வெளிச்சம் தேட
முனையும் கசிவுகளை
விலங்கிட்டு
அடிமைப்படுத்தியவன் நான்...
அப்படியும்
அந்த நாட்களில்
சில கரைகள்
உடைந்திருக்கின்றன.
சில மட்டும்.
வெகுசில மட்டும்.
மதகுகளை தகர்க்கிற
அரிப்புகள் என்று
அந்த ஈர்ப்புகள்
நிர்ணயிக்கப்பட்டவுடன்
கசிவுகள்
கரைபுரண்டு விடுகின்றன
என்
அனுமதியில்லாமல்
அப்பொழுதும்
திரைகளினால்
தடுத்துவிட நான் முயன்றதில்லை
காரணம்
உங்களுக்கே தெரியும்
இன்று,
நிதர்சனப் புரிதல்கள்
நிரந்தரப் பிரிவுக்கே என்று
நினைவுறுத்திப் போனாலும்
நிம்மதி
தொலைந்து போகிறது
கரைகளும்
இற்றுவிட வேண்டுமென்றா
விரும்புகிறாய்?
அன்பும்,
பாசமும் காதலுமாய்
காலம்
என் முதுகினில்
சுவடு மிதித்து போனது;
சுவடு தொட்ட போதெல்லாம்
அன்பும் காதலும்
திரும்பித் தொட
ஆசை வந்தது
கரைகடந்த நீர்
சென்றது தானே?
யாருக்காக
இந்தத் தவிப்புகள்...
ச்சே, தொடருமா
உறவுகள் என்னும்
இந்தத் தவிப்புகள்...
நினைவுகளை
நீட்டித்து நீட்டித்து
கற்பனைகளில்
சொரிந்து கொள்கிற
இச்சுகம்....
ஒளிப்புள்ளியைச்
சுற்றிச் சுற்றி
ஏகாந்தகாரங்கள்...
உட்புகுந்த
சில கிரணகற்றைகளும்
விரைந்து வலுவிழக்கும்
நிலைத்து
கலக்கும்
ஒளி தேடி ஒளி தேடி.
வெள்ளச் சுழற்சி
பழகியவனுக்கு
இன்பமோ?
இங்கு தவிப்பது யார்...
மற்றொரு வெள்ளத்தின்
குமுறல்களில்
இயைந்து போக
இங்கு யார், சொல்?
காரணம்
உங்களுக்கே தெரியும்.
சொல்ல வேண்டுவதெல்லாம்
முடிந்தானபின்னும்
முதல் புரியாமல்
மற்றொன்று.
அடர்ந்த மரக்கிளைகளின்
நெடுதுயர்ந்த கலப்புகளினால்
தரைப்பாசிகள்
ஒளியற்று
மரத்தை யாசித்து
மரமேறும்;
மறைவு பூண்டு
ஒளிந்து வாழ்ந்த
ஒளிக்கற்றைகள்
தரையைத்தான்
தேடிக்கொண்டிருந்ததாய்
பொய் புணரும்
பாசிகளின் தேடல்
அன்றோடு முற்றும்
மற்றுமொன்று புதிதாய்...
ஒரு நதி பிரிந்த
இரு வெள்ளமும்
ஒன்றாய் வடிய
வேண்டுவதோ எங்கனம்?
தடங்களும் தொலைவுகளும்
இலக்குகளும் இயைந்தவை அல்லவே?
இற்றுப் போகப்
போவதில்லைதான்;
கடந்து போக
பாதை உண்டுதான்;
துயில்வதற்குள்
ஆற்றி முடிக்க
கடமையும் உண்டுதான்...
எனினும்...
போச்சு,
இவ்வளவு சொல்லியும்
இப்படி
கவிதை எழுதிக் கொண்டு....
- 21/04/1990