Saturday, October 22, 2011

ஒரு தீபாவளியின் முன்னிரவில்

இறுக்கம் நிறைந்த
மனமுனக்கு

நெகிழ்வே என் தன்மை

கடந்தோடிய வருடங்களில்
உன் இறுக்கத்தை எனக்கும்
என் நெகிழ்வை உனக்கும்
கடத்த
முயற்சித்து வந்திருக்கிறோம்

இறுக்கம் வண்மை தருமென்றும்
நெகிழ்வு இனிமை சேர்க்குமென்றும்
வாதித்திருக்கிறோம்

வெற்றி தோல்வி என்றில்லை
இறுக்கம் நெகிழ்வு
இரண்டும் தேவை
என்று நாங்கள்
அன்று அறிந்திருக்கவில்லை

வரவும் இழப்பும் குறித்த
விவாதங்களில்
கழிந்தன இரவுகள் வருடங்கள்

இன்று
சுற்றமின்றி
பிள்ளைகளுமின்றி
பண்டிகையொன்று நெருங்குகிறது
அமைதியாய்
இறுகிப்போய் காத்திருக்கையில்
கண்களினோரம் கசிவது
நெகிழ்வின்றி வேறென்ன 

Tuesday, October 18, 2011

உயிரோசையில் வெளிவந்திருக்கும் கவிதை - கேள்விகள்

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4897


பொற்கோவின் எதிர்வினை


நண்பர் சரவணன் வரலாற்றை மறைத்து தனக்கு என்ன தேவையோ அதை முன்னிறுத்தி இந்த பதிவை தாங்கள் எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது. என்று இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதோ அன்று முதல் போராட்டங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தங்களை போன்றவர்கள் வரலாற்றை திரித்தும் மறுத்தும் செய்திகளை பரப்புவது எந்த எதிர்கால சந்ததியினருக்காக அன்று புரியவில்லை. 

இலவசத்திற்கு ஏங்கி நிற்கிற அவல நிலையில் மக்கள். ஏதோ அந்த மக்கள் நாம் வாழுகிற ஒரு மக்கள் குழுமத்தின் ஒரு அங்கம் என கருதாமல் அவர்கள் இந்த சமுகத்திற்கு பங்கம் என்கிற தொனியில் உங்களது பதிவு அமைந்துள்ளது. மாற்று மின் உற்பத்திக்கு எத்தனையோ மாற்று சக்தியிருப்பதாக பல அறிஞர்கள் கட்டுரைகளாக எழுதி குவித்து இருக்கிறார்கள். படியுங்கள் தயவு செய்து! 

Sunday, October 16, 2011

என்செய நினைத்தாய் தமிழச் சாதியை...

ஒரு தனிமனிதன் கள்ளமும் கபடமும் நிறைந்தவனாய் இன்றொரு பேச்சும்  நாளையொரு செயலுமாய் வலம் வந்தால் அவனை என்னவென்று சொல்வோம்? ஒரு சமூகமே அப்படியிருந்தால்? 

தமிழ்நாட்டின் நிலை அப்படித்தானிருக்கிறது. 

கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் வேண்டும்; ஆனால் தொழிற்சாலைகள் வேண்டாம்.

மின்வெட்டால் விவசாயம், உற்பத்தி பாதிப்பு, போராட்டம், ஆட்சி மாற்றம்; ஆனால் மின் நிலையங்கள் வேண்டாம்.

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கிய போது, ஒரு பவுன் தங்கம் நூறு ரூபாய். இன்று, தங்கம் ஒரு பவுன் 22,000 ரூபாய்க்கு வாங்கும் மக்கள், இருபது கிலோ அரிசியை இலவசமாக பெற்று கொள்கிறார்கள். 

தங்கம் வாங்குபவர்களுக்கு அரிசி வாங்க முடியாதா? அல்லது, நாட்டின் விவசாய உற்பத்தி தட்டுகெட்டு பெருகி, விளைத்ததை விற்க முடியாமல், ஏற்றுமதி செய்யவும் இயலாமல் அரசு இருபது கிலோ இலவசமாக தருகிறதா?

