Sunday, February 15, 2009

"நான் கடவுள்" - ஒரு விமர்சனம்


சிங்கப்பூரில் பார்த்த இரண்டே கால் மணி நேர படத்தில் (மூன்று பாடல்கள் இல்லை; மற்ற எதெல்லாம் இல்லை என தெரியவில்லை) முதலில் எழுந்த எண்ணங்கள் முதலில்:

பாலா இன்னும் கொஞ்சம் சீரியஸ் -ஆக எடுத்திருக்கலாமே? பிச்சைக்காரர்களின் வாழ்வு பரிதாபம் ஊட்டவில்லை சரி. ஆனால் வேடிக்கையாகவும் இருந்திருக்க வேண்டாமே? ஏறக்குறைய அனைத்து முக்கிய கட்டங்களிலும் நகைச்சுவை மிளிர பேசுவது காட்சியின் அடர்த்தியை குறைக்கிறது.

அகோர கால பைரவன் என்றால் அடித் தொண்டையில் ஏன் பேச வேண்டும்? அம்சவல்லி பிச்சை எடுக்கும்போது பாடும் பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் ஏன் அந்தந்த ஒரிஜினல் பாடல்களாக இருக்க வேண்டும்? ஏன் அந்த கதா பாத்திரத்தின் குரலில் இருந்திருக்க கூடாது?

ஏழாம் உலகம் படித்து விட்டு படத்தை பார்ப்பதிலும் ஒரு சிக்கல்.
கோலப்ப பிள்ளையின் நார்மல் முகம், தந்தை முகம், கணவனின் முகம் என பல நினைவுகள் ஓடுவதை படம் பார்க்கும்போது தவிர்க்க முடியவில்லை - அந்த முகங்களுக்கும் அவரின் தொழில் முகத்திற்கும் உள்ள முரணே அந்த கதையில் இருந்த ஷாக் வேல்யு. தாண்டவனின் அந்த முகங்கள் இல்லாதது கதையின் பிடிமானத்தை அசைக்கிறது. ஒரு வேளை ஏழாம் உலகம் படிக்காமல் பார்த்திருந்தால் வேறு மாதிரி படுமோ என்னவோ?

ருத்ரனுக்கு கஞ்சா குடிப்பதையும் நீரில் மூழ்கி எழுவதையும், பல வித நிலைகளில் யோகம் புரிவதையும் தவிர (கிளைமாக்ஸ் தவிர) வேறு அழுத்தமான உணர்வுகளை உண்டாக்கும்படி காட்சிகள் இல்லாமலிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

'நான் கடவுள்' என்ற பதத்திற்கு இன்னும் கதை மாந்தர்கள் மூலமாக நிகழ்வுகளையும், விளக்கங்களையும் கொடுத்திருக்கலாமோ?

காசியின் அந்த அசாதாரண சூழலுக்கும் தாண்டவனின் அந்த பிச்சை கிடங்குக்கும் இடையே ஏதோ ஒரு இணைப்பு இழை ஓடுகிறது என்றாலும் சூக்குமமாக அதை புரிந்து கொள்ள முடியவில்லை.

பின் பாதியில் வரும் காட்சித் தளங்களில் மாற்றம் இல்லாமல் ஒரே படிக்கட்டு, கற்கள், புதர்கள், ருத்ரன் வசிக்கும் பாழடைந்த கோவில் என்றிருப்பது வெறுமை கூட்டுகிறது.

இனி, இப்படி ஒரு கதையை சொல்ல பாலாவால் மட்டுமே முடியும். ஜெயமோகனின் வசனங்கள் கூர்மை; ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு அற்புதம்; இளையராஜா - முற்பாதியில் தோற்கருவிகளும், சிம்பல்சும். பிற்பாதியில் வயலின்களின் சாம்ராஜ்யம். ராஜா கொண்டுவந்திருக்கும் தொழில் நுட்பம், காட்டியிருக்கும் நேர்த்தி மற்றும் கதையின் புரிதலும் அழுத்தமும் மிக மிக உயர்தரம். இன்று இந்திய இசை சூழலில் இந்த படத்திற்கு யாராவது இசை அமைத்திருக்க முடியுமா என்று எடை போட்டால் கிடைக்கும் பதிலில் ராஜாவின் மேதமை தெரிந்து விடும்.

இன்னும், ஒப்பனை கலைஞர்களின் உழைப்பு மெச்சும்படி.

"வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்; வாழ கூடாதவர்களுக்கு தரும் மரணம் சாபம்" - இந்த கான்செப்ட் தெளிவுபட சொல்லப்பட்டிருப்பதாக எண்ணலாம். ஆனால் மரணம்தான் இயலாதவர்க்கும், கூடாதவர்க்கும் விடையா? வாழ்தல் என்பதற்கு என்ன பொருள்?

ஒரு வேளை, ருத்ரன் என்பதால்தான் மரணம் விடையோ?

1 comment:

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அந்த இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Pandit Venkatesh Kumar and Raag Hameer