அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட இடைவெளிக்கு பிறகு (தொடர்ச்சியாக உங்கள் வலைத்தளம் படித்து வந்தாலும்), புதியவர்களின் சிறுகதைகளை சாக்கிட்டு கடிதம் எழுத முடிந்தது மகிழ்வைத் தருகிறது.
பீத்தோவனின் ஆவி என்னை மிகவும் கவர்ந்தது.
கலை பண்பாட்டுப் பின்புலத்தில் இரு வேறு துருவங்களில் இருக்கும் இருவருக்கிடையே ஏற்படும் தாற்காலிக சந்திப்பின் கணங்கள்; பெரிதும் உரையாடல்கள். அவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகள் - இசை அறிவு, மனித நேயம் மற்றும் சக மனிதர்களின் நேரம் மற்றும் விருப்பங்கள் மீதான நாகரிகம்.
கதை ஆரம்பித்ததும் எவ்விதமான பூடகமும் இல்லாமல் அவர்களிருவரின் உரையாடலில் ஆழ்ந்து விட்டேன். படித்து முடிக்கும் வரை ஒரு மென்மையான இசைக் கோர்வை பின்னணியில் இருந்தார்போன்றவோர் உணர்வு.
மிகக் குறைந்த வர்ணனையிலும் கூட விமான நிலையத்தை களமாக தீட்டிக் கொண்டு, பிறகு தலை கலைந்த ஓர் இந்திய இளைஞனையும், வெள்ளை முள்ளங்கி போல (இது போல் ஓரிரு வர்ணனைகளிலும் நான்கைந்து வாக்கிய அமைப்புகளிலும் ஆங்கிலத்தில் சிந்தித்து எழுதி தமிழில் பின் பெயர்த்தது போலொரு தோற்றம்) முகம் படைத்த மேற்குலக மாதையும் எளிதாக கொண்டு வந்து விட முடிகிறது.
சேராவின் கணவனின் மறைவும் அவளின் இறுக்கமும், பீத்தோவனின் இசையை கலைத் திறன் தாண்டி மேம்பட்ட தொழில் நுட்பமாக வாசித்தடைந்த
வெற்றியும் அதன் வெறுமையும், ஆன்மாவை கரைக்கும் இசைக்கு முன் இறுக்கம் உடைதலும், தன்னிசையை வெறும் வித்தையாக உணர்தலும் என்ற மூன்று தளங்களில் தான் கதை நிகழ்கிறது.
அதனால் கதையைப் பொறுத்த வரை சிவாவின் பாத்திரம் ஒரு காடலிஸ்ட் ஆகவே படுகிறது; அவன் சேராவை ஆற்றுப்படுத்தும் விளக்கம் கொடுத்திராவிட்டாலும் அதுவே.
கதையின் புதுமை என நான் கருதுவது அதன் நிகழ்தளம், கதை நகர்வில் இருந்த மென்மை, முன் பின் அறியா இரு மாந்தரிடையே இயல்பாக ஏற்படும் மனித நேயம்...
மற்றபடி பீதோவன், இந்திய இசை, ஆலாபனை என்பனவெல்லாம் இடம் மா(ற்)றிக்கொள்ளக்கூடிய அலகுகளே.
வேதா அலட்டிக் கொள்ளாத, இயல்பான, மெருகேறிய உரையாடல் கொண்ட ஒரு கதையை தந்தமைக்கு வாழ்த்துகள்.
சரவணன்
சிங்கப்பூர்
No comments:
Post a Comment