100  ரூபாய் பொருள் 22 000 ரூபாய்க்கு விலை மதிப்பு கூடியிருக்கிறதென்றால், ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி இப்போது என்ன மதிப்புக்கு விற்க வேண்டுமென்று கணக்கு போட்டுப் பாருங்கள். 

மற்றொருபுறம், வேளாண்மை சாகிறது; விளைபொருளுக்கு விலை இல்லை; விவசாயி தற்கொலை செய்கிறான் என்ற குரல்கள். எல்லாருக்கும் (தங்கம் வாங்க பணம் இருக்கையில்) இலவசமாக வாரி வழங்கும் நெல் பின் எப்படி விளைந்தது? யார் விளைவித்தது? யார் அதற்கு விலை நிர்ணயித்தது? அதை யார் ஏற்றுக் கொண்டது?   

இந்த இரட்டை வேடம் எல்லா தளங்களிலும் ஊடுருவி விட்டது.  தலைவனை பார்த்து, அவன் பகட்டைப் பார்த்து, தொண்டர்களும் வாய் வேஷங்கள் போடுகிறார்கள். வேஷத்தை நிலை நிறுத்த போராட்டங்கள் தேவை; பொய் தேவை. இப்படியே கடைமட்டம் வரை.

கூடங்குளம் அணு உலையும் மக்கள் போராட்டமும் 

கூடங்குளம் 1989 இல் கையெழுத்தாகி 1991  நிதி ஒதுக்கப் பெற்று, 2001 இல் கட்டுமானம் ஆரம்பித்து, இன்று நான்கு அணு உலைக்கூடங்கள் நிறைவு பெற்று விட்டது. 

US $ 3 .5  பில்லியன் மதிப்பில் கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்து நடக்கும் அமைப்பில் இருக்கும் குறைகள், பணி நிறைவு பெற்று அடுத்த வாரம் மின் உற்பத்தி துவங்க இருக்கும் நேரத்தில் தான் அங்கு வசிக்கும் சமூகத்திற்கு  தெரிகிறது.  சாகும் வரை உண்ணாவிரத போராட்டங்கள். இவ்வளவு தீவிரம் ஏனிந்த வருடங்களில் காட்டப்படவில்லை? 

ஒரு வேலை அங்கிருந்த மக்கள் எல்லாம் அகற்றப்பட்டு இப்போது கோஷம் இடுபவர்கள் எல்லாம் புதிதாக பிறந்தவர்களா, தருவிக்கப் பட்டவர்களா? 

இவ்வளவு தீவிர போராட்டங்கள் நடக்கும் போதுதான், இதே மக்கள் கூட்டம் தி.மு.கவை மின்வெட்டைக் காரணம் காட்டி பதவியிலிருந்து இறக்கியிருக்கிறது என்பதையும் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. புதிதாக வந்த அ.தி.மு.க வும் மின் உற்பத்தியை உடனடியாக கூட்டி, தட்டுபாட்டை சரி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தே ஆட்சிக்கு வந்திருக்கிறது. இரண்டு மாதங்கள் கழித்து, கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கும் போது போராட்டங்கள் சூடு பிடிப்பது, தமிழக ஆட்சி நிலைத்தன்மையையும், தொழில் வளர்ச்சியையும் குலைப்பதற்காக நடக்கும் சதியோ என்றே அஞ்ச வேண்டியுள்ளது.

மக்களை இயக்கும் கட்சிகளும் தலைவர்களும் அந்த உலைக்கூடம் மூடுவதால் ஏற்படப்போகும் US $ 3 .5  பில்லியன் இழப்பையும், 1000 MW மின்சார தேவைக்கான மாற்று ஏற்பாடுகளையும் விளக்குவார்களா? மின்சார தட்டுப்பாட்டால் தமிழகத்திற்கு வர வேண்டிய கார் தொழிற்சாலை குஜராத்திற்கு சென்றதற்கு பதில் கூற வேண்டிய கடமை யாருக்காவது இருக்கிறதா?

