நல்லூழ்
நாடி வந்தன
நல்லனவெல்லாம்
ஆசிரியனும் ஞானமும்
இரசனையும் நட்பும்
இசையும் நூல்களும்
பயணங்களும் அனுபவங்களும்
தேடிவந்தமைகின்றன
அறியாமலேதும்
கிடைக்கின்றபோதும்
அற்புதமாய் உன்னதமாய்
அமையப்பெறுவது
நல்லூழ் அன்றி
வேறென்ன?
வேறுரு
மிக மெல்லிய மென்தென்றலின்
கடந்துபோய்விடும்
ஒரு வருடலில் பொதிந்திருக்கிறது
கரைப்பதும்
கரைந்துகொள்ள இசைவதுமான
முடிவு
சலசலத்து விரையும் ஆற்றின் போக்கில்
ஓரிடம் சிக்குண்டு
மேனியுரு மாறும் கல்லின்
போக்கற்ற தீர்வில்
அமைந்திருக்கிறது
நகர்ந்து செல்வதும்
நிலைகொண்டு எதிர்நிற்பதற்குமான
தெளிவு
முகம்வருடி மெய்தீண்டி
காலடியில் அறுந்துவீழும்
மலரின்
அழகிய அநித்தியத்தில்
மறைந்திருக்கிறது
பயன்பெறுவதற்கும்
பயன்மட்டும் படுவதற்குமுண்டான
முரண்
மேன்மை
சிற்றலைகள் வந்துவந்து
கால்கள் அலப்ப
மேவிக்கிடக்கும் மணற்பரல்களில்
ஒரு சிப்பியைத் தேடி
மிகமெதுவே காதங்கள் கடக்கும்
இந்த வாழ்க்கை
ஏனோ விருப்பமாகவேயிருக்கிறது
தரையூரும் புழுவைத் தவிர்க்க
கால்களும் கைகளும் தேய
சைக்கிளினின்று தரைவிழுவதிலும்
தயக்கமொன்றுமில்லை
நுண்ணுணர்வுகள் மென்ரசனைகள்
எத்தனையிருப்பினும்
இங்கிருந்து எதையும்
எதிர்நோக்காதிருத்தல்
மேலான உணர்வு
மென்மையான ரசனை