Sunday, January 10, 2016

S. ஜானகியின் ஆகச் சிறந்த பாடல்

ஓரிரு வருடங்களுக்கு முன், ஜானகியின் சிறந்த 50 பாடல்கள் என்ற பதிவை எழுதிய போது, ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு சிறிய குறிப்பு எழுத வேண்டுமென்று எண்ணியிருந்தேன். நேரமின்மையால் இயலாமல் இருந்தாலும், அந்தப் பட்டியலில் இடம் பெற்ற 'நிழல்கள்' படத்தின் 'தூரத்தில் நான் கண்ட உன் முகம்' என்ற பாடல் மட்டும் கேட்கும்தோறும் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது; இந்த வார இறுதியில் நேரம் தேடி எழுதியே தீர வேண்டியதாகி விட்டது.


இந்த இரு நாட்களாக இந்தப் பாடலின் பல வடிவங்களுடன் வாழ்ந்தபோது ஒரெண்ணம் உறுதிப்பட்டது - என்னளவில், ஜானகியின் ஆகச் சிறந்த பாடலாக வரிக்கலாம் என்று. ராஜாவின் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில், முதற்பத்துக்குள் வைக்கலாமென. பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் அவர்களின் நூற்றுக்கணக்கான பாடல்களில் முதலிடத்தில் கொள்ளலாமென

ஏன்?

ஒரு திரையிசைப்பாடலின் வெற்றியில் நான்கு பங்குகள் உண்டு: பாடல் வரிகள், பாடிய பாங்கு, மெட்டும், இடையிசையும், பாடல் திரைப்பதிவாக்கபட்ட விதம். 'தூரத்தில் நான் கண்ட உன் முகம்' - மற்ற வெற்றிப் பாடல்களை ஒப்புநோக்கும்போது, ஒரு குறையுடன் போட்டியில் நுழைகிறது.

பாடல் படத்தில் இடம் பெறவில்லை. பாரதிராஜாவின் அற்புதமான க்ளோஸ்-அப் காட்சிகளோ, மோன்டாஜ் தொகுப்போ இல்லாமலும்  இந்தப் பாடல் இத்தனை வருடம் உயிர் தரித்திருந்தது மட்டுமல்லாமல், நானறிந்த பல நல்ல இசை ரசிகர்களிடையேயும் உணர்வில் கலந்த பாடலாக இருக்கிறது என்ற உண்மை காட்டுவது பாடலின் உருவாக்கத்தில் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆகியோரின் பங்களிப்பினாலாயே முழுமையான வெற்றியடைந்த உன்னதம் இந்தப்  பாடல் என்பதையே.

படத்தின் கதைமாந்தர்களின் பாத்திரப் படைப்பின் பின்புலமின்றி இந்தப்பாடலின் முழுமை தரும் உணர்ச்சிகள் ஒரு நிகரற்ற அனுபவம்.

முதல் முறை கேட்கும் போது என்ன விதமான ஒரு சித்திரம் உருவாகிறது?

உணர்வுக்கொந்தளிப்புகள் நிறைந்த, காதல் வயப்பட்ட இளம்பெண். ஊசலாட்டங்கள் கொண்டவள் ஆனால் நேர்மையானவள், காதல் தரும் வலியை சுகிப்பதிலும், வேதனை தரும் பாடங்களிலும் உண்மையைக்  காண்பவள். ஒரு கணம் இறைஞ்சினாலும், மறு கணம் தன்னிலை அடைந்து கொள்பவள். இப்படிப்பட்டவளின் காதல் வாழ்வின் ஒரு திருப்புமுனைச் சித்திரம்.

ஆனால், ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மேலும் பல பரிமாணங்கள் கூடுகின்றன.

பாடலின்  தனித்துவமான வரிகளாலும், மெட்டு/இடையீடு இசையாலும், பாடிய மேன்மையாலும் மட்டுமே இது சாத்தியமாகிறது.





முதலில் பாடல்:

தமிழ் திரைஇசைப்பாடல்களின் தேய்வழக்குக் குறைகளில் சிக்காதவொரு பாடல். 'ராஜா - ரோஜா', 'ராணி - வா நீ', 'பாடல் - ஆடல்' போன்ற பிரயோகங்கள் இல்லாமல், (தஞ்சம் உன் நெஞ்சமே என்ற வரி தவிர), மிக எளிய, உண்மையான, அதனாலாயே அற்புதமான வரிகள்.