கூடங்குளம் IAEA வின் அனைத்து சோதனைகளை வெற்றிகரமாக தாண்டிய பிறகே NPCIL இடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அணு உலைகளின் பாதுகாப்பு பெரும் மக்கள் சமூகத்தின் பாதுகாப்பு என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. 


அணு உலை விபத்துகள் 

உலகத்திலேயே எந்தவொரு தொழிலிலும், உற்பத்திசாலையிலும் விபத்துகள் நடக்கலாம்.  ஆனால், எப்படி போக்குவரத்திலேயே விமானப் பயணங்கள் தான் பாதுகாப்பானவையோ (பயணிகள்/விபத்தில் உயிர்ப்பலி விகிதத்தில்), அப்படி மின் உற்பத்தியில் மட்டுமல்ல, தொழிற்கூடங்களிலும் அணு மின் உலைகளின் விபத்து விகிதம் மிக மிக குறைவு.

அணுவை பிளந்து மின்னுற்பத்தி செய்ய ஆரம்பித்த இந்த 65 வருடங்களில் இது வரை மூன்றே விபத்துகள்! ஆம், அமெரிக்காவில் த்ரீ மைல் ஐலாண்ட் - 1960 களில், 80 களில் ரஷ்யாவில் செர்நோபில், அதற்கு பிறகு இந்த வருடம் நடந்த ஜப்பானிய புகுஷிமா விபத்து. 

புகுஷிமா விபத்து அணு உலையின் கோளாறினால் நடந்ததல்ல; நில நடுக்கம் ஏற்பட்டு, வீடுகள் அனைத்தும் சரிந்த போதும், அணு உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து இயங்கிக் கொண்டுதானிருந்தது. இயற்கை அதோடு விட்டிருந்தால், இன்று தமிழகத்தில் போராடுபவர்களுக்கு முழக்கமிட என்ன மிஞ்சியிருக்கும் என்று தெரியவில்லை.

ஆழிப் பேரலை உட்புகுந்து பல்வேறு பாதுகாப்பு அடுக்குகளாக அமைத்திருந்த அத்தனை மின் கொள்கலன்கள், ஜெனெரேட்டர்கள் மற்ற உலைக்குள் நீரை தொடர்ந்து செலுத்தி குளிர்விக்கும் பம்ப்புகளின் மின் இணைப்பை துண்டித்து அலையோடு இழுத்து சென்றதால் சம்பவித்த விபத்து. 

மனிதன் இயற்கையோடு போட்டி போட்டு 32 அடி அலையை கணித்திருக்க வேண்டும் என்றோ, அணு உலைகளில் மின் உற்பத்தி முடிந்து மீதமிருக்கும்  அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள்வதில் தன்னிறைவை எட்டி விட்டோம் என்றோ நான் சொல்லவில்லை. 

கூடங்குளம் நிர்மாணிக்கும் முன்னமே சீஸ்மிக் சோதனைகள் செய்து, அதற்கேற்ப கட்டுமானம் செய்யப்பட்டிருக்கிறது. புகுஷிமா விபத்தின் மூலம் நாம் கற்ற பாடங்கள் என்ன, எவ்வளவு நில நடுக்க அதிர்வுகளை உலை தாங்கும் வண்ணம் வடிவமைத்து கட்டபட்டிருக்கிறது, ஆழிபேரலை போன்ற நிகழ்வுகளினால் மின் சாதனங்கள் துண்டிக்கபடாத வண்ணம் அமைக்கப் பட்டிருக்கிறதா, அணு உலை விபத்து நேர்ந்தால் மக்கள் பாதிக்காத வண்ணம் எத்தனை தூரம் தள்ளி இருக்க வேண்டும், என்ன ஏற்பாடுகள் விரைந்து வெளியேறும் வண்ணம், செய்யப்பட்டிருக்கிறது, மக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டால் என்ன நஷ்ட ஈடு தரப்படும் - போன்ற கேள்விகளை கேளுங்கள்.

