Monday, June 15, 2009

பாண்டம் லெக்

நீரலை புரள்கையில்
மயிர் சிலிர்ப்பதாய் - இன்னும்

கட்டில் விட்டிறங்கவில்லை
கை வீசி நடப்பதாய் - இன்னும்

ரணம் ஆறிவிட்டாலும்
மனம் ஆறாமல் - இன்னும்

விரல்கள் தொட்டு அழுத்த
விரையும் போதெல்லாம் - இன்னும்

இன்னும் இன்னும் இன்னும்

இல்லாத உருவம்
இருப்பதாய் எண்ணி...

எண்ணம் வளர்வது போல்
கண்ணிவெடியில் சிதைந்த கால் வளருமோ?

11.30 pm, 16/9/2003

பின்மதியம்

கண்கூச
காய்ந்து கொண்டிருக்கிறது
பின்மதிய வெயில்;
யாருமற்ற
அந்த தெருவில்
டீக்கடையோரமிருந்த
வீட்டுக்குள்ளிருந்து குரல்கள்;

கடந்து போக நேர்ந்த அக்கடையில்
டீக்குடித்து நின்றிருந்தேன்
வெளிவந்த இருவரிடம்
கடைக்காரர் கேட்டார்,
" கால் தரைக்கு மேலே தொங்குதோ?"
"ஆமா, போயிடுச்சு"
"அப்ப கடைய மூடனும்" - என்றார்.

ஏதோவொரு தெரு
ஏதோவொரு வீடென
அனைவரும் நகர
அவனோடு
அந்தரத்தில் தொங்குகிறது
அந்த பின்மதியத்தின் அமைதி

11.00 pm, 16/9/2003

வளர்சிதை மாற்றம்

வண்ணக் கலவைகளின்
உணர்ச்சித் தகிப்பில்
எரிந்து போகும் சித்திரம்;
சாம்பலை குழைத்தொரு
பாண்டம் வனைய,
சுழற்சியின் உக்கிரத்தில்
சிதைந்து
மறுபடி வண்ணக் கூழாய்
உருகி ஓடும்;

நகர்ந்து அழிந்து விடும்
அந்தக் கணத்துக்குள்
அதை
எப்படியேனும்
வெளிப்படுத்த துடிக்குமென்
அவா

11.15 pm, 18/6/97

பெண்மை

உன்னை நினைக்கின்றபோது...

சல்லடை வழி
உதிர்கின்ற பூத்துமிகள்

- கனவில்
கனவைப் போலொரு நினைவில்

அத்தனையும்
ஆவியாகிப் போகின்ற வெம்மை

- நினைவில்
நினைவை போலொரு நிகழ்வில்

அண்மையின்
சுகத்தினூடு ஒரு கைப்பு
சேய்மையின்
துயரினூடு ஓர் இனிப்பு...

எண்ணிப் பார்த்திராத
இந்நிற பிரிகையை
என் வானவில்
என்று
எப்படிக் கண்டுபிடித்தேன்?

00.10 AM, 05/06/97

Sunday, June 14, 2009

குறை வேப்பிலை

றிவேப்பிலை
எதற்கு உபயோகம்?
எடுத்தெரியும்போதேல்லாம்
நினைப்பேன்
'வேப்பிலைன்னு பேர்ல
இருக்கே, நல்லதோ?'

அது இல்லாமல்
வேறுபாடு அறியும்
நுட்பமுடையவர்
அண்மையில்
குறுகத்தான் வேணும்
நானும் என் ரசனையும்

12.30 AM, 24/05/2001

உன்-என்-நம்

கார்ட்டூன் பார்க்கும்
சிறுமகள் குதித்தாள்,
"அப்பா, அப்பா நல்லாருக்கு
மாஸ்க் மாதிரி ஆயிருச்சே
உன் மூஞ்சி"

விரைந்து வந்த
மனைவி பார்த்தாள்
மகிழ்ந்தாள்
"முன்னைக்கிப்போ
நல்லாத்தானிருக்கீங்க"

கண்ணாடி பார்க்க ஒரே பயம்
எல்லோரும் மகிழ
உதவும் இது
இப்படியே இருக்கட்டுமென
விட்டுவிடவா

(12.15 AM, 24/05/2001)

நிகழ்வன

நிறைந்தது.
அக்கணம் அற்புதம்.
நிறைந்தது உறைந்தது.
அதுவும் அற்புதம்.
உறைந்தது இறந்தது.
அதுவே உன்னதம்.
அனைத்திலும் திளைக்குமென்னை
எந்தக் கேவலம்
இழுத்தெரியும்?

Pandit Venkatesh Kumar and Raag Hameer