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

சுகம் நூறாகும் காவியமே
ஒரு  சோகத்தின்  ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம் 
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

வேய்ங்குழல் நாதமும் கீதமும்
வேய்ங்குழல் நாதமும் கீதமும்
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐயன் உன் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன் பிரபு உனையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

காதல் எனும் கீதம் பாடி
உருகும் ஒரு  பேதையான மீரா
வேளை  வரும் போது வந்து
காக்கும் கரம் காக்குமென்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்தும் கேட்கவில்லையா
கனவு போல வாழ்வின் எந்தன்
கவலை யாவும் மாற வேண்டும்

கனவு போல வாழ்வின் எந்தன்
கவலை யாவும் மாற வேண்டும்
இரக்கமும் கருணையும் உனக்கிலையோ
நாளும் எனை ஆளும் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விதி வரும் அதில்
உறவுகள் பிரிவதும் ஒரு சுகம்

வானமும் மேகமும் போலவே

வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் மறைந்த வானில் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் பிரபு உனையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு  சோகத்தின்  ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம் 
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

கவிஞர் கண்ணதாசனின் மூன்று முடிச்சு படப் பாடலான, சாகாவரம் பெற்ற ஒரு வரி கொண்ட (வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் - இந்த வரியை மிஞ்சும் ஒரு திரைப்பாடல் வரி தமிழில் இன்னும் எழுதப் படவில்லை!) பாடலுக்கு நெருங்கிய ஒரு பல்லவி.

முதல் மூன்று வரிகளிலேயே அவள் நிலை தெரிகிறது: காதலிக்கு அவன் முகம் தூரத்தில் தெரிவது ஒரு சோகத்தின் ஆரம்பம் அல்லாமல் வேறென்ன.

முதல் சரணத்தில் அவனை பிரபு என்று விளித்து, அவன் வேய்ங்குழலின் நாதம் அவள் மையலின் தாபமாக மாறுவது கூட அவன் லீலை என்கிறாள்ஏற்கனவே தாபமாக மாறிவிட்ட நாதம், எதைநோக்கி புது ராகமாக தோன்ற வேண்டும் என்று வேண்டுகிறாள்?

முழுச்சரணாகதியின் நிலையில் அடுத்த சரணம் துவங்குகிறது:

'வேளை வரும் போது வந்து
காக்கும் கரம் காக்குமென்றுநம்பியிருந்தவள்,

'காலை மாலை பூஜை செய்தும்',

காக்கும் அந்த வேளை வரவில்லையா என்று மன்றாடுகிறாள்.
எப்படியான பூஜை - தீராத ஆசையோடும் வாடாத பூக்களோடும் - என்ன ஒரு அழகிய எளிய வரி! வாடாத பூக்கள் என்பது அவள் ஆசைதானே!

ஒரு நொடியில் அவன் வந்துவிட்டால் அவள் கவலை எல்லாம் ஒரு  கனவு போல் இல்லாமலாகிவிடலாம். அவன் வரவில்லை. அவன்  நினைவுகள் மட்டும் மீதூறுகிறது - 'மறவேன் மறவேன் மறவேன்' என்று மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொள்கிறாள்.

அடுத்த வரியே என்னைப்பொறுத்த வரையில் பாடலின் உச்சம்:

'வரும் விதி வரும் - அதில்
உறவுகள் பிரிவதும் ஒரு சுகம்'

இந்த ஏற்பு தமிழ்ப்பாடல்களில் வந்ததாக நினைவில்லை. உறவுகள் பிரிந்தால் புலம்பி, மறக்க இரு மனம் கேட்பதும், நினைக்க தெரிந்து மறக்கத்தெரியாத மனதை சபிப்பதும் பொதுமையாக இருக்குமிடத்தில், பஞ்சு ஏனிப்படி சிந்தித்தார்?

இரண்டாவது உச்சம் -

'மேகம் மறைந்த வானில் தனிமை
இன்று நான் கண்டது உண்மையே'

உன்னையே என்று எழுதியிருந்தால் 'உறவுகள் பிரிவதும் ஒரு சுகம்' என்று சொன்னதில் தொடர்ச்சி இல்லாமலாகி மெய்மை  ஒரு மாற்று குறைந்திருக்கக் கூடும். ஒரு கதை நாயகி அவனற்ற தனிமையை மேகமற்ற வானில் உணர்வதும், உணர்ந்ததை ஒப்புக்கொள்வதும் தமிழ்ப்பாடல்களில் எளிதில் பார்க்கமுடியாத ஒன்று.

நேர்த்தியான, எளிமையான மிக அழகிய எல்லாவற்றிற்கும் மேலாக மிக உண்மையான உணர்ச்சி பொதிந்த பாடல்.