திருப்தி அளிக்கும் வரை கேளுங்கள். உங்கள் பாதுகாப்புகளை உறுதிசெய்து கொள்ளுங்கள். சந்தேகமெழுப்பும் படி, 20 வருடம் அமைதியாக இருந்து விட்டு போராட்டம் செய்யாதீர்கள்.  

முன்னேற விலை கொடுக்க வேண்டும். வலி தாங்க வேண்டும். 

உழைக்கச் சோம்பும் ஒரு  கூட்டம் , ஒரு நாளைக்கு 100 ரூ. கூலி வேண்டும், சாப்பிட அரிசி இலவசமாக வேண்டும், இலவச தொலைகாட்சி, இலவச.... இலவச..., குடிக்க வீட்டுக்கு அருகிலேயே அரசு மதுக்கூடம் வேண்டுமென்று விடுக்கும் கோரிக்கைகளில் அரசும், சமூகமும் இணைந்து இயங்குவார்களேயானால், உழைப்பினால், கல்வியினால்,  தொழில் முன்னேற்றத்தினால் இதுவரை அடைந்திருக்கிற வளர்ச்சியை விடுத்து, வருங்கால சந்ததிகள் இலவச அரிசி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள்.

கேள்வி(கள்)

ல்லா கேள்விகளுக்கும் 
விடையிறுக்கப்பட்டு விட்டது

கேட்பதற்கு யாரிடமும்
கேள்விகள் மீதம் இல்லை

கேள்விகளற்ற பதில்களை
சுமந்து திரிகிறார்கள்

மிச்சமிருந்த வினாக்களை
பிணங்களோடிட்டு
புதைக்கிறார்கள் 

எதிர்வரும் 
சுபிட்சத்தை கட்டியங்கூறி  
வார்த்தைகள் 

மூச்சிறுகும் விடையடர்ந்த 
வனங்களுள்
ஒற்றைக் கேள்விக்காக 
அனைவரும் தவமிருக்கிறார்கள்

கேட்பதெதுவென்றே அறியா சிலர்
எது கேட்பதென்றே அறியா சிலர்
விடையே கேள்வி என்றும்
கேள்வியே விடை என்றும் சிலர்

என்றோ வந்துவிடும்
ஒரு வினா
எப்படிக் காணும் 
பொருந்தும் ஒரு விடை  

இளையராஜாவின் 'வானம் எங்கே மேகம் எங்கே'

இளையராஜாவின் இசை ஓர் அரிய ஞானம் போல். எது எப்போது தேடி வர வேண்டுமோ அப்போது வரும். எப்போது வரும், வர வேண்டும் என்று யாரும் சொல்லி விட முடியாது.

இந்த ஞானம் எனக்கு மிகச் சமீபத்தில் தான் வாய்த்தது.

அந்த நிகழ்ச்சியை சொல்கிறேன்.

பிறந்ததிலிருந்து (நான் பிறந்ததை சொல்கிறேன்) ராஜாவின் இசையோடு தான் வாழ்ந்து வருகிறேன். அன்னக்கிளி தொடங்கி இப்போதைய 'குன்னத்தே கொன்னைக்கும்' வரை அவரின் பாடல்கள் இல்லாமல் என் காதல்கள், நட்புகள், துக்கங்கள், இழப்புகள், வரவுகள் எதுவும் இருந்ததில்லை. 

எத்தனையோ நல்ல பாடல்களை (உருப்படாத படங்களினால்) கேட்கத் தவறி, மிக பிற்பாடு கேட்டதுண்டு. இன்னும் கேட்காத சில பாடல்கள் இருக்கக் கூடும். நம்ப முடியாத பல சந்தர்ப்பங்களில் அவற்றை தேடி அடைந்திருக்கிறேன். 

ஆனால் 'நெஞ்சிலாடும் பூ ஒன்று' என்ற படத்தில் வரும் 'வானம் எங்கே மேகம் எங்கே' என்ற பாடலை இந்த மாதம் நான் கண்டடைந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி கரை காண முடியாதது. 

