Sunday, April 24, 2011

உயிர்க் கோலம்


வன்... அவன்தான்.

அது...அதுதான். 

அவர்கள் அனாமதேயர்கள். அனாதிகள். அவர்களுடையது அந்த நகரத்தின் வீதிகளில் உருக்குலைந்து உருளும் வாழ்க்கை. அவனை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பார்த்திருக்கலாம்.  புகைவண்டி நிலையத்தினருகே மாதாவின் கருணை பொங்கும் சித்திரத்தோடு. பேருந்து நிலையமருகே முருகன் சேவற்கொடி, மயில் வாகனம் மற்றும் இவனோடும். கல்லூரி வளாகமருகே இயேசுபிரானின் அகலவிரிந்த கைகளோடு...என நீங்கள் மறுதலிக்க முடியாமல் உங்கள் மனிதாபிமானத்தோடும் கலைரசனையோடும் உறுத்திக் கொண்டிருக்கும் அவன் ஓர் ஓவியன்.

எவ்வளவுதான் சகிக்க முடியாததாய் இருந்தாலும் வெயிற்காலம் தான் பிழைப்பு; மக்களின் துன்பங்களை விற்றுக் காசாக்கிக்கொள்கிற நீர், மோர், குளிர்பானம், இளநீர் என்கிற கடைக்காரர்களுக்கு மட்டுமல்ல, அவனுக்கும் அதுதான் சீசன்.

ஓரிரு தினங்களுக்கு முன் ரயிலடியில் வரைந்த ஐங்கர விநாயகர் நல்ல கருணை செய்திருந்தார். கலர்ப்பொடி, கோல மாவு, சாக் பீஸ்கள் வாங்கியது போக அவன் கையில் ரூ.13 இருந்தது. இன்னும் இரண்டு தினங்களுக்கு போதுமென்றாலும் அடுத்த இடத்தையும், அடுத்த படத்தையும் இப்போதே தீர்மானித்து விடவேண்டுமென்ற நிலையாமை அவனுக்குள் குடைந்து கொண்டிருந்தது.

சிறுவயதில் அவனுள்ளிருந்த ஓவியத்திறமை வெளிப்படும்போதெல்லாம் அவன் தாய் மகிழ்ந்து போவாள்; நடக்கவியலா அவனின் ஊனம் ஒரு பொருட்டற்று போகும் அவளுக்கு; ரவி வர்மாவே வந்து பிறந்து விட்டதாக கனவு காணுவாள்; நெட்டி முறிப்பாள்.

செல்வமகனின் கலைத்திறமை செழுமையாய் வளர் வேண்டுமென்ற அவன்  தந்தையின் ஆசை, ஒரு சாலை விபத்தில் நிராசையாகும் என்று யாருமே எதிர் பார்த்திருக்க மாட்டார்கள், அவன் அன்னை உட்பட. வழக்கமான வழக்கமாக உற்றார் உறவினர் அனைவரும் கலைந்த பின் மீதமிருந்தது அவளும் அவள் மகன் மட்டுமே.  வளர்ந்து வந்த மகனின் ஓவியத்திறமைக்கு போதிய ஊக்கமூட்டவோ உடல் உறமூட்டவோ வழியற்று போன ஒரு நாளில், அவள் காதில் அச்செய்தி விழுந்தது.

அந்த பெருநகரத்தின் வாயில்களில் படைப்பாளிகள் கௌரவிக்கப் படுவதையும், அவர்கள் வாழ்வின் வெற்றிப்படிகளில் மேலேறிச் சென்று கோலோச்சுவதையும் அவள் அறிந்திருந்தாள். எண்ணிப் பார்க்கையில், அன்று அவள் எடுத்த முடிவு சரியானதா என்று கூட பல முறை அவனுக்கு தோன்றியிருக்கிறது. அனால் மேட்டில் உருட்டிவிடப்பட்ட சக்கரம் ஒரு நியதியுடன் கீழ்நோக்கிப் பாய்வதை எப்படி நிறுத்த? நிறுத்த வேண்டுமெனில், நிறுத்தி, அவரவர் ஆணைக்கேற்ப வாழ்வின் போக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டுமெனில், அதற்கேற்ற அமைப்புகளுடனோ, ஆதரங்களுடனோ பிறந்திருக்க வேண்டுமென்பதும் அவனறிந்ததுதான்...

எப்படியோ, அவன் பற்பல கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் அந்நகரை வந்தடைந்து விட்டான்.

