Sunday, May 15, 2011

இன்னொருவன்

பகட்டு உடைகள்
பகல் வேஷங்கள்
இருட்டு நளினங்கள்
உதட்டுச் சாயங்கள்

குழு நீங்கி
முகம் கலைத்து
சூழ்ந்து நின்று
துக்கம் விசாரித்த
அரிதார மனிதர்களோடும் 
உண்மை பேசி
நிகழ்வு சிந்திக்கப்போன
அவனும்
நடிகனாகி போனான்

அவன்
அப்படியிருக்கவே குழு
ஆசைப்பட்டது
ஆணையிட்டது

பகட்டு ஆடைகளிலும்
பல்வேறு வேஷங்களிலும்
அவன் அழகாயிருப்பதாய்
எடுத்து காட்டியது குழு

அவன் நடிப்புக்கு 
சில நேரம் கைதட்டலும்
பல நேரம் கல்லெறியும்
கிடைத்தது

கைதட்டலும் கல்லெறியும்
குழுவே
ஆட்களை வாங்கி
நடத்தியது
நாடகத்துக்குள்ளும் நாடகம்

அவன்
நன்றாய் நடிப்பதாக
நம்பத் தொடங்கியிருந்தபோது,
குழுவின் கைதட்டல்
பலமாயிருந்தபோது,
அவன் பேச 
ஆசைப்பட்ட
உண்மைகளும் நிகழ்வுகளும்
நாடக மேடை படுதாவுக்குள் 
உறைந்து போய்,
அவ்வப்போது
அவன் சுதந்தர உணர்வுகளை
தீனக்குரலில்
விசாரித்து விட்டு
அடிக்குப் பயந்து
ஒளிந்து கொள்ளும்

அவன் நடிப்புக்கு
இவையெல்லாம்
தடையெனக் கருதிய குழு,
இந்தச் சின்ன சின்ன
தாகங்களை,
மாலையும் துண்டும் போட்டு 
விலைக்கு வாங்கும்


அவன்
நடிகனாகிப் போனான்

உண்மையும்
நிகழ்வும் பிறதொழிலும்
மறந்து போய்
நடிப்பே
உயிரும் உயர்வுமாகிப்
போனான்
 வேறொன்றரியாதுமானான்

குழுவோடு
ஒப்பந்தம் முடியும் காலம்
நெருங்கியது
முடிந்தது

மேடைக்குள்
நுழைந்த அவனை
முகம் தொட்டு
புறந்தள்ளிய
பல கைகளை
வெறிகொண்டு
விலக்கிப் பார்த்தபோது,
அங்கே
பகட்டு உடையிலும் 
உதட்டுச் சாயத்திலும்
பற்கள் மட்டுமே சிரித்த
புன்னைகையோடும்
உண்மை பேசி
நிகழ்வு சிந்திக்கப் போன
இன்னொருவன்

-08/03/1990

அன்பே நீ தேடுவது என்னையா?

நான் இதுவரை என் கற்பனைகளில் உன்னோடு தனித்திருந்திருக்கிறேன்
ஓராயிரந்தடவை உன்னிதழ்களில் கனவுகளில் முத்தமிட்டிருந்திருக்கிறேன்
இப்போழ்தும் கூட,
அவ்வப்போது என் வாசல் வெளியில்
உன் வரவை நான் உணர்கிறேன்


                  

அன்பே நீ தேடிக்கொண்டிருப்பது என்னையா?

உன் தேடலை உன் கண்களில் நான் உணர்கிறேன்
அன்பே, அதையுன் புன்னகையில் பார்க்கிறேன்

நான் தேடியலைந்தவை அனைத்தும், அன்பே உன்னிடமே
ஏனின்னும் என் கைகள் விரிந்திருக்கின்றன என கேட்கிறாயா?
அன்பே, நீயறிவாய் என்ன சொல்ல வேண்டுமென்று
உனக்குத் தெரியும் உனதெந்த வார்த்தைகளில்
இவனுயிர் வாழ்கிறதென்று
உன்னிடும் சொல்ல ஏக்கம் அடைகாக்கும்
ஆயிரம் சேதிகளும்...

அன்பே, நானுன்னை நேசிக்கிறேன்

உன் குழல்களினூடே கதிரொளியின் கோலம் காண
என் மனம் துடிக்கிறது
உன்னை அரவணைத்து நேசிக்க எத்தனை
இரவுகளிலும் பகல்களிலும்
நான் துடித்திருப்பேன்

சில போதுகளில், 
காதலினால் என்னிதயம்
பொங்கி வழிந்துவிடும் போல் உணர்கிறேன்

அன்பே, என்னால் இனி தாங்க முடியாது
என் காதல் நீ உணர்ந்தே ஆக வேண்டும்

ஆயினும்...

நீ எங்கிருக்கிறாய் எனத் தேடுகிறேன்
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றும் நானறியேன்
எங்கேயோ,
தனிமையில் நீ வாடிக் கொண்டிருக்கக் கூடுமோ
என்றவெண்ணம் வதைக்கிறது

அல்லது அன்பே
யாரேனும் அங்கும்
உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறார்களா?

