பகலின் கர்ப்பம்
சிறுமேக கூட்டங்களில்
வான வீட்டுக்கு வந்த
வரதட்சணையில்லா மருமகள்
சூரிய ஸ்பரிசத்திற்கு
காத்திருக்கும் அகலிகை
விண்வெளி வீட்டுக்கு
இரவில் அடித்த வர்ணம்
பகலில் வெளுத்த சாயம்
அச்சச்சோ
தொடுக்க வைத்திருந்த
முல்லை மல்லிகை கொட்டிய
தென்றல்
வானமெங்கும்
பூப்பூவாய் மலர்த்தியது
அழகு பார்த்தது
மண்
தன இரவுமகளை
மணமுடிக்க ஏற்பாடு
எத்தனை அலங்காரம்
எத்தனை கும்மாளம்
கருப்பாக இருந்தாலும்
பொன்குஞ்சு அன்றோ
நிலவே தோழிப்பெண்
சிறுமிகளெல்லாம் வெண்ணிற உடையில்
சித்திரங்கள், நட்சத்திரங்கள்
சிரித்து மகிழ
தலை குனிந்த இரவுப்பென்னை
யாரும் பார்க்கவில்லை
திருமண நேரம் நெருங்க
மணவாளன் அருகமர
மணப்பெண்ணின் கரிய முகத்திலும்
செந்நின்ற வெட்கம்
தென்றல்
மலர்களை காற்றோடு
அட்சதை தூவியது
குருவிகள் நாகஸ்வரம்
காக்கைகள் மேளம்
வானமெங்கும் ஊர்வலம்
சிங்கார மாப்பிள்ளை அழைப்பு
உயர உயர மரங்களிலெல்லாம்
பந்தல் தோரணம்
இலைகளாடியது
மகளை கட்டிக்கொடுத்த
மண்தாயின்
ஆயிரமாயிரம் கண்களில்
ஆனந்தக் கண்ணீர்
துளித்துளியாய்
கணவன் வீட்டுக்கு
சென்று மறைந்த
கண்மணி மகளை
காண்பதெப்போ?
- 12/09/85