பெரும் சத்தத்துடன் அந்த முதல் இடி விழுந்தவுடன் அவன் தலை நிமிர்ந்தது. இடமும் வலமும் ஆடிய தலைமயிர், மயிர் போல் கருத்த மேனி, வான் வெறித்த தீர்க்கமான பார்வை. பலகையுருட்டும் வலிமைவாய்ந்த முறுக்கேறிய கைகள் - அவற்றை பார்க்கும் போது, இத்தனை கரடு முரடான கைகளிலிருந்தா அத்தனை அழகோவியங்கள் பிறக்கின்றன என்று தோன்றும் - மெலிந்த கால்கள என அவனே ஒரு சித்திரம் போலிருந்தான். இப்போது கூட, அந்தத் தாடியையும் மீசையையும் மழித்து விட்டால் முகம் ஒரு கலைஞனின் எடுப்போடு இருக்குமோ என்னவோ?

பட் பட்டென்று முதல் மழைத்துளி விழுகிறது. கோடையின் வெப்பம் போங்க, வாடை கூடிய மணம் எழுகிறது. அவனுக்குள் அன்னையின் நெஞ்சணைத்து கிடந்த சுகம் திடீரென, அந்த கோடை மழை போல், வெடிக்கிறது. கண்கள் படபடக்கின்றன; குறுகுறுவென கண்ணீர் ஊறுகிறது.  அவள் அண்மைய, வெப்பம், வாசம், அணைப்பு, உச்சியை தடவும் வளையர்க் கைகள் என அவன் கைகள் தன்னைத்தானே தலையை தடவிக் கொள்கின்றன.  'ஒ' வென குமுறிக் குமுறி அழுகிறான். மழைநீரின் பரவலில் கண்ணீரும், திறந்த வாயிலிருந்து தோன்றும் கேவலும், யாருமறியாமல் கரைகின்றன, வரைய ஆரம்பித்து கரைய ஆரம்பித்துவிட்ட படம் போல. 

ந்த நகரத்தின் தார்ச்சாலைகளில் அவன் உருண்ட வண்ணம், ஓவியங்களை காண்பித்தும், புதியதாய் வரைந்து காட்டியும், மூடிகொண்டிருக்கிற வாழ்வின் கதவுகளை மட்டும் அந்த கைகளால் திறக்கவே முடியவில்லை.  ஊடாடிக் கொண்டிருந்த பொழுதுகளிலும் மற்றொமொரு இடி விழுந்தது...

வானம் இற்றுப் போகப்போகிற இதே போன்றதொரு கோடைமழையில் அவன் தாய் அங்கே இறந்து போனாள். அளந்து விடக்கூடிய ஒரு தூரத்தினால் அவனும் தாயின் உடலும் பிரிந்து கிடந்தாலும், அவளருகே சென்று சேர அவன் பட்ட பாடு...  நகரத்தின் வெற்றிப்படிகள் ஏறும் கலையார்வம் அவளோடு மறைந்து போனது.  தார்ச்சாலையிலும், நடைபாதைகளிலும் கடவுளர்களோடு பூண்ட நட்பு இதோ இன்று வரை தொடர்கிறது. மேரி, இயேசு, முருகன், சிவன், மால், விநாயகர், ஐயப்பன், பார்வதி.... ஏன், புத்தர் கூட அவனால் அற்புதமாக வரைய முடியும்.

ழை பெரிதும் வலுத்து விட்டது. அந்த நாயும் அவனும் சாத்திய கடையின் தகர மறைவில் ஒண்டிக் கொள்கின்றனர். பரஸ்பரம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. என்றாலும் ஏதோவோர் உறவு அவர்களுக்குள். மழையின் கனத்தோடு கவிந்து கிடந்த இருளில் கழிந்தது இரவு. 'ஏதோ காற்றழுத்த தாழ்வு மண்டலமாம்; மழை இன்னும் 24 மணி நேரம் நீடிக்குமாம்' - காதில் விழுந்த போது அவன் நடுங்கிப் போனான். கையிருப்பு கரைந்து கொண்டிருக்கிறது. குளிர் நடுக்கத்தை குறைக்க முடியவில்லை. விரித்துக் கொண்டிருக்கும் கை கால்களை, என்ன உணர்ந்ததோ தெரியவில்லை, நாய் நக்கிக் கொடுத்தும், உரசியும் உணர்வற்ற முயற்சிக்கிறது. கண் திறந்து பார்க்கும் போது உடலதிர வாலாட்டி அவன் கைகளுக்குள் அணையும் நாயை பார்க்கும் போது, மனம் ஏனோ தாயின் நினைவில் நெகிழ்கிறது. கண்கள் தாமாக மூடுகின்றன.

ன்று மழையுடன் மூன்றாவது நாள். வானம் வெறித்து விட்டிருந்தது. கலங்கிய மேக வண்ணம். கடை வாயிலில் உருண்ட அவனுடல். நகரவும் முடியாமல், தீர்மானித்திருந்த இடத்திற்கு போகவும் விடாமல் பசியும் சுரமும் அவனை உலுக்குகின்றன. நிர்ச்சலனமாய், நிர்ச்சிந்தையாய், பிச்சையெடுத்து பழகியிராத அந்தக் கரங்கள் வரையவாரம்பிக்கின்றன...

பாதாதி கேசம்...கோசல ராமன்... நடுங்குகிற கைகள் இறுகப் பற்றியிருக்கும் சாக்பீஸ் ஒரு தெய்வீகத்தை படைக்கிறது.  தரையில் விரிந்து கொண்டிருந்த இராமனின் உடலில் தோன்றும் பொலிவு - அகன்ற மார்பு, தோல் தாங்கும் வில், உருண்ட தொடைகள், உறுதியான கால்கள், கால்கள்...

காசுகள் அப்போதே உருண்டோடுகின்றன. புன்முறுவல் தவழும் அதரங்கள், அழகிய முகம், கூர் நாசி, அந்தக் கண்கள், அவை, அவை இன்னும் திறக்கப்படவில்லை.

விரிந்து கிடந்த கையின் விரல்களில் வலிவைக் கூட்டி இராமபிரானின் திருமுகக் கண்களைத் திறக்கிறான். முடிந்ததும் அவன் கண்கள் மெல்ல மூடிக் கொள்கின்றன, ஒரு சுகானுபவத்தை ரசிக்கிறவன் மாதிரி, அவன் படைப்பில் அவனே மூழ்கி ஆழமற்ற லயத்தில் புதையுண்டு போவது மாதிரி...


1991 ஆனந்த விகடன் சிறுகதை போட்டிக்காக எழுதியது. 

Saturday, January 1, 2011

அவன்

அவன் முன் நிற்க
காத்திருந்தேன்
நடுவே திரை

நானும் அவனும்
பேசிக்கொள்ள
திரை தடை அல்ல
என்றபோதும்
திரைகள் சடங்குகள்
என அதுவொரு
விளையாட்டு

சுற்றிலும்
மானுட துக்கங்களின்
உச்சங்கள்

நான் காத்திருந்தேன்

திரை விலகியது
உரையாடல் நின்றது

உதிர்ந்தது
உலகின்
துன்பங்கள் எல்லாவற்றிற்குமான
ஒரு துளி கண்ணீர்

Wednesday, December 22, 2010

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 4
17/11/89

பிரிய சரவணா,

உன் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி.   I.C. ஏன் சரியாக எழுதவில்லை? அது ஒன்றும் அவ்வளவு கடினமான பாடம் அல்லவே. எனினும் நீ அதில் தேர்ந்து விடுவாய் என நம்புகிறேன்.  இக்கடிதம் உன்னை அடையும் நேரம் எல்லாப் பரீட்சைகளையும் நல்ல முறையில் எழுதிவிட்டு வீடு சேர்ந்திருப்பாய் என நம்புகிறேன்.

ஹரியின் சித்தப்பாவின் மறைவு மிகவும் வருத்துகிறது. வாழ்வு எவ்வளவு அநித்தியமானது.

யதார்த்தம் வேறு. நம் லட்சிய இலக்கு வேறு; வரையறைகள் வேறு. பொதுமை, பெரும்பான்மை இவையே யதார்த்தம் என்றால் என் யாசகம் யதார்த்தம் அல்ல. "சூழலின் சுக வெம்மை" தேவைப்படுகிறதா? சரவணா! இது சிதை வெம்மையோ, பணிக்குடச் சூடோ அல்ல.  உனது மூச்சில் எனது மூச்சடைக்கும் புழுக்கம். பொறாமை, அறியாமை, கர்வம் இவை இச்சமூகத்தை தீக்கிரையாக்கியுள்ளன. இச்சூழல் வெம்மையா? எனில் எப்பனி தீர்க்க இவ்வெம்மை நாடுகிறாய்.