உன் நேசம் வெல்ல ஒரு வழி சொல், தோழி
இறுதியாகவும்
நான் சொல்வதிதுதான்
நானுன்னை நேசிக்கிறேன்

-05/03/1990
- லயனல் ரிச்சியின் 'Hello, is it me you are looking for?' பாடலின் மொழிபெயர்ப்பு 

முரண்களுக்கு

உடல் அழகால் ஈர்க்கப்படாத காதலிற்கு இணைப்பும் பிரிவும் வலியற்றதாக இருக்கும், இயற்கையாக.

விமர்சனத்துக்கஞ்சி படைக்கப்படுவது படைப்பன்று.

உன் இரசனைக்குட்படாத உன் படைப்புகள் உயரியதன்று.


உரிமை

அவளிடம் மிக நெருங்கிப் பழகுகின்ற, அந்தரங்கங்களை பகிர்ந்துகொள்ளக் கூடிய தகுதியோ உரிமையோ உடையவர்களுக்கு மட்டுமே உரித்தானது போன்று ஒரு நறுமணம் அவளிடமிருந்து கமழ்ந்ததாக தோன்றியது.

- 03/12/1989 


நாட்டின் எதிர்காலம்

சீறும், உலகை வெல்லப் பாயும் 
           சிங்கங்களே, அடக்க வியலா
வீறும் கொண்ட இளஞ் சமுதாயமே
          விண்ணை வளைக்கும் நம்பிக்கையும் 
மீறும் உழைப்பும் துணிவுள்ளமும்
         மிஞ்சும் இளைஞரைக் காணும்
பேறும் எமக்கிலையோ வென்றிருந்தேன்
          பாரத ஏறுகளை காணும்வரை

நமதருமை பாரதத்தை சூழ்ந்திடும்
        நயவஞ்சகர் தம்மிடம் தந்திடவே
உமதுள்ளம் பொறுத்திடுமோ - அன்றி
       உயிர் துடித்திடுமோ உடல் கொதித்திடுமோ
சமன்பாடு பரப்பிய எம்மாருயிர்
       சத்தியத்தாய் உயிரின்விலை என்ன என்ன
எமக்குள்ளே எம்மிளைய சமூகத்தினுள்ளே
       என்றும் நிலவும் ஒற்றுமையே

- 03/05/1984

இந்த சங்கீதம்

இந்த சங்கீதம்
இந்தக் கவிதை
அவள் வீணையில் எழுகிறது
வீணைகள் பிணைக்கப்பட்டவை
அவள் வீணையின் தந்தி
நிரடப்படும் பொது
என் வீணையின் தந்திகள்
சிலிர்க்கின்றன

ஒரு சங்கீதம்
ஜனிக்கிறது

ஓர் உன்மத்தம்
எதற்காகவோ 
எழுந்தடங்குகிறது 

விரல்கள்
ரகசிய வித்வான்கள்
அவைஎழுப்பும்
உணர்ச்சி சங்கீதம்
மனமெங்கும் அலைபாய்கிறது
நானும் அவளும்

இருவீணைகளும் சங்கீத உற்சவம்
நடத்துகின்றன
இசைவேள்வியின் உச்ச உணர்ச்சியில்
அறுந்த தந்தியிரண்டும் 
தழுவிக் கிடக்கின்றன

-19/03/1987

ஞானஸ்நானம்

அதோ,
அந்த வனாந்திரம்...

ஈரத்தோடு கூடிய
இலைகளின் மேல்
அவளும் நானும்
நடக்கையில்
இவள் பாதம்
இடர்ப்ப்படுமோவென
அஞ்சத் தோன்றுகிறது

மண்ணின் அந்த வாசம்

என் தோள்மேல்
புரளும் அவள் தலைமயிர்
பொன்னிறக் கோடுகளாய்
கோலம் போடுகிறது

பறவைகள்
இவள்குரலைக் கேட்டு
வாயடைத்துப் போகின்றன

துணிந்த சிலகுயில்கள்
பலமுறை பாடிப் பார்க்கின்றன

அவளை
அணைத்துச் சாய்த்து
மெதுவாய் நடக்கையில்
உலகின் கோடியை
அடைந்து
வெளிச்சென்றார்ப் போல்
தோன்றுகிறது

கதிரவன்
புகையோடு கூடிய தன்
கைகளை நீட்டி
அந்த அடர்ந்த கானகத்தில்
எங்களை ஆசீர்வதிக்கிறான்
1515342953_4d17f59a3b.jpg (500×451)
அந்த நிசப்தத்தில்
எங்களுயிர்
காதலுக்கு ஏங்குவது கூட
கேட்கிறது

நடக்கிறோம்
நடந்து கொண்டேயிருக்கிறோம்

ஓர் எல்லையற்ற வெளியில்
இயற்கையின் அழகோடு
அவளோடு
வாழ்நாளெல்லாம் இருந்துவிடலாம்போல்
இருக்கிறது

மனம்
அக்கணம்
இன்பமா துன்பமா
வேண்டுமா போதுமா என
உணர்வதை நிறுத்திவிட்டது
அனிச்சையா ஆணையிட்டதா
என்பதுகூட
புரியவில்லை

அந்தக் கானகம்
அடர்ந்து விட்டது

காற்று இலைகளாய்
அட்சதை தூவுகிறது
இவள் மேலுதிர்ந்த
இலைகள் 
கன்னம் தடவை
சாபல்யமடைந்து மெதுவாய்
கீழே விழுகின்றன

அந்த அழகிய காட்டில்
அவளும் நானும்

- 22/07/1986

Pandit Venkatesh Kumar and Raag Hameer