Sunday, October 16, 2011

கேள்வி(கள்)

ல்லா கேள்விகளுக்கும் 
விடையிறுக்கப்பட்டு விட்டது

கேட்பதற்கு யாரிடமும்
கேள்விகள் மீதம் இல்லை

கேள்விகளற்ற பதில்களை
சுமந்து திரிகிறார்கள்

மிச்சமிருந்த வினாக்களை
பிணங்களோடிட்டு
புதைக்கிறார்கள் 

எதிர்வரும் 
சுபிட்சத்தை கட்டியங்கூறி  
வார்த்தைகள் 

மூச்சிறுகும் விடையடர்ந்த 
வனங்களுள்
ஒற்றைக் கேள்விக்காக 
அனைவரும் தவமிருக்கிறார்கள்

கேட்பதெதுவென்றே அறியா சிலர்
எது கேட்பதென்றே அறியா சிலர்
விடையே கேள்வி என்றும்
கேள்வியே விடை என்றும் சிலர்

என்றோ வந்துவிடும்
ஒரு வினா
எப்படிக் காணும் 
பொருந்தும் ஒரு விடை  

இளையராஜாவின் 'வானம் எங்கே மேகம் எங்கே'

இளையராஜாவின் இசை ஓர் அரிய ஞானம் போல். எது எப்போது தேடி வர வேண்டுமோ அப்போது வரும். எப்போது வரும், வர வேண்டும் என்று யாரும் சொல்லி விட முடியாது.

இந்த ஞானம் எனக்கு மிகச் சமீபத்தில் தான் வாய்த்தது.

அந்த நிகழ்ச்சியை சொல்கிறேன்.

பிறந்ததிலிருந்து (நான் பிறந்ததை சொல்கிறேன்) ராஜாவின் இசையோடு தான் வாழ்ந்து வருகிறேன். அன்னக்கிளி தொடங்கி இப்போதைய 'குன்னத்தே கொன்னைக்கும்' வரை அவரின் பாடல்கள் இல்லாமல் என் காதல்கள், நட்புகள், துக்கங்கள், இழப்புகள், வரவுகள் எதுவும் இருந்ததில்லை. 

எத்தனையோ நல்ல பாடல்களை (உருப்படாத படங்களினால்) கேட்கத் தவறி, மிக பிற்பாடு கேட்டதுண்டு. இன்னும் கேட்காத சில பாடல்கள் இருக்கக் கூடும். நம்ப முடியாத பல சந்தர்ப்பங்களில் அவற்றை தேடி அடைந்திருக்கிறேன். 

ஆனால் 'நெஞ்சிலாடும் பூ ஒன்று' என்ற படத்தில் வரும் 'வானம் எங்கே மேகம் எங்கே' என்ற பாடலை இந்த மாதம் நான் கண்டடைந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி கரை காண முடியாதது. 

கர்நாடக சங்கீத ராகங்களில் அமைக்கப்பட்ட ராஜாவின் பாடல்களை தேடி கொண்டிருந்த போது இந்த வைரம் சிக்கியது. அமிர்தவர்ஷிணி ராகத்தில் அமைக்கப்பட்டு, ஜானகி - ஜெயச்சந்திரன் பாடிய பாடல். முதல் முறை கேட்ட போது எப்படி இத்தனைக் காலம் இந்தப் பாடலை கேட்காமல் பிரிந்திருந்தோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. 

மீண்டும் மீண்டும் கேட்க, ராஜாவின் இசை ஓர் அரிய ஞானம் போல என்ற தெளிவு தோன்றியது.

அப்படி என்ன விசேஷம்?

நான் முன்பொரு பதிவில் கூறியிருந்தது போல், ராஜாவின் பல அருமையான வெற்றி பாடல்களில் ஒரு கிரியேடிவ் ரஷ் இருக்கும்; சில பாடல்களில் மட்டுமே மிக மென்மையான நிதானம் கூடும். 'வானம் எங்கே மேகம் எங்கே' அப்படியொரு பாடல்.

பல்லவி, இரு சரணங்கள் மற்றும் இரு இடையீடு இசைக்கோர்வைகள் அனைத்தும் மிக மென்மையாக, மிக நளினமாக மிதக்கின்றன. ஆரம்பம் பேஸ் கிடாரோடு ஆரம்பித்து ஒவ்வொரு இசைக்கருவியாக சேர்ந்து வேறொரு தளத்திற்கு போக ஆரம்பிக்கும் போது, குழுவின் கோரஸ் சேர்க்கிறது. 