'ஒரு பானைச் சோற்றுக்கு....' பழமொழி மனித இனத்திற்கு ஒத்து வராது. சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி உலகம். நீ தனி. நான் தனி.  நமது ரசனைகள் ஒத்துப் போகலாம்.  நம் சிந்தனைகள் ஒரே தளத்தில் இறக்கலாம்.  நம் தேவைகள் ஒரே மாதிரி இருக்கலாம்.  எனினும் நான் பார்க்கும் உலகம் தனி. நீ பார்க்கும் உலகம் தனி. நம்மை தனி வர்க்கமாய் காணலாம். வரையறுக்க முடியாது.  நமது வர்க்கத்தின் குணாதிசயமாய் எதையும் நிர்ணயிக்கவும் முடியாது.  இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய எல்லோருமே சிந்தனையாளர்கள். அவர்களது சிந்தனையின் திக்குதான் வேறு.  எனவே விளக்குகளை வைத்து எதையும் நிர்ணயிக்க முடியாது.  எனவேதான் சூழல் மறுத்து, யதார்த்த நிர்பந்தம் வெறுத்து, வாழ்வின் ஏதோ ஒரு திசையில் என் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.

யதார்த்தத்தை ஏற்காததின் காரணம் பயம் அல்ல. இங்கு கற்பிக்கப்பட்டு வரும் யதார்த்தம் முட்டாள்தனமானது. இவர்கள் தங்கள் போக்கில் வாழ்ந்து கொண்டு, யதார்த்த வாழ்க்கை என்று பீற்றிக் கொள்வது வேடிக்கை. இவர்கள் எப்படி வாழ்ந்தாலும் அதுதான் யதார்த்தமா?

'அனைவரையும் அப்படியே ஏற்றுக் கொள்ளத் தெரிய வேண்டும்; பழக வேண்டும்'. உண்மை. அதற்காக இவர்களது முட்டாள்தனத்தையும் கபடத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது.  இவர்களது பாமரத்தனம் என்னைப் பற்றிய தவறான கணிப்பைத் தோற்றுவிக்கிறது என்றால், அது என் நிஜத்தின் தோல்வி. இதை என்னால் ஏற்க முடியாது. இதுவே இச்சமூகத்தின் பெரும்பான்மை.

நான் பொதுனலவாதியல்ல.  இவர்களிடம் போராடி என்னைப் பிரதிபலித்து, ஏதோ ஒரு காலத்தில் என்னைப் பேசுவதற்காய், சிலை வைப்பதற்காய், வெற்றி பெற.  நான் ஓர் உன்னதமான சுயநலமி.  எனக்கு நிகழ்தேதிதான் நிஜம்.  இன்றைய நாள்தான் என் வாழ்வின் அனைத்தும்.  நாளைகள் நிச்சயம் என்றாலும், இன்றைய கணத்தில் நேற்றும் நாளையும் மாயைகளே.  என் நிலைப் பிரக்ஞை என்றும் என்னில் உண்டு.  என் ஜீவாதாரமே அதுதான்.

நான் எதிர்ப்பது இல்லை. விலகிப் போவதுண்டு. வெறுக்கச் செய்து விலக்கி வைப்பதுண்டு.  அந்த வெறுப்பை மீறிய அணுகல் எப்போதாவது ஏற்படுவதுண்டு.  அதுவே எனப்பற்றிய மற்றும் என் புரிதல்களுக்கு வழி வகுக்கும். குறைபாடுகளையும் விகாரங்களையும் (மனதின்) என்னால் புரிந்து கொண்டு விலகி நின்று வேடிக்கை பார்த்து, நேசிக்க முடியும்.  அவற்றை என்னால் மதிக்க முடியாது.

என் குற்றங்களை என்னால் ஒத்துக் கொள்ள முடியும்.  எனக்குள் என்னால் இருமுகம் காட்ட முடியாது, என் சுய கற்பிதங்களால் என் தவறை வெளியில் மறுத்து விளையாடிக் கொள்ளலாம். என்னிடம் மறைக்க முடியாது.  சந்தியில் பல முகம் காட்டுவது நிர்பந்தம்.   வாழ்க்கை. உள்முகத்திற்கு அது வேடிக்கை. பல முகம் காட்டி, உண்மையாக இருக்க முடியுமா? அடிப்படை உண்மையை பாதிக்காமல் எதனை விதமான முகங்களையும் காட்ட முடியும். எனினும், பல முகம் காட்டுதல் கபடம் அல்லவா? ஆம். கபடந்தான். கபடம் இங்கு கட்டாயம். அம்மணமாய் வெளிவரும் நிஜம் அடிபட்டே சாக. கபடம் ஓர் கேடயம். நிஜத்தை விட்டெறிந்து விட்டால், நம் நிர்வாணம் கூட இவர்களுக்கு நாடகமாய்ப் படும்.

பொறுமை முக்கியம். தணலும் தண்மையும் மாறி மாறிச் சூழ்ந்து நிற்க, கனன்று தணியும் பொறுமை அவசியம். உளம் அணைத்து வழிகளிலும் இம்சிக்கப்பட்டும், அழியாமல் அமைதி காட்டும் பொறுமை அவசியம்.  இத்தகு பொறுமையை தவமேற்கொள்ளும்போது அவமானம், துக்கம், புகழ் எல்லாமே அந்நியப்பட்டுப் போகும்.

சரவணா! நானும் நீயும் விளக்குகள் அல்ல. விலகத் துடிக்கும் ஜீவன்கள்.  இன்னும் இச்சமூகத்தில் நாம் விழையும் சிற்றின்பங்கள் ஏராளம். பாலகுமாரன் மிக நன்றாக (significantly) விலகியிருக்கிறான். சுந்தர ராமசாமி, அக்னிபுத்திரன் ஆகியோரும் நல்ல விலக்குகள் அத்தகைய ஒரு தீவிரமான விலகல் தேவை. நாம் விலக்குகள் அல்ல.  நாம் எளிதில் உணர்ச்சி வயப்படுகிறோம். பாலியல் நட்பில் அதீத கவனம் செலுத்துகிறோம். நாம் நம் திசை வரையறுக்கப்படாமல், போகும் திசையை நம் திசையை கற்பித்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

சரவணா! "காலச் சுழற்சியில் காணாமற் போவது" அச்சுழற்சியின் நியாயம்; கட்டாயம்.  களிப்பும், சிலிர்ப்பும், சோர்வும், சோகமும், சுழற்சியின் அத்தியாயங்கள். இதை அனுபவித்து அதன் போக்கிலேயே போவோம்.  சுழலும் சக்கரத்தில் நம்மைப் பிணைத்துச் சுற்ற, நமக்குச் சக்கரமும், சக்கரத்திற்கு நாமும் நித்தியங்கள் (relativity).  இச்சுழற்சி சத்தியம். நாம் சுழவதும் சத்தியம். இதில் அசத்தியமாய் நான் காண்பது ஏதுமில்லை. எனக்காகப் பிறர் வாழ வேண்டாம். நானும் எவர்க்காகவும் வாழ்வதில்லை.  ஆயினும் என்னைப் போருக்க உனது வாழ்வு, எனக்காகத் தான், என்னை சிந்திப்பதாய் தான் அமைய வேண்டும். இதன் நேர்மாறும் நிஜம்.

நேற்றைய உண்மை இன்றைக்குப் பொய்யாகாது. உண்மை என்றைக்குமே உண்மைதான். ஆனால், சில வேளைகளில், உண்மை மறைந்திருக்க, ஒரு சில பொய்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும்.  முற்றிலுமான உண்மை என்றுமே பொய்யாகாது. புவியீர்ப்பு தத்துவம் பொய்யாகுமா? இற்றைய கணத்தில் நாம் உண்மை என்று கற்பிதப் படுத்திக் கொண்டிருக்கும் எந்த உண்மையான உண்மையும் என்றுமே உண்மைதான்.

----------பற்றி நான் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவும் விடவில்லை. புரிந்து கொள்ள அனுமதிக்காதது கபடமில்ல.  ஒரு விழைவு.  சிற்றின்பம். கொஞ்சம் sadism  கலந்தது. நான் அதீதமாய் கற்பனை செய்யப்பட்டு  விடுவேனோ என்ற பயம். என் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில தவறான புரிவுகளின் விளைவுகள் இன்னும் என்னைத் தண்டித்துக் கொண்டுள்ளன. தவறு செய்யாமலே தண்டிக்கப்படுகிறேன். அந்த தண்டனை உணர்த்தும் எச்சரிக்கை இது.  --------இடம் நிறைய பேச வேண்டும். என் நிலை தெளிவாக. நான் தெளிய.

சென்ற ஞாயிற்றுகிழமை சுருளி அருவிக்குச் சென்றோம். லேசான சாறல் வேறு.  நண்பர்களாக ஆறு பேர். சரியான குளியல். அதன்பின் இதுவரை சென்றிராத ஒரு பாதையில் சென்ற போது, அருமையான ஒரு இடம் அமைந்தது. வளைந்து செல்லும் ஓடை. சுற்றிலும் அடர்த்தியான மரங்கள். அவற்றைக் கிழித்து உள்வரும் கிரணக் கீற்றுகள். ஓடைக்கரையில் வழுவழுப்பான சரளைக் கற்கள்.  ஓடையின் நடுவே ஆங்காங்கே பாறைகள். அதில் ஒரு பெரிய பாறையின் நடுவில் அமர்ந்து கொண்டு celebrate பண்ணிவிட்டு, ஒரே பாட்டும் கவிதையும் தான். மிகவும் நன்றாக இருந்தது.

