்றல் வந்து என்னை தொடும், நினைவெல்லாம் நித்யா பாடல்கள்.

ஆனால் ஹே ராம் பட பாடலில், ராஜா அந்த கிரியேடிவ் ரஷ்ஷை முறைபடுத்தி, ஒரு கட்டுக்குள் வெளிபடுத்தியிருக்கிறார். முதல் interlude இல், ஒரு ஷெனாய்; இரண்டாவது interlude இல், ஒற்றை வயலின், பின்னால் ஒரு வட இந்திய நரம்பு கருவி (சாரங்கி / தில்ரூபா?). அவ்வளவுதான். அதுவும் ஒரு இண்டர்லுடில் ஒரே ஒரு அசைவு/movement . மற்றபடி பாடல் முழுதும் மிக சிக்கலான தாளம், தாளம் மட்டுமே. இது ராஜாவின் பாடல்களில் அபூர்வம். இரண்டாவது இடை இசையில் 12 தாள அளவுக்கு எந்த accompaniment -இம் இல்லாமல் தாளம் மட்டும் இயங்குவது ராஜாவின் வேறெந்த பாடலிலும் கேட்டதில்லை. இந்த கிரியேடிவ் அமைதியை ராஜா கைகொண்ட பாடல்கள் எல்லாம் (மிகசிலவேயானாலும்) அற்புதமான அமைப்புகள்: கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை), தூரத்தில் நான் கண்ட உன் மனம் (நிழல்கள்), தாலாட்டுதே வானம் (கடல் மீன்கள்)....

இவற்றிலும் மற்றும் மிகப் பல பாடல்களிலும், ரிதம் ஸ்டார்ட் - ஸ்டாப் முன்னிசை, இடை இசைகளுக்குள், சரணத்தில் என தாள நடை நின்று, நடை மாறுவதும், நின்று வேறு வாத்தியங்கள் துவங்குவதும் ராஜாவின் ஓர் உத்தி. 'இசையில் தொடங்குதம்மா' அதிலும் மாறுபட்ட பாடல். துவக்கத்திலிருந்து முடிவு வரை தாளம் எங்கும் நிற்பதில்லை. சுழன்று சுழன்று ஓர் உச்சத்திற்கு செல்வதும் சரணம் துவங்கியதும் மயங்கி மயங்கி கீழே சரிவதும் என அலகிலா மருகுதலாகவே இசை நிகழ்கிறது.

'நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே
உயிர்களே
உலகிலே இன்பத்தை தேடி தேடி
தேகத்தில் வந்ததே'

- இது இரண்டாவது சரணம். இதற்கு முன்னும் பின்னும் வரும் சுர சங்கதிகளில் அஜய் சக்ரபர்தியும் தாளமும் பிரிக்க முடியாதபடி பின்னி துள்ளுவது எழுத்தில் வடிக்க முடியாத அழகு.

உலக இசையை விடுங்கள், இந்திய இசையில், இந்த சூழ்நிலைக்கு, இந்த பாத்திரப் படைப்புக்கு, இந்தக் கலாச்சார பின்புலத்திற்கு இசை வேறு யாரால் சிந்தித்திருக்க முடியும்? எவ்வளவு ஓர் ஆழமான புரிதலும், உள்வாங்குதலும், மேதைமையும் இருப்பின், இந்த பாடல் பிறந்திருக்கும்? கை கூப்பி தொழத் தோன்றியது, அந்த பாடலை எத்தனையாவது முறையாகவோ அந்த நள்ளிரவில் கேட்ட போது...

இனி 'இசையில் தொடங்குதம்மா'....



IsayilThodanguthamma.mp3












Monday, January 4, 2010

கிரியா வித்வம்


பள்ளத்தில்
பொருந்தியது கோல்
கையின்
வலிவு ஏற
சக்கரசுழற்சியின் தளம்
நேரென்று ஆகும்
பத்து விரல்கள்
போய் பதிய
இயைந்து வளைந்து
அழுத்தம் பெற்று
பெற்ற இடத்தில்
வட்டப்பாதை கொள்ளும்
உயர்ந்து எழும்
உருவம்
விரல்களின்
வித்வ வேகம்

சிறிய
மேடிட்ட ஒரு வட்டம்
கீழ்
உட்குழிந்த
நாலு விரற்கடை பள்ளம்
மெல்ல பக்கவாட்டில்
சரிந்து
உச்சமடைந்து
உள்வாங்கி
முடியும்
பானை

முதலில் தெரியுமா
உங்களுக்கு

அந்த
விரல்களுக்கு?

Sunday, December 27, 2009

தேடி

உயிரை
உருக்கிக் குடிக்கும்
குளிர் காற்று
எரிச்சலூட்டுகிறது
நச நசத்து ஒழுகும்
மழையின் ஈரம்
சகிக்கவில்லை
புலர்ந்து உலர்த்தும்
வெயிலின் வாடையில்
குமட்டல் கூடும்
மரங்களின் அசைவிலும்
புணர்ச்சியின் சித்திரம்
தலையை பிளக்கும்
அந்த
அதிகாலை குயிலின்
குரல்
கழன்றோடிய
கனவின்
செயற்கை பாதுகாப்பை
தொடையிடுக்கு சூடாய்
நினைவுறுத்தும்
துழாவும் இருட்டு
வெளியில் சிந்திக் கிடக்கும்
விழிகள்
போக வேண்டுவதும்
ஒரு தூரம்
காவியமா
கழிசடையா
நிர்ணயிக்கப்படாத
ஒற்றை வரியுடன்

நுனி

கண்களை இழந்தவன்
நீட்டிய
கைகளின் முனையில்
விரல்கள்
விரல்களின் நுனியில்
கண்கள்

ஒன்று

போலிகள் செயற்கையானவை
செயற்கை என்றும் போலி
ஒன்றுக்குள் ஒன்று
ஒன்றே ஒன்று

நகர்தல்

கால்களை
நிறுத்தி விட்டேன்
முன்னால்
நடந்து கொண்டிருந்தது
மனம்

Pandit Venkatesh Kumar and Raag Hameer