கவுன்ட்டர் பாயிண்ட் உத்தியில் இசைக்கப்பட்டது என்று தோன்றும் வண்ணம் அந்த கோரசுடன் ஜானகி லீடில் சேர்ந்து பாட, பாடல் மெதுவே எடை குறைந்து லேசாகிறது. நம் மனமும்.

பல்லவி முடிந்து முதல் இடையீடு இசையில் ஆரம்பிக்கும் ஒரு பிரமாத வயலின் பிட் முடிந்ததும் மீண்டும் கோரஸ். இந்தப் பாடலின் அற்புதத் தன்மைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று கோரஸ். ராஜா கோரசை வயலின் ஆர்கெஸ்ட்ரா போன்றே உபயோகித்திருக்கிறார். 

அவரது பாடல்களில் வரும் விரிவான வயலின் ஆர்கெஸ்ட்ரா இசையை ஏறக்குறைய கோரசுக்கும் ஜானகிக்கும் பிரித்து பின்னணி-லீட் என்று அமைத்திருக்கிறார்.

முதல் இடையீடு இசை முடிந்து ஜெயச்சந்திரன் 'விண்மீன்கள் தாலாட்ட' என்று ஆரம்பிக்கும்முன்னால் வரும் குழல் இசை வழக்கம் போல் ஒரு பாரில் முடியாமல் இரண்டு பார் வரை நீள்கிறது. 

இரண்டாம் இடையீடு இசையில் காம்போ ஆர்கனை அடுத்து வரும் ஓர் வயலின் ஆர்கெஸ்ட்ரா மனதை தடவ, கோரஸ், அடுத்து ஜானகியின் ஹம்மிங் உருக்குகிறது. மிக மிக எளிமையான ரிதம். 

தவற விடவிருந்த இந்த வைரத்தை நான் கண்டு கொண்டது முதல் ஒரு நாள் ஒரு தடவையேனும் கேட்காமல் இருப்பதில்லை. நீங்களும் ஆளரவமற்ற இரவின் தனிமையில் கேட்டுப் பாருங்கள் - விழிகளின் அடைப்பில் மனம் திறப்பதை உணர்வீர்கள்.





Click to hear music file

Maha Vihara Duta Maitreya, Batam, Indonesia












Sunday, October 2, 2011

அனைத்துமுணர்தல்


யூதாசுக்கு தெரியும்
யேசுவுக்கு தெரியும்
உனக்கு தெரியும்
எனக்கும் தெரியும்
அன்றாட வாழ்வில்
அவரவர்க்கு 
அளந்து தரப்பட்ட
அவரவர் பங்கு துரோகங்கள் 
அஹம் பிரம்மாஸ்மி 

இரசனை விளிம்புகள்


கடப்பதற்காக
ஏற்றுக் கொண்ட
தூரங்கள்
கடமைகளின் காயங்கள்
கடந்து போன கவலைகளின்
காய்ந்து போன வடுக்கள்

இற்று விழும் நேரம்
உற்ற துணை யார்

இரசனைகள்

இரசனைகளின் விளிம்புகள்
வரையறுக்க பட்டவையா
அதன் வீச்சுகள்
வகிரும் கோணம் என்ன

ஆழ்ந்த புரைகளில்
புழுக்கள் நெளிய
நிர்ப்பந்த அடிகள்
குருதி தெறிக்கும்
வலியாற்றும் விடை
இரசனை

அணையவிருந்த அக்கினியை
வளர்த்துவிட்ட பொறிகள்
மறையவிருந்த ஒளியை
இழுத்து நிறுத்திய துருவங்கள்

ஒவ்வொரு கடலின் 
ஆழமும்
அளக்கப்பட்டவை
அளந்த நிறைகளில்
வேறுபாடு கானலும்
அதிக ஆழம்
நிறுத்தலும்
குறித்தவை தக்கவை
அல்லவெனாலும்
எமக்கே உரியவை

ஆழத் தேடலின்
அழுத்த வேதும்பல்களில்
அடுத்த கடலுக்கு
அலை பாய்தலும் உண்டு 

துணை இல் தனிமையும்
தனிமையின் துணையும்
அழுத்திக் கிழித்த ஊனங்களும்
அணைத்துத் திளைத்த ஆனந்தமும்
இரசனை

வாழ்வில் கடக்கும் எவ்வொரு கணமும்
வெறுக்கத் தகுந்ததல்ல 
வெளிப்பாடு எதுவாயினும்
இரசிக்க மறுத்து விடாதே

அதுவே
நீ நான் தேடிக்கொண்டிருந்த
இரசனையாக இருக்கக் கூடும்
அதுவே
உன் என் கடைசி 
இரசனையாகவும்
இருந்துவிடக் கூடும்

- 13/10/86

Pandit Venkatesh Kumar and Raag Hameer