இங்கு நசீமும் (Loyola) அவனது தோழர்களும் வந்திருக்கிறார்கள்.  அவர்களை கவனித்துக் கொள்வதில் நேரம் போகிறது.

மற்றபடி வேறு விசேஷமில்லை.

அன்புடன்,
ரமேஷா 

Sunday, December 12, 2010

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 3

உத்தமபாளையம்


அன்புள்ள சரவணனுக்கு,

நலம், நலமே விளைக! நலமே விழைக!

உன் வாழ்த்து அட்டை கிடைத்தது. மிகவும் மகிழ்ந்தேன். மிகவும் ரசித்தேன்.

நீ தீபாவளி எப்படிக் கொண்டாடினாய்? தீபாவளியன்று உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  இந்த முறை தீபாவளி பழைய உற்சாகத்துடன் இல்லை. பால்ய காலத்து நினைவுகளில்தான் கொஞ்சம் குளிர் காய்ந்து கொண்டேன். பெரும்பாலான நண்பர்களால் ஊருக்கு வர முடியவில்லை.  மேலும், கலவரங்களால் சகஜ வாழ்க்கை அக்கம் பக்கத்துக்கு கிராமங்களில் பெரிதும் பாதிக்கபட்டிருந்ததால் தீபாவளியே சோபையிழந்து கிடந்தது. எனது பிறந்த தினத்தைப் போலவே தீபாவளியையும் எளிமையாக, மிக அமைதியான முறையில் கொண்டாடினேன்.  எனது நெருக்கமான நண்பர்களான பகவதிமுத்துவும், ஜெகனும் என் அருகில் இருந்தது சற்று உற்சாகம் ஊட்டியது.  உனது சேய்மை கொஞ்சம் உறுத்தியது உண்மை.

இங்கு தற்போது நிலவும் காலநிலை. நண்பா! நான் இதில் உன்னை விடுத்துச் சுகம் சுகிக்கும் சுயநலமி ஆகிவிட்டேன். கடந்த பருவநிலையில் பெய்த பெருமழை போய், தற்போது மேகங்கள் கவிந்து மோடம் போட்டு திடீரென்று, "சிரித்துப் போன கீதாவாய்" 'சடசடத்து', கையில் பிடிக்குமுன் காணாமல் போகும் சிறுமழையுடன். எனினும் தோழா! எனைப் புரிந்து கொண்டு சுகமூட்டும் உன் சேய்மையில் மனம் வலிப்பது நிஜம். இதே கால நிலை. அடுத்த மாதமே மாறும் என்பது எனக்குத் தெரியும். சூரியனை நாடுகடத்தி குளிரும் மார்கழிப் பணியில் மௌனம் சாதிக்கும் என் இரவுகள் இனிதான் வரவிருக்கின்றன.

சரி சரி! நீ எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறாய்? நண்பர் ஹரி, எப்படி இருக்கிறார்? மற்றும் நம் பிற நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? எல்லாம் எழுது. உடனடியாக எழுது.

சரவணா! தற்போது என்னிடம் நல்லதாக நான்கு ஆய்வுக்கட்டுரைகள் - புத்தங்கங்கள் இருக்கின்றன. அதைதான் தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.  முதல் புத்தகம் க.நா.சு. எழுதியது.

எங்களது 'பட்டமளிப்பு விழ' என்றைக்கு நடக்கவுள்ளது என்பது பற்றிய சரியான விபரம் தெரிந்தால் எழுது.

செல்வி. விஜயலட்சுமி அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு என் அன்பைத் தெரிவி.  தம்பி எப்படி படிக்கிறான்? அவனையும் கேட்டதாகச் சொல். ________ என்ன ஆயிற்று என எனக்கே தெரியவில்லை. .....................

சரி விடு.  நீ என்னென்ன சினிமா பார்த்தாய்? எதாவது நல்ல படம்? தீபாவளியன்று அழியாத கோலங்கள் பார்த்திருப்பாய் என நம்புகிறேன். ரொம்ப top இல்ல? இன்றைக்கு வெற்றிகரமாக 6 - வது தடவையாக 'அபூர்வ சகோதரர்கள்' பார்த்தேன். இன்னும் 4 - தடவை (குறைந்தது) பார்ப்பேன். இந்தத் தியேட்டர்களில் படம் பார்பதே தேவசுகம். 'சோலைக்குயில்' பார்த்தேன்.

மற்றபடி இங்கு சொல்லத்தக்க விஷயங்கள் ஏதுமில்லை.

கொஞ்சம் சீக்கிரம் பதில் போடு.

அன்புடன்,
ரமேஷ் சண்முகம்


மனித மரம்


விழுது போட்டு,
அடிமரம் நீங்க  யத்தனிக்க,
அடி நழுவிப் போகும்.
அந்தரத்தில் கைவீசும்
விழுது.
அரிக்கப்பட்ட அடிமரம்
காற்று நினைந்து
கவலையுறும்.
உள்ளுள் கிளை ஒன்று
தளிர்விட்டு
புது விழுது பரப்பப்
புறப்பட்டு போகும் -
- அடியின் நித்தியம்
  தெரியாது.

ஆரங்கள்

நான், நீ, ஹரி நம்மூவரிடயேயுள்ள உறவு நட்பென்னும் பெரும் வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்கிறது.  அச்சாய், மிக மெல்லிய, கண்ணிற்ககப்படாத மிக நுண்ணிய புரிதலைக் கொண்டு, யாரும் தகர்க்கவோ, தலையிடவோ முடியாது சுழலும் இவ்வட்டத்திற்குள் நாம் ஆரங்களாய் அடைபட்டு கிடக்கிறோம்; ஓருடலோடு உடல் தழுவி, ஓருயிரோடு உயிர் பொருந்தி, கைகோர்த்து, இமை சேர்த்து மகிழ்வாய் சிறை கிடக்கிறோம்; சிறையே சுகம்; யாரும் வெளிவர விரும்பாத, இயலாத, கூடாத ஒரு வினோத சிறை.

யாருக்காகவும் வட்டத்தின் சுழற்சி நின்றுவிடாதபடி, இயக்க விதிகளுக்கப்பாற்பட்டு, வட்டம் சுழகிறது; சுழலும். தன் அச்சில் வெவ்வேறு வித படைப்புகளை சமைத்துக் கொண்டு, புரிதல் மேலும் வலுப்பட, அச்சு நிமிரும். அச்சின் இயைவில், சக்கரம் வளியாய் சுழலும்; படைப்பு எண்ணிறக்கும், அழகுறும். இதில் ஆரங்களற்ற சக்கரமோ, சக்கரத்திலினையாத ஆரண்களோ மதிப்பற்றவை; பயனிழப்பவை... மறந்து விடு... நாம் ஒரே சக்கரத்தின் ஆரங்கள்.
- 12/11/88

இறந்த ஒளியோடு

ஒளி

பிரபஞ்சத்தை
உய்விக்கின்ற ஒளி
விண்ணிலிருந்து
வெள்ளமாய் காற்றாய்
துகளாய் நுரையாய்
நுரைத்து வழிந்து
மூச்சுத் திணற
ஆக்கிரமிக்கிற ஒளி
சிகப்பாய் நீளமாய்
பச்சையாய் மஞ்சளாய்
நிறம்பிரிகிற ஒளி

எப்படியிருக்கும்?

தாயின் முகமும்
தாய்மொழி வரியும்
எப்படியிருக்கும்?

இருள்
எங்கும் கருமை
அதுவொன்றே நிரந்தரம்
ஒலியாலே
வாழப் பழகினோம்
இரவிற்கூட
கனவற்ற மலட்டு
நித்திரைகள்

கருவறையின்
இளஞ்சூட்டில்
தாயின் கனவோடு
கண்மூடி
இருள்விட்டுப் பிறந்து
இருளோடு வாழ்வோம்

அந்திம இருட்டையும்
சுவைபிரித்து
புதைகுழியின் இருளடங்கி
ஒளியோடு கலந்து மறைவோம்

ஒளி
அது எப்படியிருக்கும்?
- 11/08/90

Saturday, December 11, 2010

கி. பி. 2350

அம்மா இன்று வரும் நேரம் 11:10:33:27 மில்லி செகண்டுகள்.

இந்த கதையை கேட்கும் நீங்கள் என்ன 2011 இல் வாழ்கிறீர்கள் இல்லையா?

வீட்டின் நிலவறையில் வந்து சேரும் நிலத்தடி குழாய் வாகனத்தில் இருந்து துல்லியமான நேரத்திற்கு, இதோ அம்மா வந்து விட்டாள்.