ராஜாவின்  இசை:

எந்த அவசரமும், க்ரியேடிவ் ரஷும் இல்லாத பாடல். நாயகியின் தன்மையைப் போலவே எளிமையான, எந்த நகாசும், சோகப் பாடல்களுக்கே உரிய விம்மல்களோ, வேறெந்த மிகை உணர்ச்சிகளோ அற்ற நேரடியான மெட்டு.

தனிமையைப் புலப்படுத்தும் மெல்லிய ஹம்மிங்கோடு ஆரம்பிக்கிறது பாடல். மூன்று இசைத்தொகுதிகள், ஒற்றை வயலின், செல்லோவோடு கூடிய ஸ்ட்ரிங் அமைப்பு, வீணை. இதில் நாயகியை வீணையாகவும், ஸ்ட்ரிங் அமைப்பு 'வரும் விதியுடனான' போராட்டமாகவும், ஒற்றை வயலின் அவளின் மன்றாடலையும், ஊசலாட்டத்தையும் குறிப்பன எனத் தோன்றுகிறது.

பாடல் முழுதும் இவையே தீமாக உபயோகப்படுத்தியிருக்கிறார்.

முதல் இடையீடு இசையில், வீணைக்கும் (நாயகிக்கும்) ஸ்ட்ரிங் இசைக்கும் (போராட்டம்) இடையில் விவாதம். ராஜாவின் பாணி தான் என்றாலும், அவள் பாதையை மறித்து திசை திருப்பும் போராட்டம் வலியதோ எனத்  தோன்றும்படி அவளை அழுத்தும், அழுத்தி அது விரும்பும் பாதைக்கு நகர்த்தும் போக்கு.

ஒவ்வொரு வரியின் மெட்டும் புதிதாக, முதல் சரணம் முடிகிறது.

இரண்டாவது இடையீடு இசையில், விதிக்கும் அவளுக்கும் விவாதம் தொடர்கிறது. விதியின் போக்கு வன்மையானதாக மாறுவது தெரிகிறது. அவளின்  கையறு  நிலை ஓர் அவலச்சுவையுடன், ஒற்றை வயலினாக குறிக்கப் பெறுகிறது.

மீண்டும் ஒரு வரியின் மெட்டு மற்றொன்றைப் போலல்லாமல் ஒவ்வொரு வரியும் வெவ்வேறு தளங்களுக்கு நகரும் இரண்டாம் சரணம் - முதல் சரணத்தின் மெட்டும் திரும்புவதில்லை - ஒரு உச்சத்திற்கு பயணித்து கீழிறங்குவது போல் ஓர் உணர்ச்சிக்கொதிப்பில் திகைக்கிறது.

எங்கும் தன்னைக் காட்டிக்கொள்ளாத தபலா மெட்டோடு இணைந்து, இடறி விழுந்து, திகைத்து எழுந்து, அவளையும் மெட்டையும் போலவே ஒரு சம நிலைக்கு வந்து சேரும் நேரம், சரணம் முடிகிறது.

இசை கருவிகளின் சத்த அளவும், முன்னிலைத் தன்மையும்  அதி அற்புதமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. குரலோ, இசையோ, கோரசோ, எதுவும் எங்கும் தனித்து ஒலிப்பதில்லை.

என்ன ஒரு படைப்பாளுமை!

இறுதியாக, ஜானகி

இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் சொன்னது போன்ற ஒரு பெண்ணை, அவள் குரலை, அவள் மன்றாடலை, அவள் ஊசலாட்டத்தை, அவள் இயலாமையை, அவள் உண்மையை உணரும் தருணத்தை ஜானகி வெளிப்படுத்தியிருக்கும் விதம் ஒரு தரிசனம் அன்றி வேறல்ல.

ஆரம்ப ஹம்மிங்கில் வெளிப்படும் பெண்மையும், மென்மையும், அழகும், நிராதரவான உணர்வும் பாடலின் எந்தவொரு உயர்நிலையிலும், தாழ்தளத்திலும் மாறுவதில்லை. ஒரு தனித்த மனது, கேட்கின்ற மற்றொரு தனித்த மனதுடன் பேசும் பாவனையில் ஆரம்பிக்கிறார்.

உறுதியாக என்னால் கூற முடிந்த அலகு ஒன்றுண்டு:

இன்னும்  சிறிது முறுக்கினால் அறுந்துவிடக்கூடிய ஒரு தந்தியின் அதிர்வு பாடல் முழுதும் ஜானகியின் குரலில். நடுக்கத்திற்கும் அளவு குறைந்த மிக மெல்லிய அதிர்வு. இதை அவர் பாடலில் மட்டுமல்ல, வேறெந்த பாடகரின் பாடலிலும் கேட்டதில்லை. தமிழில்.

