Monday, June 15, 2009

வழுவமைதி

தோஅள்முனைத் தொங்கல்
எனக் கவிஞன் சொல்லிய
என் கைகளைப் பார்த்தேன்
அசட்டையாக இருப்பின்
அடிக்கவும் செய்யும்
ஊர் கூடும் நேரம்
கண்ணில் நீர் சேர்க்க
அவையறியும்

வலது தோள்முனைத் தொங்கல் செய்வதை
இடது தோள் முனைத் தொங்கல்
அறியா வண்ணம் ஏற்பாடுகள் நடந்தன....

வடிவ உறுத்தல்கள்
தங்களுக்குள் அடித்து கொண்டன
என்னை விட்டுவிட்டு

1.00 am, 24/05/2001

எதிர்திசைகள்

வடிவது
சீழா இரத்தமா
பார்க்கமுடியாமல்
கண்ணிற்
நீரா திரையா
பார்க்குமனைவரும்
உருகிடும்
அவ்வுயிர்
வாவெனுமொரு சொல்
கேட்டால் மகிழும்
விரையும்
எத்திசையாயினும்


12.45 am, 24/05/2001

பாசம்

யாருமற்ற
அனாதை இரவுகளில்
அழுது புரளும்போது
உறுத்தும்
அம்மையின் நினைவுகளில்
முலைகள்
மட்டும் மறக்க வேண்டுவதா என்ன?

11.55 pm, 18/6/97

விசை

கடல்
அலைகளை புரட்டிப்புரட்டி
புழுக்கத்துகாக விசிறிக் கொண்டிருக்கிறது
கருவில்
புரளும் சிசுவைப் போல்
நினைவுகள் புரண்டு புரண்டு
மறுபடி துவக்கத்தில்;

காலத்தின் முட்கள்
சந்திப்பதும் பிரிவதும் போல்...

நான் மறுபடி
யாருக்காகவாவது
காத்திருக்க வேண்டும்

11.45 pm, 18/6/97

பாண்டம் லெக்

நீரலை புரள்கையில்
மயிர் சிலிர்ப்பதாய் - இன்னும்

கட்டில் விட்டிறங்கவில்லை
கை வீசி நடப்பதாய் - இன்னும்

ரணம் ஆறிவிட்டாலும்
மனம் ஆறாமல் - இன்னும்

விரல்கள் தொட்டு அழுத்த
விரையும் போதெல்லாம் - இன்னும்

இன்னும் இன்னும் இன்னும்

இல்லாத உருவம்
இருப்பதாய் எண்ணி...

எண்ணம் வளர்வது போல்
கண்ணிவெடியில் சிதைந்த கால் வளருமோ?

11.30 pm, 16/9/2003

பின்மதியம்

கண்கூச
காய்ந்து கொண்டிருக்கிறது
பின்மதிய வெயில்;
யாருமற்ற
அந்த தெருவில்
டீக்கடையோரமிருந்த
வீட்டுக்குள்ளிருந்து குரல்கள்;

கடந்து போக நேர்ந்த அக்கடையில்
டீக்குடித்து நின்றிருந்தேன்
வெளிவந்த இருவரிடம்
கடைக்காரர் கேட்டார்,
" கால் தரைக்கு மேலே தொங்குதோ?"
"ஆமா, போயிடுச்சு"
"அப்ப கடைய மூடனும்" - என்றார்.

ஏதோவொரு தெரு
ஏதோவொரு வீடென
அனைவரும் நகர
அவனோடு
அந்தரத்தில் தொங்குகிறது
அந்த பின்மதியத்தின் அமைதி

11.00 pm, 16/9/2003

வளர்சிதை மாற்றம்

வண்ணக் கலவைகளின்
உணர்ச்சித் தகிப்பில்
எரிந்து போகும் சித்திரம்;
சாம்பலை குழைத்தொரு
பாண்டம் வனைய,
சுழற்சியின் உக்கிரத்தில்
சிதைந்து
மறுபடி வண்ணக் கூழாய்
உருகி ஓடும்;

நகர்ந்து அழிந்து விடும்
அந்தக் கணத்துக்குள்
அதை
எப்படியேனும்
வெளிப்படுத்த துடிக்குமென்
அவா

11.15 pm, 18/6/97

Pandit Venkatesh Kumar and Raag Hameer