'என்னம்மா, அப்பா வரலியா?" என்று நான் கேட்கவில்லை. எங்கள் காலத்தில் single parent lineage எனப்படும் ஒற்றை பெற்றோர் முறை வந்து விட்டது. ஆணோ பெண்ணோ திருமணம் தேவையில்லாமல், தன் ஸ்டெம் செல்லில் இருந்தே குழந்தைகளை உருவாக்கி வளர்த்து கொள்வது. எத்தனை வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மனைவி இல்லாமல்.

அம்மா, "united tps ல தான் வரலாம்னு நெனெச்சேன். இன்னும் சிஸ்டம் சரியாகலன்னு ரிபோர்ட்ஸ்" என்றாள்.

"சரிம்மா, நீ போய் ரெஸ்ட் எடு" என்றேன்.

TPS என்பது டெலிபோர்டேஷன் வழியாக ஆட்களை போட்டான் துகள்களாக உருமாற்றி இழையிலி வழியாக எத்தனை தூரத்திற்கும் அனுப்பி அங்கு மீண்டும் ஒருசேர்த்து கொள்வது. 99% சரியாக இருந்தாலும், ஓரிரண்டு இடங்களில் திருப்பி சேர்க்கும் போது, கைவிரல்களோ காது மூக்கோ குறைந்து விடுகிறது. அல்லது முதுகில் கூடுதலாக ஏதாவது.

இதெல்லாம் அனுபவித்து கொண்டு இதையெல்லாம் உங்களுக்கு விவரித்து கொண்டு இருப்பதிலிருந்து உங்கள் காலத்து விஷயங்கள் ஒன்றும் எனக்கு தெரியாது என்று எண்ணி விடாதீர்கள். நேரம் கிடைக்கும் போது அந்தக் காலத்து இலக்கியங்கள், கணினி கட்டுரைகள் (கொடுமை!), மனித உணர்ச்சிகள், உளவியல் என்று கலந்து கட்டி படிப்பதுண்டு.

அம்மா உள்ளே குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருப்பது கேட்டது. ஒரு பெருமூச்சோடு நாளை செய்ய விருக்கும் முக்கியமான அறுவை சிகிச்சைக்கான குறிப்புகளை புரட்டினேன்.


பெரியவளுக்கு நாளைக்கு லோபோக்டோமி எனப்படும் மூளை மாற்று சிகிச்சை. அம்மாவுக்கு துளி கூட சம்மதமில்லாமல் தான் இதை செய்ய போகிறேன்.

றுநாள் காலை.

அம்மா தூக்கி வைத்த முகத்தோடு என்னெதிரே வந்து நின்றாள்.

"என்னம்மா?" என்றேன்.

"இது அவசியமாடா?'

"கட்டாயம். நீயே பார்த்தல்ல. உன்கூட எப்படி ஆடிக்கிட்டு பாடிக்கிட்டு. சின்னவ எப்படி இருக்கா. எல்லாம் extreme".

"எதுடா extreme? அதுதான் இயற்கை. அந்தகாலத்தில இப்படித்தான் பிள்ளைகள்லாம் இருக்கணம்னு ஆசைப்படுவோம். நீ என்னடானா. வேண்டாண்டா".

"நீ சும்மா இரும்மா. உனக்கு ஒன்னும் தெரியாது. society - ல ஏத்துக்க மாட்டான்".

"தயவு செய்து நான் சொல்றத கேளுடா".

"நீயேன் இதுக்கு இவ்வளவு அதிகமா react பண்ற? நீயே சரியில்லையே. உனக்கும் ஒரு ஆபரேஷன் பண்ணனும்னு நினைக்கிறேன்".

அம்மா பேசாமல் கொண்டு வந்த குளிர் பானத்தை வைத்து விட்டு என் முகத்தையே பார்த்தபடி நின்றாள் .

ஆயுதங்களை தயார் செய்து கொண்டே பானத்தை பருகினேன். கோப்பையை மேசையின் மேல் வைப்பதற்குள்ளாகவே கால் தரையிலிருந்து நழுவியது. மற்றொரு கையில் பிடித்திருந்த கத்தி பெரும் சத்தத்தோடு கீழே விழுந்தது.

கண்கள் மூடி நினைவு தப்புவதற்குமுன், அம்மா குனிந்து என்னைப் புரட்டி, கழுத்தின் பின்புறம் எதையோ துண்டிப்பது கேட்டது.

Pandit Venkatesh Kumar and Raag Hameer