முதல் சரணத்தில் 'அய்யன் உன் தஞ்சம் என் நெஞ்சமே' எனும்போதும், இரண்டாவது சரணத்தில் 'வானமும் மேகமும் போலவே' எனும்போதும் ஜானகியின் குரலின் மென்னதிர்வு நம்மை நடுங்கச்செய்யும்.

மிக மேன்மையான நிபுணத்துவம்.

'தூரத்தில் நான் கண்ட உன் முகம்' தரும் இசை அனுபவம் மிக எளிமையானது, உண்மையானது எனவே
உன்னதமானது.

பஞ்சு அருணாசலம், ராஜா, ஜானகி ஆகியோருக்கு வந்தனம்.


Sunday, December 13, 2015

கால்கள்

மழைக்கால நடைபாதைகளில்
கவனியாது விரையும்
மாபலிக் கால்களினூடே
கூன்சுமந்து ஊரும்
நத்தைகளை
பதைபதைத்து நோக்குகிறேன்

அறியாது அவை
மாபலிக்கும்
காத்திருக்கும்
பிறிதொரு வாமனக் கால்கள் 

Thursday, December 10, 2015

திணை மயக்கம்

நாட்காட்டியில் தாள்கள் கிழியும் சத்தம்
நொடிகள் கழியும் சத்தம்

யன்னலின் வெளியே
நிறம் மாறி மாறித் தோன்றும்
இரவின் வெக்கையும்
பகலின் மழைஈரமும்

வாழ்வு என்பதும்
நகர்தல் என்பதும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகள்

சருகாகவும் தளிராகவும்
மிக மென்மையாக
மிக மிக அமைதியாக
உதிர்த்துக் கொண்டிருக்கிறது
காலம்

திறந்தே கிடந்தும்
யாரும் நுழையா
இக்கதவுகள்

திங்களொரு முறை
தோன்றும் மகனோ மகளோ
வருவது கூட
அசையா கதவுகளின்
மன்றாடலின் பேரில்

அசையா நாற்காலி அஃறிணை
அசையா கட்டில் அஃறிணை
அவற்றினூடே
உயிர்ப்புடனொரு
நாட்காட்டியும் கடிகாரமும்
பதாகை  மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: திணை மயக்கம்

http://padhaakai.com/2015/12/09/exotica/

Wednesday, November 4, 2015

ஒற்றைப் பூ


மகிழ மரத்தினின்று
பூக்கள் உதிர்வது போல்
கிரணங்கள் அறைக்குள்
பெய்து  கொண்டிருக்கின்றன

மௌனம் காத்திருந்த நம்மிருவரிடயே
இசை பேசிக் கொண்டிருந்தது 

மெல்லிய
ஆவிபுகையும்
தேநீர்க்கோப்பையை உறிஞ்சிவிட்டு 
என்னை பார்க்கிறாய்

புலர்வெயிலின்
இளவெம்மையுடன் 
மெதுமெதுவே மஞ்சள் மாறும்
அறையின் பரிமாணங்களை
ஹரி பிரசாதின் குழலிசை நிறைக்கிறது

தோடி ராகந்தானே 
என வினவுகிறேன்

தலையசைக்கிறாய்
செவிமடல் பொதிந்த
அணிகள் ஆடுகின்றன
வர்ணங்களை வாரியிறைத்தபடி

என்னுள்ளும்
பொன்னிழைகளாய் மின்னும்
காதோர குழற்கற்றைகளை 
ஒதுக்கிவிட 
தவிக்கும் என் விரல்களின்
தகிப்பை ஏன் மறைக்க வேண்டும்
என எண்ணுகிறேன்

உன் இதழில் இருந்து முறுவலொன்று
நழுவிச் சிந்துகிறது

வெளியே
வெட்கமின்றி
பூக்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன

அற்றது

நதி நிறம் மாறி 

கால்களுக்காக காத்திருக்கும்
வழுக்கும் பின்னிரவு

நீரின் அடுக்குகளில்
மெல்லிய அசைவுகளூடே
நெளியும் அரவத்தின்
அரவம்

இசை வற்றிய காற்று
அதிராத இலைகளில்
வழிந்து இறங்கி
நீர்ப்பதற்கு முன்
மயங்கி நிற்கும்
பாதத்தின் அழுத்தத்துடன்
பேசிப் பேசி மறையும்
புல்லிதழ்களின் நுனிகள்
எங்கோ ஒரு ஊரின் 
கேட்டு இல்லாமலாகி கேட்கும்
பாடல் 
இங்கு என்ன இந்த நேரம் 
என்று கேட்டால்
பதில் மட்டும் இல்லை என்னிடம்

Pandit Venkatesh Kumar and Raag Hameer