கர்நாடக சங்கீத ராகங்களில் அமைக்கப்பட்ட ராஜாவின் பாடல்களை தேடி கொண்டிருந்த போது இந்த வைரம் சிக்கியது. அமிர்தவர்ஷிணி ராகத்தில் அமைக்கப்பட்டு, ஜானகி - ஜெயச்சந்திரன் பாடிய பாடல். முதல் முறை கேட்ட போது எப்படி இத்தனைக் காலம் இந்தப் பாடலை கேட்காமல் பிரிந்திருந்தோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. 

மீண்டும் மீண்டும் கேட்க, ராஜாவின் இசை ஓர் அரிய ஞானம் போல என்ற தெளிவு தோன்றியது.

அப்படி என்ன விசேஷம்?

நான் முன்பொரு பதிவில் கூறியிருந்தது போல், ராஜாவின் பல அருமையான வெற்றி பாடல்களில் ஒரு கிரியேடிவ் ரஷ் இருக்கும்; சில பாடல்களில் மட்டுமே மிக மென்மையான நிதானம் கூடும். 'வானம் எங்கே மேகம் எங்கே' அப்படியொரு பாடல்.

பல்லவி, இரு சரணங்கள் மற்றும் இரு இடையீடு இசைக்கோர்வைகள் அனைத்தும் மிக மென்மையாக, மிக நளினமாக மிதக்கின்றன. ஆரம்பம் பேஸ் கிடாரோடு ஆரம்பித்து ஒவ்வொரு இசைக்கருவியாக சேர்ந்து வேறொரு தளத்திற்கு போக ஆரம்பிக்கும் போது, குழுவின் கோரஸ் சேர்க்கிறது. 

கவுன்ட்டர் பாயிண்ட் உத்தியில் இசைக்கப்பட்டது என்று தோன்றும் வண்ணம் அந்த கோரசுடன் ஜானகி லீடில் சேர்ந்து பாட, பாடல் மெதுவே எடை குறைந்து லேசாகிறது. நம் மனமும்.

பல்லவி முடிந்து முதல் இடையீடு இசையில் ஆரம்பிக்கும் ஒரு பிரமாத வயலின் பிட் முடிந்ததும் மீண்டும் கோரஸ். இந்தப் பாடலின் அற்புதத் தன்மைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று கோரஸ். ராஜா கோரசை வயலின் ஆர்கெஸ்ட்ரா போன்றே உபயோகித்திருக்கிறார். 

அவரது பாடல்களில் வரும் விரிவான வயலின் ஆர்கெஸ்ட்ரா இசையை ஏறக்குறைய கோரசுக்கும் ஜானகிக்கும் பிரித்து பின்னணி-லீட் என்று அமைத்திருக்கிறார்.

முதல் இடையீடு இசை முடிந்து ஜெயச்சந்திரன் 'விண்மீன்கள் தாலாட்ட' என்று ஆரம்பிக்கும்முன்னால் வரும் குழல் இசை வழக்கம் போல் ஒரு பாரில் முடியாமல் இரண்டு பார் வரை நீள்கிறது. 

இரண்டாம் இடையீடு இசையில் காம்போ ஆர்கனை அடுத்து வரும் ஓர் வயலின் ஆர்கெஸ்ட்ரா மனதை தடவ, கோரஸ், அடுத்து ஜானகியின் ஹம்மிங் உருக்குகிறது. மிக மிக எளிமையான ரிதம். 

தவற விடவிருந்த இந்த வைரத்தை நான் கண்டு கொண்டது முதல் ஒரு நாள் ஒரு தடவையேனும் கேட்காமல் இருப்பதில்லை. நீங்களும் ஆளரவமற்ற இரவின் தனிமையில் கேட்டுப் பாருங்கள் - விழிகளின் அடைப்பில் மனம் திறப்பதை உணர்வீர்கள்.





Click to hear music file

Maha Vihara Duta Maitreya, Batam, Indonesia












Pandit Venkatesh Kumar and Raag Hameer