Thursday, January 11, 2018

பிற்பகல் நேரச் சலனம்

நண்பகல்
அரவமின்றி உதிர்ந்துகொண்டிருக்கிறது

கிழக்குவானின் கவிந்துவரும் இருளும்
ஈரம் பொதிந்துவரும் காற்றும்
அசாதாரண தூய்மை உறுத்தும்
இந்த பாண்டுங் நகரின் சாலையில்
இலைக் குப்பைகளையும் என்னையும்
தலைமுக்காடில்லா இளம்பெண்ணொருத்தி
உணவு பரிமாறும்
சாலையோர கடைக்குள் தள்ளுகின்றன
வரவேற்று அமரச்செய்து
குப்பையை காலால் வெளித்தள்ளி
நாஸி படாங் தட்டுகளை
மேசைமீது பரப்புகிறாள்
புளியுடன் மசித்தரைத்த
பச்சைமிளகாய்த் துவையலை
கீரையுடன் கலந்துகொண்டே
ஆப்பிரிக்க ஆசிய அருங்காட்சியகம்
போகும் வழி வினவுகிறேன்

இலக்கேதுமின்றி
இடம்மட்டும் கேட்குமென்னை
எப்போதும் எல்லாரும்
பார்ப்பது போலல்லாமல்
இருவீதிகள் தள்ளியிருக்கும்
வழி சொல்லித்தருகிறாள்

தேனும் சிறுஎலுமிச்சைச்சாறும் கலந்ததொரு
மிக அற்புதமான தேநீரைப் பருகியபின்
அவள் புன்னகையை
என் முகத்திலணிந்துகொண்டு
சுத்தத்தைசீண்டும்
சூறைக்காற்றில் நுழைகிறேன்

மென்குளிருறைக்கும்
நெதர்லாந்திய கட்டிடம்
பதறிப் படபடக்கும் என்மனம்போல்
துடிக்கும் கொடிகள்
மங்கிய மஞ்சள் விளக்கொளியில்


பதிவுகளாக மிதக்கும்

கடந்துசென்ற காலங்கள்
நாடுகள் நேசங்கள் துரோகங்கள்

யாருமற்ற பிற்பகல்
எரிந்தடங்கிய தங்குபான் பராஹு
எரிமலையின் ஓரம்
இயற்கை வெந்நீரூற்று
கந்தக மணம் மேவும் காற்றில்
நீரிலிறங்க மனமின்றி
அசையாது நிற்கும்
மரத்தின்நிழல்
மேல்விழும்
சலனமற்ற உக்கிரம்

இன்னும் இந்த நாள் முடியவில்லை
இன்னும் பார்ப்பதற்கு
இன்னும் செல்வதற்கு
காத்திருக்கின்றன
இடங்களும் பயணங்களும்
புகைகசிந்து பேசும் அந்த
எரிமலைமட்டும்
எரிந்தடங்கி விட்டால் போதும்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer