இறந்து விட்ட நண்பனின்
கைபேசி எண்ணை
என்ன செய்வது
அழைப்பே வராமல்
ஆயிரம் எண்கள்
இருப்பினும்
அழித்தாக வேண்டிய கட்டாயம்
வேறெந்த எண்ணுக்கும்
இல்லையே
கைபேசித் திரையில்
அடுக்கடுக்காக நகரும்
பெயர்களில்
நண்பனின் பெயரும்
படமும் எண்ணும்
துணுக்குறாமல்
கடந்து செல்ல முடியவில்லை
நானழைக்க முடியாமலும்
அவனழைப்பை எதிர்நோக்க
இயலாமலும்
துயருறும் இந்நிலையை
நீங்களெப்படி
எதிர்கொள்வீர்கள்
அழித்துத்தான் ஆகவேண்டுமா
அந்த எண்ணை
இருந்தால்தானென்ன
அடிக்கடி
இருப்பின் திடுக்கிடல்
தரும் வலியோடு