Sunday, February 3, 2013

உயிர்ப்பயணம்

உருகும் குளிர் மலையிலிருந்து
சரிந்தோடும் சிற்றருவிகளில்
என் உறவுகள்
ஆங்காங்கே நீந்தி
இறங்குகின்றன பிறந்த நீர் தேடி

என் தாயும் தந்தையும்
அடுத்த தலைமுறைக்குத்
தம்மைக் கடத்த
இன்னும் போகவேண்டும் நெடுந்தூரம்


வழிந்து பெருகி நகரும் ஆற்றின்
வளைவுகளில் பாறைகளின் மறைவுகளில்
காத்திருக்கும் பனிக்கரடிகள்
வாரிசுகளை
வேட்டை பழக்கும்

பாய்ந்திறங்கும் பறவைகளும்
பதுங்கி இரைதேடும் நரிகளும்
அவ்வாறே

கால் வழி கடந்ததும்
கால் அளவு உறவுகளே மீதம்
இரை எடுத்து நீரில்
வளி பிரித்து
உயிர் காத்து
இன்னும் இன்னும்
பெருகும் பேராற்றில்
என் பெற்றோர் போக வேண்டும்
நெடுந்தூரம்




உறவனைத்தும் கரைந்து
ஆழ்கடலின் அச்சுறுத்தும்
தாற்காலிகத் தனிமையில் முயங்கி
ஆயிரத்தைநூருவரில் ஒருவனாய்
எனையீன்ற என் தாய்
உடன் மரித்து மிதப்பாள்
உடல்கள் முழுதும்
மூவாயிரம் கண்களால்
துடித்தபடியே பார்த்திருக்கும்
எங்கள் முன்னால்





நானும் காத்திருப்பேன்
என் தலைமுறைப்பயணம்
தொடங்க
இயற்கையின் எல்லையிலா
உணவுக் கருணையில்
மீதமாகப் போகும்
என் இன்னொரு
உடன்பிறப்புடன்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer