நானோர் இயந்திரம்.
...
ஆமென பலபேர்
ஆயத்தமாய் இருப்பினும்
என் இயக்கங்கள்
வேறுவிதம்.
நீங்களும் இயந்திரங்கள்தாம்
ஆயினும்
என் இயக்கங்கள்
வேறுவிதம்
உட்கொண்ட சக்தியைவிட
வெளியியக்க சக்தி
குறைவான
நிறை இயந்திரம்
உணர்ச்சிகளற்று
இயங்கும்;
இயங்கு, இயங்கு
சக்தி கொள், சக்தி தா
சூழ்நிலை மற
இதுவே சூழலின் அவா
அடிக்கடி இரைச்சலிடும்
இயந்திரத்தை பற்ற வை;
அல்லது,
மூலையில் எறி.
முனகல் உணர்ந்து
மூச்சுணரும்
சிலபேர்
இருந்தனர் முன்பு.
எவ்வளவு நாள்தான்
எண்ணெய் தடவி
ஒன்றுகொன்று
சிக்கிக் கொள்ளாமல்
இதை ஓட்ட முடியும்?
விகிதமிழந்த எண்ணெய் போலும்
கரிப்புகையாய் துப்பி
தொழிற்ச் சாலையையே
நாற அடிக்கிறது
வேலைப்பளு
அதிகம் என்று
ஆகும் அன்றுதான்
அறுந்துபோகும் பெல்ட்
உடைந்து போகும் பல்சக்கரம்
இதை
வாங்கவோர் ஆளில்லை
ஆனாலும்
இதன் இயக்கங்கள்
வேறுவிதம்
கொடுக்கின்ற சக்தியை
சொந்த உஷ்ணத்திற்கே
செலவழித்து விடுகிற
சுயனலமியாகி விட்டது
இயந்திரம்
இயந்திர கம்பெனிக்காரர்களை
கூப்பிட்டுத் திட்டினால்
கைபிசைந்து
கண்கலங்கி நிற்கிறார்கள்
செலவழித்து செய்துவிட்டு
சரிசெய்யத் தெரியாத
மூடர்கள்
வேறென்ன செய்ய?
போகிற போக்கில்
சொல்கிறார்கள்,
எந்த இயந்திரமும்
நூறு சதவிகித
இயக்கத் திறம் கொண்டதில்லையாம்...
இதை முதலிலேயே
சொல்லித் தொலைப்பதற்கென்ன
பரவாயில்லை
ஆனாலும்
இந்த இயந்திரத்தின்
இயக்கங்கள்
வேறுவிதந்தான்
- 07/06/1990