Monday, March 1, 2010

யன்னல்

கழுத்தின் பின்புறம்
தோல்
பின் சதை
நரம்புக் கூட்டம்
குருதிக் குழாய்கள்
மூச்சுக் குழல்
பின் சதை
தோல்
முடிந்தது
வெட்டுப்பட்டு தனியே
விழுந்தும் தலை
துடிக்கும் சிறிது நேரம்
மிச்சமிருக்கும்
உணர்வுத்துணுக்குகளின்
தன்னிச்சைத் தாண்டவம்
பாய்ந்து ஒழுகி
வெட்டுமேடை நனைக்கும்
என் குருதிக் கறை
எங்கும் படிவது
குறித்த கவலை
எனக்கில்லை


எப்போது
நிகழும் இது

அரசியல் கைதி
அறம் வெறுத்தவனை விடவும்
அபாயமானவன்


என் தனிமைச் சிறையில்
உயர்ந்து சூழ்ந்த
நான்கு சுவர்களிலொன்றின்
உச்சியில் இருந்தது
சதுரச் சன்னல்
உலகம் என்னை பார்க்கவில்லை
நான் அதை பார்த்துக்கொண்டிருந்தேன்


இரவன்று தனிமை
தோன்றும்
வளரும்
முழுமை பெறும்
தேயும்
மறையும்
என
தினமொரு உறவு
இரவொரு உயிர்ப்பு

எப்பொழுது வரும்
எனதழைப்பு


நொடியின் நூற்றில்
ஒரு பங்கில்
முடிந்து விடும்
என்றாலும்
ஒவ்வொரு நொடியும்
அதை மட்டுமே
எண்ணத்தில் சேமித்து
பற்பல கோணங்களில்
மெய்விதிர்க்க
இமையாது
நாடகமென நானே
நின்று
பார்க்கிறேன்


வந்துவிட்டது
ஆணை

ஆட்சிமாறிய
அரசியல் சதுரங்கத்தில்
கொலைக்கள மேடை
மறைந்துவிட்டது
பகலையும் இரவையும்
சேர்த்து சுகிக்கும்படி
கதவுகள் திறந்துவிட்டன
கருவியைத் தாண்டி
நடக்கிறேன்
எதிர்பார்ப்பில்
ஏதோ குறைந்த
ஏமாற்றம் ஊடாட

(Written in the influence of 'The Wall' by Jean Paul Sartre)

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer